Category Archives: மற்ற சமயங்கள்

கந்தர் கலிவெண்பா – 14

14. தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம் பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்த பிறைத்
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் – விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியுங் கண்மலர் ஈராறும் – பருதி
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் – நிலவுமிழும்

தேய்ந்த பிறை = குறந்த பிறை(நிலா)
துண்டம் = துண்டு, பிளவு
நிரை = வரிசை
புண்டரம் = கோடு பதித்தது போன்ற நுதல்
புண்டரம் பூத்த நுதல் எனக் கொள்க.
விண்ட = விரிந்த
பருவ மலர் = நாள் மலர்
புண்டரிகம் = தாமரை
பருதி = சூரியன்
சுடர் பாலித்தல் = ஒளி வீசுதல்
குலவும் = அசையும்
நிலவு = ஒளி
குழை = குண்டலம்

ஒன்பது வகை இரத்தினங்களில் ஒளி மிகுந்த மணிகள் பதித்துச் செய்யப்பட்டதாய்ப் பசும் பொன்னாலாகிய கதிர் வீசுகின்ற இரத்தினக் கிரீடமும், (கலைகள்) தேய்ந்தபடியால் பிறையாக விளங்கும் ஆறு சந்திரர்களை வரிசையாக வைத்தாற்போன்ற ஆறு நெற்றிகளும், திருநீற்றுக் குறிகள் இடப்பெற்ற அவைகளில் தாமரைப்பூ பூத்தாற்போல விளங்குவதாய்த் திருவருள் பொழிகின்ற திருக்கண்கள் பன்னிரண்டும், பல சூரியர்கள் தோன்றிக் கதிர் வீசினாற்போல அசையும் மகர குண்டலங்களும், நிலவுபோல் ஒளி வீசும்…

குர்பானி

வரலாறு
*********
பரிசுத்த ஹக்கின் திருவருள் கொண்டு நண்பர் சிவாவின் வினாவுக்கு விடை கூறுகிறோம்.

நான் கூறும் விளக்கத்தில் தவறேதும் இருப்பின் சினமுறாது நல்ல, சரியான பொருளை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

“என்னிடமிருந்து கற்றதை பிறருக்கு அறியச் செய்துவிடுங்கள்” என ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனார் கூறியதை நினைவுகூருக. (மார்க்க)ஞானத்தைத் தெரியாதவர்களுக்குச் சொல்லிகொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரின் மீதும் உள்ளது அல்லவா?

குர்பானி = தியாகம்

குர்பானி என்பது தொழுகையைப்போல் ஒரு வழிபாடு. ஆகவே. அதை அல்லாஹ்வின் பெயரால் மட்டுமே தவிர வேறு எவர் பெயராலும் கொடுக்கக் கூடாது என்பது புனித குர்ஆன் வசனம் ஆகும்.

புனித மறையில் மொத்தம் 8 இடங்களில் குர்பானியைப் பற்றிக் குறித்துள்ளது.

குர்பானியின் வரலாறு:-

ஸூரத்துஸ் ஸாப்பாத் – ருகூஃ 4 – பாகம் 23 – அத் 37

ஆயத்து 100 – “என்னுடைய ரப்பே(பரிபாலிப்பவரே)! நல்லோர்களிலிருந்து எனக்கு(ஒரு சந்ததியை) அளித்திடுவாயாக” என நபி இபுராஹிம்(அலை)துஆ(வேண்டுதல்) செய்தார்.

ஆயத்து 101 – எனவே, சாந்தம் மிகுந்த ஒரு மகனைக் கொண்டு அவருக்கு நாம் நன்மாராயங் கூறினோம்.

அவர்தான் அருமை மகனார் இஸ்மாயில்(அலை)

ஆயத்து 102 –

பின்னர் அவருடன் அ(ப் புதல்)வர் நடமாடக் கூடிய வயதை
அடைந்தபோது “என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் நான் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார்; (அதற்கு)”என்னருமைத் தந்தையே! நீங்கள்
ஏவப்பட்டபடி செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ்! பொறுமையானவர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்!” என்று அவர் கூறினார்.

நபி இபுராஹிம்(அலை)க்கு எண்பது வயதுக்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் கிடைக்கப்பெற்ற அருந்தவப் புதல்வரை (இஸ்மாயில்(அலை)) அல்லாஹ்வின் பாதையில் அறுத்துப் பலியிடத் துணிந்தாரெனில், அது அவருக்கு இறைவன்மீது கொண்ட அளவற்ற பக்தியயும், இறைவனுக்காகத் தன் மூப்பு வயதிலும் தன் மகனை
இழக்கத் தயாராயிருக்கும் தியாக மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டு.

ஆயத்து 103 –

எனவே, இருவரும் (அல்லாஹ்வின் ஏவலுக்கு) வழிபட்டு,(அறுத்துப்
பலியிட) அவரை முகங் குப்புறக் கிடத்தியபொழுது:

ஆயத்து 104 –

“யா இப்றாஹீம்!” என்று அவரை நாம் கூப்பிட்டோம் –

ஆயத்து 105 –

கனவை திடனாக நீர் மெய்ப்பித்து விட்டீர்! நிச்சயமாக நாம்
நன்மை செய்கிறவர்களுக்கு இவ்வாறே(நற்)கூலி கொடுப்போம்.

