பிரபுலிங்க லீலை – 4.36 to 4.40

பிரபுலிங்க லீலை – 4.36

**********************

மகளிர் அனைவரும் சிறந்த அழகினர்

************************************

இக்குழு மகளிருள் யார்வ னப்பினால்

மிக்கவ ளெனத்தமை வினாவி னாரெதிர்

முக்கனி களுட்சுவை முதிர்ச்சி பெற்றுள

தெக்கனி யதனை நீர் இயம்புவீ ரென்பார்.

 

இக்குழு இக்கூட்டம்.

முக்கனி வாழை, மா, பலா.

முதிர்ச்சி சிறப்பு.

வினாவுக்கு எதிர் வினவினார் என்க.

இது மகளிர் கூட்டங் கண்டு காதல் கொண்டு மயங்கிய ஆடவர்களிருவர் வினாவியதாகக் கொள்ளவேண்டும். முக்கனியும் சுவையுடையவையாம். அவை போல எல்லோருஞ் சிறந்த அழகுடையவர்களே என்பது கருத்து.

பிரபுலிங்க லீலை – 4.37

*************************

கரும்பினும் இனியசெங் கயற்க ணாரிளம்

குரும்பையும் பயன்படாக் கோவை தன்னையும்

விரும்பினம் உலகர்முன் வீணில் நெஞ்சகம்

வருந்துதல் நகைதரு மடமையே யென்பார்.

 

கயல்கணார் கயல்போலுங் கண்ணையுடையவர்.

கோவை அதரமாகிய கோவை.

நகைதரு இகழ்ச்சியைத் தருகிற

மடமை அறியாமை.

இளங்குரும்பை கொங்கை.

கோவை இதழ்.

இதுவும் ஆடவர் கூற்று.

கரும்பைவிட இனிய மாதருடைய இளம் கொங்கைகளையும், பயன்படாக் கோவைப் பழத்தையும் விரும்பி உலகினர் முன்னே வீணில் நெஞ்சம் வருந்துதல், பிறர் கண்டு எள்ளி நகைக்கத்தக்க மடைமையே.

பிரபுலிங்க லீலை – 4.38

*************************

உடல் முழுதும் மூடினால் உயிர் பிழைக்கலாம் என்றல்

*****************************************************

விடங்குலா மதர்விழி விரைத்தண் பூங்குழல்

நடங்குநூ லிடைப்பிறை நுதற்பொற் கொம்பனார்

குடங்கள்நா ணுறுமிளங் குவவுக் கொங்கைபோல்

உடம்பெலா மூடினா லுய்யலா மென்பார்.

 

விடம் குலாம் நஞ்சு உலாவுகின்ற.

நுடங்கும் நூல் இடை துவள்கின்ற நூலைப் போன்ற இடை.

குவவு பருத்த.

உய்யலாம் நாம் உயிர் பிழைக்கலாம்.

இதுவும் ஆடவர் கூற்று.

மங்கையர்(கொம்பனார்) தம் கொங்கைகளை மூடியிருப்பதுபோல் அவர்கள் உடல் முழுதும் மூடியிருந்தால் நாம் வருந்தாது பிழைக்கலாம் என்று கூறினர்.

பிரபுலிங்க லீலை – 4.39

*************************

மாயை கோயிலை அடைதல்

******************************

இவ்வணங் கருத்தழிந் திளைஞர் மாழ்குறக்

கொவ்வையங் கனியிதழ்க் கோதை மாரொடு

மௌவலங் குழலெழில் மாயை யென்பவள்

அவ்வரன் கோயிலின் அருகு போயினாள்.

 

மாழ்குற மயங்கி நிற்க.

கொவ்வை அம் கனி இதழ் கோவைப்பழம் போன்ற அழகிய உதடு.

மௌவல் மல்லிகை.

இங்ஙனம் கருத்து அழிந்து இளைஞர் மயங்கி நிற்க, கோவைக் கனியை ஒத்த இதழ்களையுடைய சேடிகளோடு மல்லிகை சூடிய குழலை உடைய மாயை என்னும் எழில் பாவை அரனின் கோயில் அருகே சென்றனள்.

