Tag Archives: ஆயுள்

22.ஆயுள்

என் தாத்தன்(எத்துணை தலைமுறை தெரியாது) திருமூலனின் கூற்று(பாடல்):

“பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.”

புணரும்பொழுது ஆணின் உயிர் மூச்சு ஐம்பூதங்களிலும் பரந்து ஓடினால் பிறந்த உயிருக்கு அகவை(ஆயுள், வயது) நூறாம். நான்கில் ஓடினால் அகவை எண்பதாம்.

“பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.”

ஆணின் உயிர்க்காற்று அளவில் குறைந்தால் பிறக்கும் பிள்ளை குள்ளனாகவும் அங்கம் குறைந்தவனாகவும் இருப்பான். ஓடி இளைத்தவன்போல் உயிர்ப்பு இருப்பின் பிள்ளை முடமாகப் பிறக்கும். உயிர்ப்பு இடைநிலைப் பட்டிருந்தால் கூனாகப் பிறக்கும். உயிர்ப்புக் காற்றின் நிலை மாதர்க்கு இல்லை. ஆணுக்கு மட்டுமே.

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.”

புணருங்கால்(கூடும்போது) அம்மையின் வயிற்றினில் மலம் மிகத் தங்கி
இருந்தால் பிள்ளை மந்தமாயிருக்கும். சிறுநீர் மிகுந்திருக்க ஊமையாகும். இரண்டும் சமமாக இருப்பின் குருடாகும்.

“வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.”

(இப்பாடலை எழுதவே மனம் மருள்கிறது)

அத்தம் = கை
குழவியின் உச்சந்தலையில் உயிர்ப்பு ஓசையானது உச்சிக்குநேரே அளவாய்த் தோன்றினால் உத்தமம். ஆயுளுண்டு. அளவில் மிகுதியானால் ஆயுள் ஆறு நாட்களே. அதுவும் இரண்டு மடங்கானால் ஒரே நாளில் முடிவுறும்.

இதை இயன்றவரை தவிர்ப்பதுஎப்படி?

1. புணர்ச்சிக்கு முன்னர் உடலுறுப்புக்களைச் சுத்தம் செய்தல் வேண்டும். (வயிறு, உறுப்புக்கள்)

2. தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட வேண்டும்.

3. உயிர்காற்று(சரம்) இரு நாசித் துவாரங்களில்எங்ஙனம் செல்லுகிறது எனக் கவனித்தல் வேண்டும். வாசி யோகமும் சரயோகமும் தெரிந்தால் நம் விருப்பத்தின்படி உயிர்ப்பை வளைக்க முடியும்.

4. இல்லையெனில் மனத்தையும் நினைவையும் ஒன்ற வைக்கவேண்டும்.

கருத்தரிக்கக் கரு அவசியம். இக்((கரு))வை மனதில் நிறுத்துங்கள்.

இவையெல்லாம் மறைக்கப்பட்ட பிரும்ம இரகசியம். சொன்னால் தலை ரெண்டாகும். இதுஎத்தனை பேருக்குத் தெரிகிறதோ அத்தனை தலைகளாகும்.