ஆயத்து 106 – நிச்சயமாக இது விளக்க சோதனையாகும்.

ஆயத்து 107 –

வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப்
பகரமாக்கிக் கொடுத்தோம்.

இறைவன் இஸ்மயில்(அலை) பலியிடப் படுவதை விரும்பாது ஒரு வலுவான ஆட்டைக் கொடுத்தார். பின்னர் நபி இபுராஹிம்(அலை) ஆட்டைப் பலிகொடுத்தார்.

இதுவே குர்பானியின் வரலாறு.இத்தியாக உணர்வை நாமும் உள்ளத்தில் பசுமையாக வைத்துக் கொள்ளுவதே குர்பானியின் நோக்கமாகும்.

நபி இபுராஹிம்(அலை) அவர்களின் வழிநடக்கும் பொருட்டு வசதியானவர்கள் அல்லாஹ்விற்காகப் பிராணிகளைக் குர்பானி கொடுப்பதைத் தன் வழிமுறையாகக் காண்பித்துச் சென்றுள்ளார்கள் நம் நபிப் பெருமானார்(ஸல்) அவர்கள்.

குர்பானி கொடுத்து அதன் இரத்தம் தரையில் விழுந்தால்தான் குர்பானி
நிறைவேறும். குர்பானி பிராணியின் விலையை ஒரு புண்ணிய காரியத்திற்குக் கொடுத்துவிடுவதாலோ,உயிரோடு ஸதக்கா(தர்மம்) கொடுத்தாலோ அக்கடமை நிறைவேறாது.

குர்பானியின் மாமிசமோ, அதன் உதிரமோ திண்ணமாக அல்லாஹ்வைச் சேருவதில்லை. ஆனால் அப்பொழுது உங்களில் தோன்றும் உள்ளச்சமுடைய பக்தி உணர்வு ஒன்றுதான்
அவரைச் சேரும்.

குர்பானி அறுக்கும்போது “பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்” என்று கூறி
அறுத்தலே சாலச் சிறந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பாத்திமா(ரலி) அவர்களை
நோக்கி,”குர்பானிக்கு நேராக நில். அதன் உடலில் இருந்து முதல் சொட்டு இரத்தம் வந்தவுடன் உன் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும்” என்றார்.(ஹாகீம்)

குர்பானி கொடுக்கும்போது ஓதும் துஆ:-

“பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர். இன்னீ வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹியலில்லதீ. ஃப்தரஸ் ஸமாவா(த்)தி வல் அர்ள ஹனீபன்(வ்)வமா அனமினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வநுஸுகீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.”

பொருள்:

“அல்லாஹ்வின் திருநாமத்தால் (அறுக்கிறேன்). அல்லாஹ் மிகப்
பெரியவன். வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்விற்கு சத்தியமற்ற கொள்கைகளை விடுத்தவனாக என்னை உரித்தாக்குகிறேன். நான் இணைவைப்பவர்களில்
உள்ளவன் அல்ல. நிச்சயமாக என் தொழுகையும், என் குர்பானியும், எனது வாழ்வும், என் மரணமும், அகிலத்தைப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கே உரித்தானதாகும்.

குர்பானி கொடுத்தபின் செய்யும் துஆ –

“யா அல்லாஹ்! உன்னுடைய நேசர் முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்தும், உன்னுடைய தோழர் இப்ராஹீம்(அலை) அவர்களிடமிருந்தும் நீ ஏற்றுக்கொண்டதைப்போல்என்னிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக. ஆமீன்.”

குர்பானி கொடுத்த பிராணியின் 7 பொருட்களைச் சாப்பிடுவது குற்றம்(ஹராம்).

வெட்டியவுடன் வரும் இரத்தம், ஆண்குறி, இரு விதைக் கொட்டைகள், அபம், கழலைக்கட்டி(புரைகுழல்), நீர்ப்பை, பித்து ஆகியன ஒதுக்கப்பட்டவை.

குர்பானி கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும்(மேற்கூறியவை நீங்கலாக) ஆணாயினும் பெண்ணாயினும் உண்ணலாம். ஆனால், நேர்த்திக் கடனுக்காக விடப்பட்ட பிரணிகளின் பொருட்களை நேர்த்திக்கடன் செய்தவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் உண்ணலாகாது.

“அவர்களுக்குறிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைந்திடவும், (ஆடு,மாடு,ஒட்டகம்) முதலிய கால்நடைகளிலிருந்து அவர்களுக்கு அவன் வழங்கியதின் மீது குறிப்பிட்ட நாட்களில் அவற்றை அறுத்திடும்போது அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் நினைவு கூர்ந்திடவும் வருவார்கள்.

ஆகவே, அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். இன்னும் துன்பத்தில் உழலுகிற ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள்.”
(அல்குர் ஆன் பாகம்:17 அத்:22 ஆயத்து:28)

முக்கிய அறிவிப்பு: இது என்ன எனத் தெரிந்து கொள்வதற்க்காகவே
தரப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு பகுதியின் மீதும் தயவுசெய்து
விவாதங்களைத் தவிற்கவும். ஏனெனில் இது சட்டம்.