Category Archives: பிரபுலிங்க லீலை

பிரபுலிங்க லீலை 5.26 to 5.30

பிரபுலிங்க லீலை – 5.26
*****************************

மாயை அல்லமதேவரோடு பேசத் தொடங்குதல்
********************************************************

5.26 வலம்புரி வளைய னந்தம் மருங்குசூழ்ந் துறச்சி றந்த

சலஞ்சலம் இருப்ப தென்னத் தமனிய மணிமா டத்தில்

பொலங்குழை மகளிர் சூழப் பூந்தவி சிருந்து விஞ்சை

நலந்தெரி பவள்போல் எங்கள் நம்பனோ டுரைவி ழைந்தாள்.

 

வலம்புரி வளை அனந்தம் வலம்புரிச் சங்குகள் பல.
தமனிய மாடம் பொன்னாற் செய்யப்பெற்ற மாடம்.
பொலம் பொன். (“பொன்னென் கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்தொல்.)
விஞ்சை நலம் வித்தையின் மேன்மை.
நம்பன் அல்லமதேவர்.
உரை விழைந்தாள் பேசுதலை விரும்பினாள்.

வலம்புரிச் சங்குகளால் அலங்கரித்துக் கட்டப்பட்ட மணி மாளிகையில் பொன் குழை அணிந்த மாந்தர் சூழ பூவால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் இருந்து வித்தையின் மேன்மை அறிந்தவள்போல் அல்லம தேவரிடம் பேசுதலை மாயை விரும்பினாள்.

பிரபுலிங்க லீலை – 5.21 to 5.25

பிரபுலிங்க லீலை – 5.21

*****************************

அஃதறிந்த மாயை மகிழ்ச்சியடைதல்

**********************************************

5.21 தன்கனி வாய்தி றந்து சாற்றவேண் டியசொல் லெல்லாம்

மின்குழு வனைய மாதர் விளம்பலும் மகிழ்வுற் றீது

புன்சடை மதுகை நாதன் பூசனைப் பயனென் றெண்ணி

இன்குழல் மொழிம டந்தை யிருந்தனள் உரையா டாமல்.

 

சாற்ற சொல்ல.

மின் குழு மின்னற் கூட்டம்.

இன் குழல் மொழி இனிய வேய்ங்குழல் இசையைப் போன்ற சொல். புன்சடை அற்பமான சடை.

இன் இனிய.

தன் கணி வாய் திறந்து சொல்ல வேண்டியனவெல்லாம் தன் தோழியர் சொல்லக்கேட்டு மகிழ்வுற்று, இதுவும் ஈசன் பூசனைப்பயன் என்றெண்ணி, மாயை உரையாடாது இருந்தனள்.

 

பிரபுலிங்க லீலை – 5.22

*****************************

அல்லமதேவருக்குச் சிறப்புச் செய்தல்

***********************************************

5.22 மோகினி தவஞ்செய் தீன்ற முகிழ்முலை மாயை தன்கைப்

பாகுவெள் ளிலைய ளித்துப் பரிந்தரு குறும டைப்பைப்

போகியென் பவள்சி றந்த போகிபோல் நடித்து நின்ற

யோகிதன் கரத்த ளிப்பித் துரியன பலவுஞ் செய்தாள்.

 

முகிழ் அரும்பு.

பாகு வெள்ளிலை பாக்கு வெற்றிலை.

போகி அடைப்பைத் தொழில் புரிபவளின் பெயர்.

யோகி அல்லமதேவர்.

போகிபோல் இன்பத்தை நுகர்ந்தவன் போல.

மோகினி தவஞ்செய்து பெற்ற மாயை தன் கையால் வெற்றிலை பாக்கு எடுத்து யோகியான அல்லமனிடம் கொடுத்து பணிவிடை பலவும் செய்தாள்.

 

பிரபுலிங்க லீலை – 5.23

*****************************

சிறப்புக்களை அல்லமர் ஏற்றுக் கொள்ளுதல்

********************************************************

5.23 அடிக்கம லங்கள் போற்றும் அடியவர் வேண்டிற் றெல்லாம்

கொடுத்தருள் கருணை வள்ளல் கொண்டகோ லத்திற் கேற்ப

நடிப்பவன் ஆத லாலே நாமவேல் தடங்கண் மாயை

எடுத்தத வுறுவ தங்கை யேற்றனன் இழிந்து ளோன்போல்.

 

வேண்டிற்று எல்லாம் விரும்பியவைகளை யெல்லாம்.

ஏற்ப நடிப்பவன் இசையச் செயல் செய்து காட்டுபவன்.

நாம வேல் அச்சமுண்டாக்கும் வேல்.