பிரபுலிங்க லீலை – 4.40

*************************

சிவிகையினின்று இறங்கிச் செல்லுதல்

***************************************

சிவிகையின் இழிந்துதன் சென்னி தாங்கிய

குவிகையி னொடுபுகாக் கோபுரத் துள்வெண்

கவிகைய னெனுமம காரன் கன்னிகட்

செவிகையி னணிபர னெதிர்சென் றாளரோ.

 

இழிந்து இறங்கி.

சென்னி தலை.

குவிகை குவிந்த கை.

புகா புகுந்து.

வெண்கவிகை வெண் கொற்றக் குடை.

கட் செவி கண்ணையே காதாகவுடைய பாம்பு.

கையின் அணிபரன் கையிற் கங்கணமாக அணிந்த சிவன்.

சிவிகையிலிருந்து இறங்கித் தலைக்குமேல் குவிந்த கையுடன் கோபுரத்துட் புகுந்து, வெண்கொற்றக் குடையுடைய மமகாரனுடன், கண்ணையே காதாகவுடைய பாம்பைக் கையில்கங்கணமாக அணிந்த சிவனின் முன்னே சென்றனள்.

கணினி வல்லுனர்களே! உதவி தேவை!!!!!

அன்புடையீர்,

கடந்த 15 நாட்களாக கூகுள் search barல் ஏதேனும் கொடுத்து தேடச் சொன்னால் கீழ்கண்ட எச்சரிக்கை வருகிறது. தமிழ்ப்பயணி சிவாவும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். நானும் hard diskformat செய்துவிட்டு வேறு எந்த மென்பொருளையும் நிறுவாமல் Internet explorerலும் சோதித்து விட்டேன். எச்சரிக்கை வருகிறது.

Your computer appears to be infected

We believe that your computer is infected with malicious software. If you don’t take action, you might not be able to connect to the Internet in the future.
Learn how to remove this software.

 

ஆனால், yahoo search barல் தேடினால் இந்த எச்சரிக்கை வருவதில்லை. இந்த எச்சரிக்கையை நீக்குவது எப்படி? வல்லுனர்களே உதவிக்கு வாருங்கள்.

பிரபுலிங்க லீலை – 4.31 to 4.35

பிரபுலிங்க லீலை – 4.31
*************************
மாயை சென்ற தோற்றம்
*************************
4.31 துன்று பெண்படை சூழ்வர மாயையந் தோகை
வென்றி யங்கனல் மழுவினோன் விதியினால் வேளைக்
கொன்ற தென்னெனக் கேட்பமென் றுளவலி கொண்டு
சென்று றுஞ்செய லென்னவத் தெருவிடைச் சென்றாள்.

துன்று – நெருங்கிய.
அம்தோகை – அழகிய மயில், மாயையாகிய மயில்.
வேளை – மதனை.
படை – சேனை.
மழுவினோன் – மழுப்படையுடையவனாகிய சிவன்.
உளவலி – மனத் துணிவு.

பெண்படைகள் நெருங்கி சூழ்ந்துவர, அழகிய தோகை உடைய மயில் போன்ற மாயை, வெற்றிக்கனல்வீசும் மழுப்படை உடையவனாம் சிவனிடம் சென்று, மன்மதனை விதியினால் எரித்த காரணம் என்ன என வினவுவோம் என்று உள்ள வலிவு கொண்டு ஆலயமிருக்கும் தெரு வழியே சென்றாள்.
பிரபுலிங்க லீலை – 4.32
*************************
அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர் தன்மை
*************************************************
4.32 அரிமதர் மழைக்கணல் லரிவை தன்புடை
வருமட வரலியர் வனப்புக் காண்டலும்
எரிபுரை விழியரி யேறு போல்பவர்
கரிநுகர் வெள்ளில்அம் கனியை யொத்தனர்.

