Tag Archives: அடி

கந்தர் கலிவெண்பா – 19

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
************************************************************************

19. இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தருதெய் வீக வடிவும் – உளந்தனிற்கண்(டு)
ஆதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியவைந்து
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியா யைந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால்

பருதி – சூரியன்
ஆதரிப்போர் – விரும்பும் அன்பர்
அகத்தாமரை – இஅதயத் தாமரை
மீது – ஆகாயத்தில்
ஓதியவைந்து – அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும்
மந்திரம் – மனத் திறன்
சோரி – இரத்தம்
வான் – பெரிய
பதம் – அடி
முடியா – முடியாக
தொந்தம் – தொடர்பு
வன்னம் – எழுத்து வழி
தொக்கு – தோல்
பந்தனை – அமைப்பு

நூறாயிரம் கோடி இளஞ்சூரியன் வீசும் ஒளிகொண்ட தெய்வத் தன்மை உடைய திருவடிவும், நெஞ்சிலே நினைந்து காணப்பெற்று அன்பு செலுத்துவோருக்கு அரிய உயிராக அவர்களின் உள்ளத் தாமரையில் வீற்றுள்ள தெய்வத் தன்மை பொருந்திய விளக்கொளி போன்றவனே!

அகரம், உகரம், விந்து, நாதம் ஆகியவைகளால் ஆகிய ஓங்கார தத்துவத்தில் விளங்கும் ஒளிக்கு உள்ளீடாகக் காணப்படும் அறிவு ஒளியாய், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலுக்கும் உரிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து பெரிய உருவெடுத்து நின்றவனே!

தாங்கமுடியாத வலிமையுடைய மந்திரங்களே இரத்தமாகவும், பெருமையுடைய பதங்களே தலையாகவும், பதங்களாகத் தொகுக்கப்படுவதற்குரிய எழுத்துக்களே தோலாகவும், அமைப்பால்……….

ஞான வெட்டியான் 1500 – 29

ஞான வெட்டியான் 1500 – 29
##############################

தத்துவ உற்பத்தி
##################

29.நடுவணை தனிலேறி சிவசிவ
………நாடிய குண்டலி வட்டத்துள்ளே
அடிநடு முடியறிந்து சுடரதில்
………அனுதினம் வாசிகொண் டமிர்தமுண்டு
படியறிந் திசைநாதம் சிவசிவ
………பத்துமொரு மித்துவரு பழக்கமதால்
வடிவுள்ள செகசோதி கமலமலர்
………வந்துபணிந் தவனான் காணும்.

நடுவணை – நடுத்தண்டாம் முதுகு எலும்பு, பரவெளி, இடைவெளி.

படி – விதம்

சிவசிவ எனும் மந்திரத்தை நாடி ஓதி வட்டமாம் மண்டைக்குள்ளே, தினந்தோறும் குண்டலியின் அடி நடு முடி கண்டு, வாசி எனும் உயிர்(மூச்சு)க் காற்று கொண்டு அதில் நடுவே மேலேறி அமிழ்து உண்டு, நாதங்கள் பத்தும் ஒருமித்து வரும் பழக்கம் வரும் விதம் அறிந்ததால், அழகுள்ள பிரபஞ்ச சோதியாம் இறையடி (கமலமலர்ப் பாதம் – இரு விழிகள்) வந்து வணங்குபவன் நானாவேன்.