Category Archives: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-1

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்
கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் – அந்தோ

திருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்பு

தருமால் பகழிக்கூத் தன்.

திருமாது = இலக்குமி
மால் = அழகு, பெருமை

இலக்குமியைத் தன் மார்பில் சுமந்திருக்கும் திருமாலே, அருச்சுனனுக்குத் தன் அன்பை ஈந்து தேர் ஓட்டிய பெருமாளே! பகழிக்கூத்தனாகிய நான், திருச் செந்தூரில் வாழும் செந்தமிழுக்கு வாய்த்த கந்தப்பெருமானுக்குப் பிள்ளைத் தமிழ் எழுதியுள்ளேன்.

அவையடக்கம்

அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர்
எந்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார் – முத்தி

புரக்குமரன் தந்த கந்தன் பூணணிமுந் நான்கு

கரக்குமரன் பிள்ளைக் கவி.

புன்சொல் = எளிய சொல்
அத்தனையும் = முழுமையும்
முத்திபுரக்குமரன் தந்த = முத்திதரும் அரன் தந்த

முத்திதரும் அரன் பெற்றவன் கந்தன்; அணிகலன்கள் பூண்ட பன்னிருகரத்தையுடையவன் குமரன். இத்தகைய குமரன்மீது யான் எழுதிய பிள்ளைத் தமிழ் முழுமையும் எளிமையான சொற்களாயிருப்பினும், பாவேந்தர்கள் என்னை எள்ளிநகையாது கண்டு மகிழ்வர்.

நூற்பயன்

மருநாள் மலர்ப்பொழில் உடுத்ததட மெங்கும் அலை
வாய்கொழித் தெறியுமுத்தை

வண்டலிடும் எக்கர்புடை சூழ்திருச் செந்தில்வரு

மயில்வா கனக்கடவுளெங்

மரு = மணம்
நாள் மலர்ப்பொழில் = அன்றலர்ந்த பூக்களையுடைய சோலை
தடம் = தடாகம், குளம்; இங்கே கடல் எனக் கொள்ளல் வேண்டும்.
வண்டல் இடும் = மகளிர் விளையாடும்
எக்கர் = மணல்மேடு
வாகனம் = ஊர்தி

மணம்வீசும் அன்றலர்ந்த பூக்களையுடைய சோலையை உடுத்த அலைவீசும் கடல்; அலையினால் அடித்துக் கரையில் எறியப்பட்ட முத்துக்கள் பதிக்கப்பட்ட மகளிர் விளையாடும் மணல்மேடு; இவ்வாறிருக்கும் இடமே, மயில் வாகனத்தில் வரும் எங்கள் கடவுள் முருகப் பெருமான் இருக்குமிடம்.

குருநாதன் ஒரு தெய்வ யானைதன் பாகன்
குறக்கொடிக் குந்தழைசிறைக்

கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்

குறும்பிறை முடிக்கும்பிரான்

தெய்வ யானைதன் பாகன் = தெய்வயானையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.
குறக்கொடி = குறக்குலத்தில் பிறந்த வள்ளியம்மை
குறும்பிறை = மூன்றாம் பிறைச் சந்திரன்
தழை = தளிர்
சிறை = அழகுள்ளவள்

அவன் யார்? குருநாதன். அப்பனாகிய அரனுக்கே பிரணவத்திற்குப் பொருள் சொல்லிய குருநாதன். தெய்வயானையையும், குறக்குலத்தில் பிறந்த தளிர் பருவத்து அழகுடைய வள்ளியம்மையையும் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.
கோழிக்கொடி உடையோன்; அவன் குமாரன்; பீடுடையவன்; மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடியவன்; எப்பொருட்கும் இறையோன்.

இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்
எங்குமுட் டாதளக்கும்

இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்

எம்பிரான் இனிய பிள்ளைத்

நாழி = நான்கு உழக்கு அளவு
அறம் = தரும வகைகள்
முட்டாது = குறையாவண்ணம்

எட்டு உழக்கு நெல்லைக்கொண்டு முப்பத்தி இரண்டு வகை அறமும் எங்கும் குறைவுறாவண்ணம் படி அளக்கும் அன்னை உமையவளின் திருமுலைப்பாலுண்டு(ஞானப்பால்) அதனால் ஞானம் எப்பொழுதும் பெருகும் எம்பிரானின் இனிய பிள்ளைத்தமிழ்.

திருநாமம் எழுதுவார் கற்பார் படிப்பார்
செகம்பொது அறப்புரந்து

தேவாதி தேவரும் பரவுசா யுச்சியம்

சிவபதத் தெய்துவாரே.

நாமம் = பெயர்
பொது அறப்புரந்து = தனக்கே உரிமையானதாய்க் காத்து
பரவு = துதி
சாயுச்சியம் = இறையோடு இரண்டறக் கலப்பது.

