Category Archives: அகரமுதலி

சிவ வாக்கியம் – 220

சிவவாக்கியர் பாடல்கள் – 220

220.சுழித்தவோ ரெழுத்தையுஞ் சொன்முகத் திருத்தியே

துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்

அழுத்தமான வக்கர மங்கியுள் ளெழுப்பியே

ஆறுபங்க யங்கலந் தப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரே எழுத்து காரம். அதுவே கண்கள். அங்குள்ள சூரிய சந்திர கலைகளை எழுப்பி மூல நாடியான அக்கினி கலையுடன் கலக்கவேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து அழுத்தமாக அக்கினி கலையை மேல் ஆதாரங்கள் வழியாக மேலே உள்ள தலத்தில் நிறுத்தவேண்டும். இதுவே வாசியோகம்.

சிவ வாக்கியம் – 218

சிவவாக்கியர் பாடல்கள் – 218

218.அஞ்செழுத்தி னாதியா யமர்ந்துநின்ற தேதடா

நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்ப தேதடா

அஞ்செழுத்தின் வாளதா லறுப்பதாவ தேதடா

பிஞ்செழுத்தி னேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.

நெஞ்சை அழுத்தி நின்றுகொண்டு செபம் செய்வது எதனால்? அஞ்செழுத்து வாளால் மனதில் இருந்து அறுத்து எறிவது எவைகளை? அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய் அனாதியாய் அமர்ந்து நின்றது சிகாரமே. பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் என்ற எழுத்து. அதுவே பிஞ்செழுத்து. அதன் மகிமையைப் பிரித்து உரையுங்கள்.

சிவ வாக்கியம் – 216

சிவவாக்கியர் பாடல்கள் – 216

216.ஆக்கைமூப்ப தில்லையே யாதிகா ரணத்திலே

நாக்கைமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்

எக்கறுத்தி ரெட்டையு மிறுக்கழுத்த வல்லிரேல்

பார்க்கப்பார்க்க திக்கெலாம் பரப்பிரம்ம மாகுமே.

ஆக்கையாகிய உடலில் உள்ள ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடல் மூப்பு அடைந்தாலும் ஆன்மா என்றும் இளமையோடு உள்ளது. நாக்கை உள் மடித்து மூக்கில் இழுக்கும் வாயுவை இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றுடன் கலந்து, உண்ணாக்கினுள் செலுத்தி நடு நாடியில் கலந்து, பலமான விசையுடன் ஊதினால் நாதம் உண்டாகும். எக்கி எட்டு ரெண்டும் பத்து அக்கரத்தால் கபாலத்துக்குள்ளே வாசியை இறுக்கி அழுத்தி வைத்து ஞானவினை புரிய வல்லவர்கள் ஆனால் பார்க்கும் திசைகளில் எல்லாம் அவர்களுக்கு பரப்பிரம்மமாய்க் காட்சி தரும்.