Category Archives: சிவ வாக்கியம்

சிவ வாக்கியம் – மின்நூல்

சிவ வாக்கியம் மின்நூல்
*****************************
கடந்த நான்கு மாதமாகத் தொடராய் வந்த சிவ வாக்கியம் என்னும் சிவவாக்கியர் பாடல்கள் இத்துடன் இனிதே நிறைவுற்றது. தெளிவுரையை விரிவாக எழுத ஆவல். இருப்பினும், உடல் நலன் கருதியும், போதிய நேரமின்மையாலும் சுருக்கமாக, எனக்குத் தெரிந்தவரை தெளிவுரை எழுதியுள்ளேன். பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் யான் எழுதியதில் பிழை இருப்பின் பொறுக்க வேண்டும்.

சிவ வாக்கியத்தைத் தெளிவுரையுடன் மின்நூலாக்கித் தந்துள்ளேன். தரவிறக்கம் செய்ய, படத்தைச் சொடுக்குங்கள்.

சிவ வாக்கியம் – 520

சிவவாக்கியர் பாடல்கள் – 520                                ***********************************************

520.சிவாயவசி என்னவும் செபிக்கயிச் சகமெலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவான மாளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ யாகுமே.

 

சிவாய வசி என்று ஓதித் தவமிருக்க, இந்த உலகமெல்லாம் நம் வசம் ஆகும்; சர்வ சித்திகளும் கிட்டும்; நம் உடலில் உள்ள ஆகாயத் தலத்தில் நடனமாடும் ஈசனைச் சேர்ந்து அவ்வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகும். அதுவே ஈசனாம் சோதியாகும்.

சிவ வாக்கியம் – 519

சிவவாக்கியர் பாடல்கள் – 519                                 ***********************************************

519.மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊரெங்கும் சுற்றிதிண்டிக்கே யலைபவர்
இனமதில் பலர்கள்வையும் இன்பமற்ற பாவிகள்.

 

பெரும்பாலும் இவ்வுலகில் வாழுவோர், ஈசனை அடைய வேண்டும் என்னும் தளர்வு இல்லாத திட நம்பிக்கை இல்லாத மடமை பொருந்திய மாடுகளைப் போன்று வாழ்ந்து பிணமாகப் போகும் மனிதர்கள். கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி, யாரும் அறியாதவண்ணம் சேமித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி மடிந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள். இவர்களின் இனத்திலேயே பலர் வசைபாடும் இன்பமில்லாத பாவிகள்.