அரிவை – மாயை.
புடை – பக்கம்.
மடவரலியர் – இளம் பெண்கள்.
வனப்பு – அழகு.
எரிபுரை – தீயை ஒத்த.
அரியேறு – ஆண் சிங்கம்.
கரி – யானை.
வெள்ளில்அம் கனி – அழகிய விளாம்பழம்.

இந்த மங்கையர் கூட்டத்தைக் கண்ட ஆண் சிங்கத்தைப் போன்ற ஆடவர், அவர்களின் வனப்பை அள்ளிப்பருகினர். அப்போது அவர்கள் யானையுண்ட விளாங்கனி போன்றவர்களானார்கள்.
பிரபுலிங்க லீலை – 4.33
*************************
ஆடவர் அறிவு கொள்ளை போதல்
***********************************
4.33 இடையொரு சற்றுவா ணுதல்சற் றேழையர்
படைவிழி சற்றுவாய்ப் பவளஞ் சற்றிணைக்
குடமொரு சற்றிவண் கொள்ளை கொள்ளநம்
புடைபெயர் அறிவெலாம் போயிற்றே யென்பார்.

சற்று – சிறிது.
ஏழையர் – பெண்கள்.
படை விழி – வாள் போன்ற விழி.
இணைக்குடம் – கொங்கைகள்.
நம்புடை – நம்மிடம்.
பெயர் – விளங்கிய.

இடை, நுதல், விழி, வாய், கொங்கைகள் ஒவ்வொன்றும் சிறிது சிறிதாக மயக்க, நம்மிடம் விளங்கிய அறிவெல்லாம் கொள்ளை போயிற்றே என்பார்.
பிரபுலிங்க லீலை – 4.34
*************************
திருநீறும் மயிலை உண்டாக்குதல்
***********************************
4.34 இனத்தியல் பாமறி வென்ப துண்மையே
மனத்துயர் செயுமயல் மாற்று நீறுதான்
அனிச்சமெல் லடியினார் நுதல டுத்தலும்
பனித்துடல் வெதும்புமால் படுத்தலா லென்பார்.

இனத்து இயல்பு ஆம் – ஒரே இடத்தினது தன்மையை உடையதாம்.
மயல் மாற்றும் – மயக்கினைக் கெடுக்கும்.
அனிச்சம் – அனிச்சப்பூ.
நுதல் அடுத்தலும் – நெற்றியை அடைதலும்.
பனித்து – நடுங்கி.
வெதும்பும் – வேகும்.
மால் படுத்தலால் – மயக்கினை உண்டாக்கலால்.

மன மையல் துன்பம் தருவது. மாந்தர் மனமயலை மாற்றுந் திருநீறு. நமக்கு மனமயலை யுண்டாக்கியதன் காரணம் மங்கையர் நெற்றியைச் சார்ந்ததுவேயாம். இனத்தியல்பாம் அறிவு என்பது மெய்தான் என்று சிலர் கூறினர்.
பிரபுலிங்க லீலை – 4.35
*************************
கண் நஞ்சின் கடுமை உரைப்பேம் எனல்
*****************************************
4.35 தொல்லைநஞ் சடர்துயர் சொல்லக் காத்தவன்
வல்லிபங் குடையருள் மதுகை நாயகன்
செல்லுமங் கையர்விழி நஞ்சு செய்வதும்
சொல்லுதும் அவனொடு தொழுதுநா மென்பார்.

தொல்லை – முன்நாளில்.
வல்லி – கொடிபோன்ற இறைவி.
அடர்துயர் – வருந்திய துன்பத்தை.
விழிநஞ்சு செய்வதும் – கண்ணாகிய நஞ்சு செய்யும் துன்பத்தையும்.

முன்னாளில் நஞ்சை உண்டு உலகைக் காத்தவன்; அவன் கொடிபோன்ற உடலுடைய இறைவியின் நாயகன். அவனைத் தொழச் செல்லும் மங்கையர் விழி சிந்தும் நஞ்சையும் உண்டு காக்கவேண்டும் என அவனைத் தொழுது வேண்டினர்.