சிவ வாக்கியம் – 515

சிவவாக்கியர் பாடல்கள் – 515                                ***********************************************

515.எத்திசையெங்கு மெங்குமோடி யெண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ
பத்தியோடு யரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தியின்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.

 

எல்லாத் திசைகளிலும் எங்கெங்கும் ஓடிச் சுற்றி வந்து, எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதால் சுத்த ஞானியாக ஆக முடியுமா? மெய்பக்தியோடு ஈசன் திருவடியாம் கண்ணுக்குளே உற்று நோக்கித் தவம் செய்யாத பாவிகளே! இம்மெய்த்தவம் செய்யாத நீங்கள் பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். உங்களுக்கு முத்தி கிட்டாது.

சிவ வாக்கியம் – 514

சிவவாக்கியர் பாடல்கள் – 514                              ***********************************************

514.செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

 

வயிரம் பாய்ந்த செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். அதே மரத்தில் கொம்பில்லாத கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு மிதிக்கின்றீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து, உணர்ந்து, அவனையே நாடி நோக்கிக்கொண்டே இருக்க வல்லவரானால், இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், எந்த ஒரு மலமும் இல்லாது மனம் மாசற்றுத் தூய்மையடையும். அங்கே ஈசன் குடியிருப்பான்.

சிவ வாக்கியம் – 513

சிவவாக்கியர் பாடல்கள் – 513                                ***********************************************

513.முத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியெங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.

 

சீவமுக்தி அடைவதற்கு முன் சகல சித்திகளையும் இங்கு நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் பல சொல்லி, சாமி வேடம் பூண்டவர், தினம் தினம் தன் வயிறு வளர்க்க, மெய்ப்பொருள் அறியாது ஞான விளக்கங்களையும், நீதிக் கதைகளையும் சொல்லி, குரு காணிக்கை என்னும் பெயரில் பணம் பறிப்பார்கள். ஞானத்தை விலை கூறி விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.