Category Archives: ஞான வெட்டியான் 1500

ஞான வெட்டியான் 1500 – 105

105.சிங்காரமான வரண்மனை யஞ்சையுஞ்

..சிற்றம்பலத்துடன் பேரம்பலங்களுங்

கங்கைநதிகளுந் தொண்ணூற்றறுவர்

..கலந்தேயிருக்குங் கனகசபையெனும்

அங்கங் குறைவுபடா மலரண்மனை

..அச்சூடுகட்டி யேமச்சூடு ஆலயம்

எங்கும் பிரகாசிக்கு மிந்திரியவீடு

..இடைபிங்கலை சுழியே காக்ஷரத்தினால்.

 

விநோதமான ஐம்பூதங்களாலாகிய ஐந்து அரண்மனைகளையும், சிற்றம்பலம் பேரம்பலங்களையும், கங்கை முதலிய நதிகளையும், தத்துவங்கள் தொண்ணூற்றாறும் சேர்ந்திருக்கின்ற கனகசபையென்னும் அங்கம் குறைவில்லா அரண்மனையும், ஆங்கே உள்ள சுத்த சூடாகிய பிரம அக்கினியைக் கட்டி எங்கும் ஒளிவிடும் யேமனைச் சுடும் ஆலயம்தன்னில் விளங்குகின்ற இந்திரிய வீட்டை, இடைகலை, பிங்கலை, சுழிமுனைகளும் சேர்ந்த ஏகாட்சரத்தினால் கட்டினவன் ஆண்டே.

ஞான வெட்டியான் 1500 – 104

104.நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே

……நாடியட்டதிசையு நலமாகப் பூட்டியே

வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே

……வேடிக்கையாகவு நாடிநரம்பாலே

காட்டியசுக்கில சுரோணிதத்தாலே கருவி

……யெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில்

ஆட்டியமுட்டுமுடக்குக்கணுவுக ளாக்கைப்பலப்பட

……நாக்குவுண்ணாக்குடன்.

தசவாயு எனப்படும் 10 நாடிகளை ஒன்று சேர்த்து எட்டு திசைகளிலும் கட்டி, அப்படிக் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒன்பது வாசல்களையும் உண்டாக்கி வேடிக்கையாக நாடிநரம்பாலும், சுக்கில சுரோணிதத்தாலும் உண்டாக்கப்பட்ட ஐம்பொறிகளாகிய கருவிகரணாதிகள் சூழ, ஆட்டுவதற்கு முடக்கு, கணுவுகள், நாக்கு, உண்ணாக்குடனே இவ்வுடலை(ஆக்கையை) உண்டாக்கி……..

 

ஞான வெட்டியான் 1500 – 103

103.நாலு முழத்தினுங் காலை வளர்த்தியே

…….நாட்டியே சக்கரம் பூட்டியே வைத்துடன்

மேலு மீரைந்துடன் தாது வினாடியால்

…….வீட்டுக்கு ஆக்கையைப் பூட்டி வரிந்தியே

மாலு நடுவணை காலு மடியனும்

…….பாலு மதிவளர் மேலுஞ் சுடரினால்

மூல வன்னிச் சுழிமூவ ரிருப்பிடம்

…….வாலை குண்டலி தன்மாளிகை யாச்சுது.

சக்கு கண்

அரம் கதவு

மால் கொட்டில், திருமால், வீடு

நான்கு முழம் வரைக்கும் காலை நீட்டி நட்டு, அதற்கு மேல் சக்கரம் ஒன்று வைத்து, பத்து நாடியினால் ஆக்கையாகிய வீட்டை வரிந்து கட்டி மால் நடுவணையாகவும், கால் அடிப்பாகமாகவும் சந்திர, சூரிய, அக்கினி ஆகியோரின் இருப்பிடமாம் மூலவன்னிச் சுழியே வாலை குண்டலிக்கு இருப்பிடமுமான மாளிகை ஆச்சு.

ஞானக் குறள்
***********************

எழுபத் தீராயிர நாடி யவற்றுள்

முழுபத்து நாடி முதல்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.

நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்க்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

 

தலயில்

7,000

வலது காதில்

1,500

இடது காதில்

1,500

வலது கண்ணில்

2,000

இடது கண்ணில்

2,000

மூக்கில்

3,330

பிடரியில்

1,000

கண்டத்தில்

1,000

வலது கையில்

1,500

இடது கையில்

1,500

தொண்டைக்கும் நாபிக்கும் மத்தியில்

8,990

பிடரியின் கீழ்

8,000

விலாவில்

3,000

கால்களின் சந்தில்

8,000

பீசத்தின் மேல்

2,000

பீசத்தின் கீழ்

2,000

பாதத்தில்

1,000

பிடரிக்குப் பின்னால்

3,680

கோசம்

13,000

ஆக நரம்புகள்

72000

 

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை வாத நாடி

பிங்கலை பித்த நாடி

சுழிமுனை சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

(டை)ட கலை இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி. சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

 

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

 

சிகுவை உள்நாக்கு நரம்பு

புருடன் வலக்கண் நரம்பு

காந்தாரி இடக்கண் நரம்பு

அத்தி வலது காது நரம்பு

அலம்புடை இடக் காது நரம்பு

சங்கினி ஆண்(பெண்) குறி நரம்பு

குகு குத நரம்பு

ரக்தவியானன் இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை வெளித் தள்ளும் நரம்பு