Category Archives: திருவாசகம்

திருவெம்பாவை – 20

நாள் இருபது – பாடல் இருபது

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது.

எல்லா உயிர்க்கும் ஆதியும் அந்தமும், தோன்றும் இடமும், போகங்கள் விளையும் களமும், முடிவான இடமுமாய் இருப்பவை இறைவன் திருவடிகள். பிரமனும் இந்திரனும் காண முடியாத பெருமை பெற்றவை. அந்தத் திருவடிகளே தம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய்.

இப்பாடல் இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கிறது; திருவெம்பாவையின் நிறைவுப் பாடலாக மங்கலப் போற்றியாக அமைகிறது. ஐந்தொழிலும் அறுவகைக் காவலும் எட்டுப் போற்றிகளும் தனக்குள்ளே கொண்டது இப்பாடல்.

இந்தப் பாடல் இறைவனுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டுச் சரணடைந்து விடுவதைப் பற்றிப் பேசுகிறது. தோன்றியது இறைவனிடமிருந்து. வாழ்வது அவனால். உடலெடுத்த வாழ்விலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்நோக்கிக் கிடப்பது அவன் அருளையே. என்னதான் முயன்றாலும் இன்னார்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடிவிலும் செயலிலும் அருமை கொண்டவன். அவனையல்லால் வேறு யாரிடம் சரணடைவது? எனவே இப்பாடல் அவன்தாள் சரணடைவதைப் போற்றி முடிகிறது.

திருவெம்பாவை – 19

நாள் பத்தொன்பது – பாடல் பத்தொன்பது

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு.

உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனெனில் அது தேவையற்ற ஒன்று. எங்களின் பெருமானே! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேடபாயாக. நாங்கள் உன் மெய் அடியார்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கல் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் உன்னையே நாங்கள் எப்பொழுதும் காணவேண்டும். இறைவா! இவ்வாய்ப்பினை நீ எங்களுக்குத் தந்தருள்வாயாகில், பிறகு கதிரவனே செல்லும் தடம் மாறினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவையே! இப்பெரு நிலையை ஓர்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்.

பாவை நோன்பிருக்கும் கன்னியர் இப் பாடலில் தங்களின் வேண்டுதல்களை வெளியிடுகிறார்கள். முதலில் எடுத்த பிறவிதோறும் இறைவனுக்குத் தாம் தொண்டர்களாக இருந்ததை அறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் உன்னிடம் கூறிக் கொள்ள ஒன்று உண்டு என்று சொல்லும் போது சொல்ல வருவது வைராக்கியத்தை அறிவித்துக் கொள்வதே.

அவன் அடியார்களுக்கே தாம் அடியார்களாவோம். வாழும் எவரும் வாழும் வரையிலும் உலகியலைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இல்லறம் கூட அறத்தாற்றில் நடத்த வேண்டுமானால் அதற்கு இலக்கால் ஒன்றிய வாழ்க்கைத் துணை தேவை. அத்தகைய தேவை அமையப் பெற்றபின் எங்கு என்ன நடந்தால் என்ன என்ற விட்டேற்றி மனப்பான்மையை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.

பாவையர் இறைப் பணிக்கான வாழ்வை வரமாகக் கேட்பது தெளிவாகிறது.

திருவெம்பாவை – 18

நாள் பதினெட்டு – பாடல் பதினெட்டு

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் பேரொளியின்முன் ஒளியிழந்து விடுகின்றன.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.