சிவ வாக்கியம் – 369

சிவவாக்கியர் பாடல்கள் – 369

*************************************************

369. வடிவுபத் மாசனத் திருத்திமூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி யூடுபோய்.

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒருசேர அடைத்து, யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் மூலம் மேலேற்றுங்கள். முளரியாம் பிரமலோகத்தில் உள்ள ஆலயங்கடந்து, மூல நாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை அடையுங்கள்.

சிவ வாக்கியம் – 368

சிவவாக்கியர் பாடல்கள் – 368

*************************************************

368. பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே யிறந்தபோதிற் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.

உடலைத் துறந்து பறந்த சிவம் பாய்ச்சலூர் வழியிலே சென்றதை அறியுங்கள். வாசி யோகத்தினால், முக்கலைகளையும், வாணர்கை யாழிசையைப் போல் இடைவிடாது ஏற்றுங்கள். கபாலத்தின் உள்ளே சென்று ஈசனை அடையுங்கள். பிறப்பறுக்க கீஎன்னும் சிகாரத்தில் சோதியாக விளங்கும் மவுனத்தில் தவம் புரிந்து சிவத்தை தெளிந்து அதனுடன் ஒன்றுங்கள்.

சிவ வாக்கியம் – 367

சிவவாக்கியர் பாடல்கள் – 367

*************************************************

367. வாயில்கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னா யுறைந்ததுங்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

ஐம்புலன்களை அடக்கி, ஈசனிருக்கும் வாயில் கண்டு, அவனின் கோணமில்லா சாயல் கண்டு, உடலுள் உள்ள தலையில் வாழும் அவனை வாசியோகத்தால் சார்ந்து, கருத்து என்னும் கரு இருக்கும் ஊரில் அவனுடன் சேருங்கள். உடல் இறந்ததும் பரந்து நின்ற சிவம் பாய்ந்து வெளியே சென்றதே.