Category Archives: கெளமாரம்

மின் – நூல் – கந்தர் கலிவெண்பா

அன்புடையீர்,

என் இணைய தளத்தில் வெளிவந்த “கந்தர் கலிவெண்பா” என்னும் பக்தி நூலை மின் – நூலாக்கித் தந்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது என் முதல் முயற்சி. தவறுகளையும், மேம்படுத்தக் கருத்துக்களையும் njaanam@gmail.com மூலம் அனுப்பவும்.

கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி

கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி
******************************
32.திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈரா(று)
அருள்விழியு மாமுகங்க ளாறும் – விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண்

எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்(து)
உல்லாசமாக உளத் திருந்து – பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமுஞ்சீர்ப்
பேசுமியல் பல்காப்பி யத்தொகையும் – ஓசை

எழுத்துமுத லாமைந்தி லக்கணமுந் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) – ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பி லிருவா தனை யகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்(து)

ஆயும் பழைய வடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகந் துய்ப்பித்துச் – சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு
அடியேற்கு முன்னின்று றருள்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று

சீரடி – சிறிய திருவடி
மா – பெரிய
இடுக்கண் – துன்பம்

ஆசு முதல் – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் நான்கு வகை
ஆசு – உடனே பாடுதல். மதுரம் – இனிமை மிக்க செய்யுள் பாடுதல். சித்திரம் – சித்திரத்தில் அடைத்தற்குறியவாறு பாட்டு எழுதல். வித்தாரம் – விரிந்த காவியம் இயற்றுதல்.
அட்டாவதானம் – எட்டு வகைச் செயல்களை ஒரேகாலத்தில் கவனித்தல்.
பல்காப்பியம் – பல காவியங்களின் தொகுப்பும்.
ஓசை – ஓசை இலக்கணம்

எழுத்து முதலாமைந்து – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
பாலித்து – கொடுத்தருளி
இருவாதனை – பெருந்துன்பம்
மும்மை மலம் – ஆணவம், கன்மம், மாயை
மோசித்து – நீக்கி

ஆயும் – அறிவிற் சிறக்கும்
பரபோகம் – பேரின்ப அநுபவம்
துய்ப்பித்து – அநுபவிக்கச் செய்து
கடியேற்கு – கடுமையான குணமுடைய எனக்கு
அருள் – அருள் செய்க!

அழகிய இடுப்பும், சிறிய திருப்பாதங்களும், சிவந்த திருக்கையும், கருணை பொழிகின்ற பன்னிரண்டு திருக்கண்களும், பெரிய ஆறு திருமுகங்களும், ஒளிக்கதிர்களை விரிவாக வீசும் கிரீடங்கள் அணிந்த திருமுடிகள் ஆறும், எந்தத் திக்கிலும், கண்ணெதிரே தெரியும்படி எழுந்தருளி வந்து, துன்பங்களை எல்லாம் தூளாக்கி ஒழித்து, எல்லா வகையான வரங்களும் கொடுத்து அருளி, பல பகுதிகளை உடைய ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகைப் பாட்டுக்களைப் பாடும் திறமையும், எட்டு செயல்களை ஒரே காலத்தில் கவனிக்கக்கூடிய சக்தியும், புகழும் பெருமையும் பொருந்திய பலவகைக் காவியங்களின் தொகுதியும், ஒலி இலக்கணமும், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து வகை இலக்கணமும் தெரிந்து தேர்ச்சியுற்ற தமிழ்ப் புலமையும் கொடுத்தருளி, நல் ஒழுக்கத்தியும் தந்து அத்துடன் இப் பிறவியில் உள்ள பெரிய வேதனைகளையும் நீக்கி, பெரிய குற்றங்களுக்குக் காரணமாகிய மூன்று வகைப் பாசங்களையும் ஒழித்து, சுய நலம் கருதாது ஞான நூல்களை ஆராய்கின்ற பழமையான அன்பர்களுடன் என்னைச் சேர்ப்பித்து அவர்கள் அநுபவிக்கின்ற மேலான சிவானந்தத்தை அடியேன் அநுபவிக்கும்படி செய்து, உனக்கு நெடுந்தூரத்தில் உள்ள அன்பில்லாத வன்னெஞ்சமுடைய எனக்கும் உன் அழகிய செந்தாமரை போன்ற திருவடிகளைக் காண்பித்து, ஆட்கொண்டருளி, எனக்கு முன்பாக நின்றருள் செய்வாயாக!

