Category Archives: ஒளவைக் குறள்

மின் – நூல் – ஒளவைக் குறள்

ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை. 50 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.

ஒளவைக் குறள் – (301-310)

3. தன்பால்

************
31. உயர்ஞான தரிசனம் (301-310)
***********************************
301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.

சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும்.

302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும்.

303. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.

செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சூரிய கலையைச் சந்திரனிடம் சேர்க்க இடறொன்றும் வராது.

304. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.

வளர்பிறை வியாழக் கிழமைகளில் சந்திரகலையை சூரியகலையிலும், தேய்பிறை வியாழக் கிழமைகளில் சூரியகலையைச் சந்திரகலையுடனும் சேர்க்கவேண்டும். இவ்விரண்டு ஞானவினையும் வளர்பிறையாம்.

305. வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.

சனிக்கிழமைகளில் மட்டும் இரவும் பகலும் சூரியகலையைப் பிரித்து இடப்பக்கம் பாய்ச்சும்போது, அபானனையும் சேர்த்துப் பாச்சுதல் வேண்டும்.

306. இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.

குண்டலியின் மத்தியில் உதிக்கும் பிராணாபான வாயுக்கள், பகலில் வலத்திலும், இரவில் இடப் பக்கத்திலும் உலாவிவரும்.

307. அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.

அரசன் தன் உருவத்தை வெளிப்படுத்தாது நாட்டை அரசாளுவது போலத்தான், ஞானவினை புரிதலும்.

308. கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.

படிக்காத (ஞானம் புரியாத) மூடர்கள் திருவுருவை அடையவேண்டி, புண்ணிய காரியங்கள் என்று சொல்லப்படும் காரியங்களைச் செய்தால், இறைப் பதத்தை அடைய இயலாது. ஞானவினையில் முழுவதும்  சலனமில்லது ஈடுபட்டால்தான் இறைப்பதம் கிட்டும்.

309. திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.

ஞானக் குறள் – திருவருட்பாலின் உட்கருத்தை அறிந்து, தெளியும் நிலையில், வழிநடாத்த ஞானாசிரியன் நம்மைத்தேடி வருவான்.

310. கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.

ஞான நூல்களைப் படிப்பதாலும், கேட்பதாலும், ஞான எண்ணமுதித்து, ஞானவினை செய்வானேயாகில், வீடுபேறு என்றழைக்கப்படும் சிவத்தையடைவான்.

**********************************
இறையருளால் ஞான குறள் முற்றிற்று
**********************************

ஒளவைக் குறள் – (291-300)

3. தன்பால்

*************
30. துரிய தரிசனம்  (291-300)
*******************************
291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள்.

முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன.

292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.

சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக.

திருமந்திரம்:

“குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்திபேச் சற்று
வுருகிட என்னையங் குய்யக்கொண் டானே.”

உயிர்முச்சொரூபம் = தூலம், சூக்குமம், காரணம்.
அரிய பொருள் = உடல், பொருள், ஆவி.
முத்திரையாக = காணிக்கையாக.
பேச்சற்று = மவுனமாய். குரவன் = ஞானகுரு.

சிவகுருவாம் இறைவன், உயிருடைய பருமை(தூலம்), நுண்மை(சூக்குமம்), முன்மை(காரணம்) எனும் மூவகை உடல்களையும் இரவலை ஏற்பதுபோல் தன்னுடைமை ஆக்கிக்கொள்ளுகிறான். உடல், பொருள், ஆவி ஆகியவைகளைக் காணிக்கையாகக் கொள்கிறான். சிவத்திருவடியாம் நந்தி என்னை உய்யக் கொண்டான். அதனால் உள்ளமுருகி இன்பவெள்ளம் பெருகியது.

293. மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.

சந்திரனோடு அக்கினி ஒன்றாய்க் கலந்து வெளிப்படில் சூரியான் தானாக வெளிப்படுவான்.

294. மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.

சூரியன் அக்கினியுடன் கலந்துவந்து சந்திரனுடன் ஒடுங்கில் அதுவே பதினாறு கலைகளோடு கூடிய பருவமாம்.

திருமந்திரம்:

“அங்கி மதிகூட வாகுங் கதிரொளி
யங்கி கதிர்கூட வாகு மதியொளி
யங்கி சிவத்தினிற் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே.”

மூலத்தீயும் திங்களின் கதிரும் சேரப் பகலவன் கதிரொளி விளங்கும். மூலத்தீயும் கதிரவன் கதிரும் சேர்ந்தவிடத்து மதியொளி திகழும். மூலத்தீ திருவட் உணர்வோடு கலந்தக்கால் விண்மீனை ஒத்த ஆவிகளின் ஒருநிலைத் தங்குதல் ஏற்படும். அந்நிலையே எல்லாம் ஆகும் நிலையாம்.