Tag Archives: அருள்

கந்தர் கலிவெண்பா – 5

5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி – யேகத்

திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்

தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று கருவிகளாகிய விருப்பம், அறிவு, செயல் என்ற மூன்றினால், எல்லாவற்றையும் ஒடுக்கும் பொருளாகியும், பாதுகாக்கும் பொருளாகியும், உண்டாகும் பொருளாகியும் நிற்பவனே!

ஒளவைக் குறள் – (101-110)

2. திருவருட்பால்
****************
11. அருள் பெறுதல் (101-110)
******************************
101.அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.

அருளினால் மும்மலங்களாகிய மூன்று முடிச்சுகளை (கிரந்தித்திரயங்களை) ஒழித்து அறிவாகிய    பிரணவத்தையும் நிலைப்படுத்திக் கொள்ளலாம். “அருள்’ என்பது சிவம் வெளிப்பட்டு நிற்கையில் அதனிடத்தில் இருந்து வெளிப்படும் கலைகளே.

ஞானிகளின் நிலையடயாதோர் மும்மலங்களுடைய குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள். அவை ஆணவம், கன்மம், மாயை ஆம். இம்மூன்றுக்கும் மூலப்பொருள்   முறையே உருத்திர முடிச்சு (கிரந்தி), விட்டுணு முடிச்சு (கிரந்தி), பிரம முடிச்சு (கிரந்தி) ஆகும். மூலப்பொருள்களை விட்டு, குணங்களை  ஒழிக்க முயலுவோர் ஆகாயத்தை வெட்டப் பார்க்கிறவர்களே.   ஆகையால் மும்முடிச்சுகளை அடையாளம் கண்டு ஒழித்தல் வேண்டும்.

திருமந்திரம்:

“ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்
காணும் முளைக்குத் தவிடுமி யான்மாவுந்
தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்துமே.”

காணும் = முளைக்கின்ற. தாணு = சிவம்.
தண்டுலம் = அரிசி.

ஆணவம் உமியை ஒத்தது. மாயை தவிட்டை ஒத்தது. கன்மம் முளையை ஒக்கும். ஆருயிர் அரிசியை ஒக்கும். ஆவி கலப்புத் தன்மையால் சிவனுடன் பிரிவின்றி நின்றாலும் அரிசியை ஒக்குமேயன்றி சிவனை ஒவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விலக்கிச் சிவபெருமானின் திருவடியை ஒன்றியிரு.

சிவஞான சித்தியார் :

“மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடுமிப்போல்
மம்மர்செய் தணுவி நுண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போகபந்த போத்திருத் துவங்கபண்ணும்
இம்மல மூன்றி னோடு மிருமல மிசைப்ப னின்னும்!”

102.இருளைக்  கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.

மாயையாகிய பிரமமுடிச்சை நிலைப்பட்ட மனத்தாலும், சிந்தனையாலும் நீக்கிவிட்டால் சிவகலை சேர்ந்து  வெளிப்பட்டு நிற்கும்.

பிரம முடிச்சு :

அஞ்ஞானம், இருள், அறிவின்மை, இச்சை (காமியம்)

விட்டுணு முடிச்சு :

உலக ஆசைகளாம் தீனி, யோனி, பொருள் ஆசை, ஆணவம்.

உருத்திர முடிச்சு :

உலகப் ஒளி, ஞான ஒளி, உலகாங்காரம்,  ஞானாங்காரம்  (இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து)

103.வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.

வாய்மையாம் உண்மை, அசைவற்ற(சலனமற்ற)        மனம், மாசற்ற புனிதம், ஆகியவைகளினாலேயே       சிவ  அருளானது கலைவீச ஆரம்பிக்கும்.

104.ஒவ்வகத்து ணின்ற சிவனருள்  பெற்றக்கால்
அவ்வகத்து  ளானந்த மாம்.

ஓங்காரமாகிய பிரணவத்திற்குள் நிற்கின்ற சிவகலையை பெற்று அடைந்தால், அச்சிவ கலையினுள் பேரானந்தமாகிய இறைவன் இருக்கிறான்.

105.உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.

நிலைபெற்ற, ஒளியுடைய சிவகலையை அடைந்தால்    நாம் நினைக்கும் (வீடுபேறுக்குடைய) காரியங்களை முடித்துக் கொள்ளலாம்.