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று

கந்தர் கலிவெண்பா – 31

கந்தர் கலிவெண்பா – 31
********************
31.சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே – பொய்விரவு
காமமுனிந்த கலைமுனிவன் கண்ணரு ளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு

கானக்குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத் தினிதிருந்து – மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவுந் தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து

ஆறுதிருப் பதிகண் டாறெழுத்து மன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே – நாறுமலர்க்
கந்திப் பொதும்பரெழு சாரலைக்குஞ் சீரலைவாய்ச்
செந்திற் பதிபுரக்குஞ் செவ்வேளே – சந்ததமும்

பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி
பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசும்அடற்
பூதமுந்தீ நீரும் பொருபடையும் – தீதகலா

வெவ்விடமுந் துட்ட மிருகமுத லாமெவையுந்
எவ்விடம் வந்தெம்மை யெதிர்ந்தாலும் – அவ்விடத்திற்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத்

வானுதவும் – இந்திரன் பெற்றுதவும்
பொய்விரவு காமம் – இவ்வுடலைச் சேர்தலாகிய காம இச்சையை
கலைமுனிவன் – கல்வியிற் சிறந்த சிவ முனிவன்
கண் அருளால் – கண்ணினால் செய்த காதலால்
வாமம் – அழகிய
ஏனல் – தினை
ஆறு திருப்பதி – ஆறு படைவீடு
ஆறெழுத்து – சரவணபவ என்னும் மந்திரம்

கந்திப்பொதும்பர் – கமுகஞ்சோலை
எழுகார் – எழுகின்ற மேகம்
அவமிருந்து – அகாலச் சாவு
விக்கினம் – அஞ்சல்
பூதம் – பூதகணங்கள்
பசாசு – பேய்
அடல் – வலிமை
பொருபடை – போரிடும் சேனை
வெவ்விடம் – கொடிய நஞ்சு
அச்சம் – பயம்
அகற்றும் -நீக்கும்
அயில் – கூரிய

சைவ சமயத்தின் இளமைச் சோதியே! தவம் நிறைந்த கடல் போன்றவனே! தேவேந்திரன் விரும்பிக் கன்னிகாதானமாய்க் கொடுத்த தெய்வயானை அம்மையை விரும்பி மணந்தவனே! பொய், காமம் முதலிய பாதகங்களை வெறுத்துத் தள்ளிப் பல நூல்களையும் அறிந்த சிவ முனிவன் பார்வையின் கருணையால், அழகிய இளமான் ஒன்றின் வயிற்றில்லே உதித்துக் காட்டு நிலத்தில் வாழும் குறவர்கள் குடியில், அவர்கள் மகிழ வளர்ந்து, அழகிய குயிலின் ஒலி போன்ற குரலினால், தினைப் பயிரைத் தின்ன வரும் பறவைகளை ஓட்டித் தினைவயலை நன்றாகக் காவல் காத்து மேலான நிலையை அடைய தெள்ளிய தினைமாவும் தேனும் தனக்கு விரும்பிக் கொடுத்த வள்ளி நாயகியைத் திருமணம் செய்தவனே!

மனத்தில் உதிக்கும் உண்மையான அன்போடு திருப்பரங்குன்றம், திருச் செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகமாம் சுவாமி மலை, குன்றுதோர் ஆடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு படை வீடுகளிலும் தன்னைத் தெரிசித்து வணங்கி ஆறெழுத்து மந்திரத்தை (“சரவணபவ”) ஓதுபவர்கள் மனதில் குடியிருப்போனே! நல்ல வாசனைப் பூக்களையுடைய கமுகஞ்சோலை மேகமண்டலம் வரை சென்று மேகத்தை ஓட்டும் சிறப்புடைய திருச்செந்திற் பதியில் விருப்பத்துடன் வீற்றுள்ள செம்மை பொருந்திய வள்ளலே!

எப்போதும் பலகோடிப் பிறப்பாகிய பகையும், அகால மரணமும், பலகோடி இடையூறுகளும், பலகோடி பாவச் செயல்களும், பிறருக்குக் கெடுதி செய்யும் தீச்செயல்களும், பாம்பு, பேய், வலிமை மிக்க பூதங்கள், நெருப்பு, நீர், போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தீமை நீங்காத கொடிய நஞ்சுகள், மூர்க்கமான மிருகங்கள் எல்லாம், எந்த இடத்தில் எங்களை எதிர்த்தாலும் அந்த இடத்தில், உன்னுடைய பச்சைநிற மயில் வாகனமும், பன்னிரண்டு வலிமை மிக்க தோள்களும், பயத்தை நீக்கும் கூர்மையான வேலாயுதமும், அரைஞாண் அணிந்த ……