Tag Archives: உடலின் பயன்

ஒளவைக் குறள் – (11-20)

1. வீட்டுனெறிப்பால்
***********************
1.2. உடம்பின் பயன் (11-20)
*****************************
11.உடம்பினைப் பெற்ற பயனாவ  தெல்லா
முடம்பினி  லுத்தமனைக்  காண்.

இந்த மானிட  உடலைப் பெற்றது,  இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம்.

12.உணர்வாவ வெல்லா  முடம்பின் பயனே
யுணர்க  உணர்வு  டையார்.

அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை (இவ்வுடலில்)  உணர்வதே  இவ்வுடல்  எடுத்ததின்  பயன் என்ற் அறிவர்.

திருமந்திரம்:

“உணர்வு மவனே யுயிரு மவனே
புணர்வு மவனே புலவி யவனே
யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே.”

புலவி = பிணக்கு. துணர் = கொத்து.
இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.

சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே.  உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.

பாம்பாட்டிச் சித்தர்:
*****************
அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!

13.ஒருபய னாவ  துடம்பின் பயனே
தருபயனாஞ்  சங்கரனைச்  சார்.

(தரும் – இக பரத்தைத் தரும்; சங்கரனை – தீமைகளையும், அல்லன   என்று  ஒதுக்கப்பட்ட, கூடாதவைகளையும் அழிக்கும் அரனை; ஒரு பயன் – ஒப்பற்ற தனிப்பெரும் பயன்)

“சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி” என்றும் ஆன்றோர்கள் கூறியிருப்பதால் தேகத்திலுறையும் (மெய்யில்+உறையும்) தெய்வத்தை ஆதியாகிய விந்துநாதமாகிய ஒலியால் உணர்ந்து அறிவதே மனுவுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற பயன்.

திருமந்திரம்:

“நாதமுடிவிலே நல்லாளிருப்பது
நாதமுடிவிலே நல்யோகமிருப்பது
நாதமுடிவிலே நல்ஞானமிருப்பது
நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே”

ஓசைமுடியும் இடமே திருவருள் வெளிப்படும் இடம். அதுவேஅகத்தவம். அத்தவப்பேறே திருவடி உணர்வு. அங்கேதிருநீலகண்டன் வெளிப்படுவான்.

“சத்தியார்கோயி லிடவலஞ்சாதித்தான்
மத்தியானத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே.”

சத்தியார்கோயில் = உடல்.  மத்தியானம் = மத்தியதானம்.
வாத்தியம் =நாதம்.

உடலாகிய கோயிலில் உயிர்ப்பை வலமூக்கின் வழிநிறுத்தினால் புருவநடுவாம் பரவெளியில் நாதமாகிய ஒலியினைக் கேட்கலாம். “தித்தித்தா” எனும் தாளத்திற்கேற்பக் கூத்தபிரான் வெளிப்படுவான். நந்திமீது ஆணை. இதுவே சத்தியம்.