உதவுறுவது கொடுத்ததாகிய பாக்கு வெற்றிலையை. இழிந்துளோன்போல் மாயை எடுத்துதவுறுவது அங்கையேற்றனன் என்க.

திருவடி போற்றுவோர் அடியவர் வேண்டியனவெல்லாம் தந்து அருளும் கருணை வள்ளல், கொண்ட கோலத்துக்கு ஏற்ப நடிப்பவன் ஆதலால் வேல் போன்ற கண்ணுடைய மாயை கொடுத்த வெற்றிலையை இழிந்துளோன்போல் எடுத்துக்கொண்டான்.

 

பிரபுலிங்க லீலை – 5.24

******************************

மாயை தன் இருப்பிடம் செல்லுதல்

********************************************

5.24 விடைக்கொடி அமலன் தன்னை விடைகொடு புறம்போந் தங்கண்

மடக்கொடி மதவேள் வாளி மருமம்பாய்ந் துருவ நைந்து

நடக்கரி தாகு அம்பொன் நகைமணிச் சிவிகை ஊர்ந்து

தொடிக்கைநுண் இழைம ருங்குல் தோழியர் சூழச் சென்றாள்.

 

அங்கண் அழகிய கண்ணையுடைய.

அங்கண் அவ்விடமுமாம்.

மடக் கொடி இளங்கொடிப் போன்ற மாயை.

மருமம் மார்பு.

நகைமணிச் சிவிகை ஒளி தங்கிய மணிகள் பதித்துச் செய்யப்பட்ட பல்லக்கு.

மதவேள் : இருபெயரொட்டு.

நடக்க அரிது ஆகி நடப்பதற்கும் இயலாமல்.

 

இடபக்கொடியுடைய ஈசனாம் அல்லமனுக்கு விடைகொடுத்தபின் தன் ஒளி தங்கிய மணிகள் பதித்துச் செய்யப்பட்ட பல்லக்கினில் தோழிகள் இருமருங்கும் புடைசூழப் புறப்பட்டாள், மாயை.

பிரபுலிங்க லீலை – 5.25

*****************************

மாயை அல்லமருடன் இருத்தற்குத் தன் தந்தை உடன்பாடு பெறல்

***********************************************************************************

5.25 நண்ணிவெண் குடைவேந் தன்பால் நடம்புரி தொழிற்கி சைந்த

தண்ணுமை அல்ல மன்றன் சதுருரைத் துடனி ருப்பக்

கண்ணகல் ஞாலங் காக்குங் காவலன் இசைவு கொண்டு

பெண்ணமு தனைய மாயை பிறங்குதன் மாடம் புக்காள்.

 

நண்ணி சென்று.

சதுர் உரைத்து மேம்பாடுகளைச் சொல்லி.

கண் அகல் இடம் அகன்ற.

இசைவு உடன்பாடு.

மாடம் மாளிகை.

தண்ணுமை அல்லமன் மத்தளத் தொழிலையுடைய அல்லமன்.

உடன் இருப்ப தன்னுடன் இருப்பதற்கு.

மாயை, அல்லமன்றன் சதுருரைத்துத் தன்னுடன் இருப்பதற்குக் காவலன் உடன்பாடு பெற்று மாடம்புக்காள்.

பிரபுலிங்க லீலை – 5.16 to 5.20

பிரபுலிங்க லீலை – 5.16

******************************

மாயை அல்லமதேவரை அழைப்பித்தல்

**************************************************

5.16 கற்றதன் விஞ்சை போலக் கவினுநாங் கண்ட தில்லை

விற்றொழில் அனங்க வேளே மேனிகொண் டடைந்தான் என்ன

உற்றனன் ஒருவன் என்ன ஒண்தொடி விளிமி னென்றான்

மற்றவர் விளித்து வந்து மாயைமா தெதிர்வி டுத்தார்.

 

விஞ்சை வித்தை.

கவின் அழகு.

அநங்கவேள் காமன்.

விளிமின் கூப்பிடுங்கள்.

மற்றவர் தோழிகள்.

மேனி வடிவம்.

மாயை, அந்த வித்தையின் அழகுபோல் நான் எங்கும் கண்டதில்லை. வில்கொண்ட மன்மதன்போல் அழகு கொண்டவன் ஒருவன் என்றால் அவனை அழையுங்கள் என்றாள். மற்றவர்கள் அல்லமனை அழைத்துவந்து எதிரே விட்டனர்.