உலகைத் தனக்கே உரிமையானதாய்க் காத்துவரும் குமரனின் திருநாமத்தை எழுதுபவர், கற்பவர், படிப்பவர் யாவரும், தேவாதி தேவரும் துதித்து வேண்டும் சாயுச்சிய பதவியாம் சிவபதம் எய்துவார்கள்.

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-முகவுரை

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
*********************************************
பிள்ளைத்தமிழ் இருவகையாம்.

இவையாவன: ஆண்பற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.

பிள்ளைத்தமிழில் காப்பு முதல் அம்புலிப்பருவம் ஈறாக ஏழு பருவங்களும் இருபாலருக்கும் ஒன்றே.

மற்ற மூன்று பருவங்கள் வேறுபடும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் – அம்மானை, நீராடல், ஊசல்

பிள்ளைப்பருவம் களங்கமற்ற நல்லெண்ணத்தையும் அவ்வெண்ணத்தின் வழியே களங்கமில்லா தூய அன்பையும் விளைவிப்பதாம். இவ்வரிய குணங்களைப் பெற விரும்புவோர் உள்ளத்தைப் பிள்ளத்தமிழ்ப் பாட்டுக்களில் செலுத்தல்வேண்டும்.

பருவங்கள்:

காப்புப் பருவம் – இரண்டாம் மாதத்தில் பிள்ளையைக் காக்கவெனத் திருமால், சிவபெருமான், உமையவள், கணபதி, கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் ஆகியோர்மீது பாடப்படுவது.

செங்கீரைப்பருவம் – செங்கீரை ஆடும் பருவம். ஐந்தாம் திங்களில், ஒரு காலை மடக்கி, ஒருகாலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலை நிமிர்த்தி, முகமாட்டும் பருவம்.

தாலப்பருவம் – ஏழாம் திங்களில் தாலாட்டைக் கேட்கும் பருவம். தாலாட்டு எனில் ஒருவகை நாவசைப்பு. தாலாட்டுதான் தால் எனக் குறுகியது.

சப்பாணிப்பருவம் – ஒன்பதாம் திங்களில், இரு கைகளையும் ஒருங்கு சேர்த்துக் கைகொட்டும் பருவம்.

முத்தப்பருவம் – பதினோராம் திங்களில் தாய்தந்தையர் தங்களுக்கு முத்தம் தருமாறு இறைஞ்சும் பருவம்.

வருகைப்பருவம் – பதின்மூன்றாந் திங்களில், நடக்க முயலும் குழந்தையைத் தம்பால் நடந்துவருமாறு பெற்றோர் வேண்டுதல்.

அம்புலிப்பருவம் – பதினைந்தாம் திங்களில், குழந்தையுடன் விளையாட அம்புலியை அழைக்கும் பருவம்.

சிற்றிற் பருவம் – பதினேழாம் திங்களில், சிறுமியர் சிறுவீடு கட்டி விளையாட அதனைச் சிறுவர்கள் தம் காலால் அழிக்கும் பருவம்.

சிறுபறப் பருவம் – பத்தொன்பதாம் திங்களில், குழந்தை சிறுபறை கொட்டி விளையாடும் பருவம்.

சிறுதேர்ப் பருவம் – இருபத்தொன்றாம் திங்களில், சிறுதேர் உருட்டி விளையாடும் பருவம்.

இந்நுலின் ஆசிரியர் பகழிக்கூத்தர். செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவ குலத்தில் பிறந்தவர். தந்தை பெயர் தர்ப்பாதனர்.
பகழிக்கூத்தர் கடும் வயிற்று வலியில் துடிக்கும்பொழுது, திருச்செந்தூர் முருகனை நோக்கி, “வலி தீர்; பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” என்றாராம்.

அப்பன் அருளால் வலி தீர்ந்தது. கூத்தரும் முருகன் சந்நிதியில், புலவர்கள், அடியார்கள், முக்காணிகள் எனப்படும் திரிசுந்தரர்கள் கூடியுள்ள அவையில் இப்பிள்ளைத் தமிழைப் பாடினார். அவையோ, கூத்தரைப் பெருமைப்படுத்தாது விட்டுவிட்டது. கூத்தரும் பெரிதுபடுத்தாது, தன்னிருப்பிடமேகித் தன் வேலைகளைக் கவனிக்கலானார்.

அவையோருக்குக் கூத்தரின் பெருமையுணர்த்த, முருகன் தன் மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தை இரவில் கூத்தரின் படுக்கையில் விட்டுச் சென்றுவிட்டார். விடியலில் மாணிக்கப் பதக்கத்தைத் தேடி, அது கூத்தரிடம் உள்ளதெனத் தெரிந்து, தங்கள் தவறுணர்ந்து அவை கூத்தரைப் பெருமைப்படுத்தியது. சரித்திரம் இவ்வளவுதான் கிட்டியது.

இனி பிள்ளைத்தமிழ்…