சிவ வாக்கியம் – 221

சிவவாக்கியர் பாடல்கள் – 221

221.உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்த நாதமும்

கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்

அருட்டரிப்ப தற்குமுன் னறிவுமூலா தாரமாம்

குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.

குணங்கெடும் குருக்களே! உடல் உருவாவதற்கு முன் உயிர் வானத்தில் நாதமாக இருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடல் தாயின் கருவறையில் சுரோணிதமாய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடலில் உயிர் சூக்குமாய் இருப்பதைக் குறித்தறிந்து கொள்ளுவீர்கள்.

சிவ வாக்கியம் – 219

சிவவாக்கியர் பாடல்கள் – 219

219.உயிரிருந்த தெவ்விட முடம்பெடுத்த தின்முனம்

உயிரதாவ தேதடா வுடம்பதாவ தேதடா

உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தேதடா

உயிரினா லுடம்பெடுத்த வுண்மைஞானி சொல்லடா.

இந்த உடலை எடுப்பதற்கு முன் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லுங்கள். உடலாக உருவெடுக்கும் முன்ப உயிர் ஆகாயத்தில் இருந்தது. உடல் அம்மையின் கருவில் உள்ள தீட்டு. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அனைத்தும் அச்சிவமே.

சிவ வாக்கியம் – 220

சிவவாக்கியர் பாடல்கள் – 220

220.சுழித்தவோ ரெழுத்தையுஞ் சொன்முகத் திருத்தியே

துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்

அழுத்தமான வக்கர மங்கியுள் ளெழுப்பியே

ஆறுபங்க யங்கலந் தப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரே எழுத்து காரம். அதுவே கண்கள். அங்குள்ள சூரிய சந்திர கலைகளை எழுப்பி மூல நாடியான அக்கினி கலையுடன் கலக்கவேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து அழுத்தமாக அக்கினி கலையை மேல் ஆதாரங்கள் வழியாக மேலே உள்ள தலத்தில் நிறுத்தவேண்டும். இதுவே வாசியோகம்.