 

பிரபுலிங்க லீலை – 5.17

*****************************

அல்லமதேவரைக் கண்ட மாயை மயங்கல்

******************************************************

5.17 அந்நிலை அலம னாமத் தண்ணலைக் கண்ட போதே

செந்நிலம் உகுநீர் போலச் செல்விமால் மயமே யாகிப்

பொன்னவிர் ஒருபூம் பாவை போன்றசை வறவி ருந்தாள்

கன்னல்வில் மதவே ளெய்து கையிளைத் தருகு நின்றாள்.

 

அந்நிலை அவ்வழகிய கோலநிலைமையையுடைய.

செந்நிலம் செம்மண் நிலம்.

உகும் நீர் விழுந்த நீர்.

செல்வி : மாயை.

மால் மயம் மயக்க வடிவம்.

அவிர் விளங்குகின்ற.

செம்மண்ணில் விழுந்த நீர் அந்நிறமாவதுபோல வடிவ முழுவதும் காமம் பரவ.

அல்லமனைக் கண்டவுடனே, செம்மண்ணில் விழுந்த நீர் அந்நிறமாவதுபோல வடிவ முழுவதும் காமம் பரவ மாயை அசைவற்று அவனருகே நின்றிருந்தாள்.

பிரபுலிங்க லீலை – 5.18

*****************************

தோழிகள் அல்லமதேவரின் ஊர் முதலியன வினவல்

******************************************************************

5.18 மயக்குமென் பதுபோய் மாயை மயங்குமென் றிடவி ருப்ப

வியக்குநின் தேயம் யாது வீரவேள் அனையா யின்பம்

பயக்குநின் பெயர்யா தெங்குப் பயின்றுறை குவைசொல் லென்னா

நயக்குமென் மொழியார் கேட்ப ஞானவா ரிதியு ரைக்கும்.

 

வியக்கும் வியந்து கூறத்தகுந்த.

வீரவேள் காமன்.

பயக்கும் உண்டாக்கும்.

பயின்ற உறைகுவை பழகியிருப்பாய்.

நயக்கும் விரும்பப்பெறும்.

ஞானவாரிதி அறிவுக்கடல் (அல்லமன்).

மொழியார் தோழியர்.

மற்றவர்களை மயக்குவாள் மாயை என்பது போய் அல்லமனிடத்து மாயை மயங்கி நின்றாள். அப்போது தோழியர், “உன் தேசம் எது? உன் பெயர் என்ன? எங்கு இக்கலையைப் பயின்றாய்? எங்கு வசிக்கின்றாய்?” என வினவினர். இவ்வினாக்களுக்கு ஞானக்கடலாம் அல்லமன் உரைப்பது.

பிரபுலிங்க லீலை – 5.19

*****************************

அல்லமதேவர் பதில் உரைத்தல்

***************************************

5.19 செல்லுறழ் குழலீர் தேய மோபர தேயஞ் சூளால்

வல்லவ ரென்ன வந்தோர் வலிநிலை அல்ல வென்னும்

அல்லமன் என்பே ரென்றும் அன்புசெய் பவரி டத்தில்

புல்லுவன் தொடர்பி லாமல்என் றனன் பொய்ம்மை யில்லான்.

 

செல் உறழ் முகிலையொத்த.

பரதேயம் வேற்று நாடு, (வீட்டுலகம்).

புல்லுவன் சேர்ந்திருப்பேன்.

தொடர்பு பற்றுக் கோடு.

சூளால் வஞ்சினத்தால்.

என்னும் என்று காட்டுகின்ற.

முகிலையொத்த குழலை உடைய பெண்களே! என் நாடு வேற்று நாடு (வீட்டுலகம்). வஞ்சினத்தால் வாழ்வோரை வெல்லும் அல்லமன் என் பெயர். அன்பு செய்பவரிடத்தில் பற்றின்றி சேர்ந்திருப்பேன்.

 

பிரபுலிங்க லீலை – 5.20

******************************

அல்லமதேவரைத் தோழிகள் வேண்டுதல்

****************************************************

5.20 உலகுள விஞ்சை எல்லாம் உணர்ந்தவெம் பிராட்டி தன்பால்

மலைவற விஞ்சை கற்றோர் தம்மொடு மருவி அப்பால்

செலவினை ஒழிந்தி ருத்தி செல்வமோ டைய என்னா

இலவிதழ் அமுதம் அன்னார் இயம்பினர் இணங்கும் வண்ணம்.

 

பிராட்டி தலைவி.

மலைவு அற திகைப்பு இல்லாமல்.

செலவினை செல்லுதலை.

இலவு இதழ் இலவமலர் போன்ற உதடு.

விஞ்சை கலை.

அப்பாற் செலவு வேறு இடஞ் செல்லுவது.

வேறு இடம் செல்லாது இங்கேயே தங்குங்கள்எனத் தோழிகள் கூறினர்.