Tag Archives: ஊழி

ஒளவைக் குறள் – (81- 90)

1. வீட்டுநெறிப்பால்
******************
9. உள்ளுணர்வு  (81- 90)
*************************
உள்ளுணர்வாவது அறிவாகிய ஓங்காரத்தின் சக்தியைக்கொண்டு யாவற்றையும் அறியும் தன்மை.

81.எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை

உண்ணிலைமை பெற்ற துணர்வு.

கணக்கற்ற முறை அசைவற்ற தன்மையை உண்டாக்கித் தவமியற்ற, அசைவற்ற நிலைமை ஏற்படுமிடமாகிய இருதயகமலத்தில், சிவத்தை நிலைபெற்ற தன்மையுடன் அடைந்ததே அறிவின் சக்தியாம்.
ஆக, தவத்தின் மூலமாய் அசைவையொழித்து, சிவத்தை இருதயகமலத்தில் நிறுத்த அறிவுக்கு அளவற்ற சக்தியுண்டாம்.

ஊழி என்பது ஐம்பூதங்கள் மறையுங்காலம். ஐம்பூதத்தின் சூக்குமமாகிய உடலுக்கு ஊழிக்காலம் மரணம். ஞான வினைக்கு ஊழிக்காலம் மனம் அழிதலாம். உணர்வென்பது அறிவின் சக்தியை அறிவின் வழியில் பயன்படுத்தலே யாம்.

வாசிட்டம்:

“தெரி பொருளுந் தரிசனமுஞ் சேரும் போதில் சேர்ந்த சுகமறிவு மிகச் சிறந்ததாகும்.” எனவும்,

“உள்ளும் புறமும் அசைவின்றி உயிர்மன்னு மடங்குமெனிற், றள்ளுறாமலொருக் காலுந் தாதுவெல்லாஞ் சடத்துறையும்” என்றும்

வாசிட்டம் – புசுண்டர் கதையில்:

“இனையயாரு மிந்தவறிவு யிறவா திருக்க வீதறிய, வினயமின்றி மிகச்சேர்ந்தார் வீணர் செருக்குமிகுமுரப்பு, முனையில் வின்னா ணோசையைப் போன்மூடர் –  கேட்பதிறப்பதற்கே,  யனையர் வீணாட் கழிப்பதலா லறியா வறிவையறியாரே.”
எனவும் கூறியிருத்தல் காண்க.

82.பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.

நன்மையைய் கொடுக்கும் அறிவானது அடைந்த நன்மை, பல முறைகளாக அசைவற்ற மனத்துடன் சிவத்தை அருச்சித்து சிவவொளியை அடைவதே.

83.எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.

உணர்வாகிய அறிவானது அகத்தவத்தினாலல்லாது வேறு விதத்தால் முழுமையடையாது.

84.முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.

பிறப்பு – உடல்

முன்னர் முயன்று தவத்தால் ஏற்றிய அகத் தீயால்தான் உணர்வாகிய அறிவு பூரணம் பெறும். அதாவது, முதலில் தவத்தைச் செய்து அதனாலுண்டாகிய சக்தியை உணர்வாகிய அறிவு அடையும்.

‘முன்னை’, ‘பின்னை’ என்பதை முன்சென்மம், பின்சென்மம் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. இத் தேகமெடுத்து என்ன பயன்? இதிலுள்ள அறிவின் கதியென்ன?

வாசிட்டம் சனகனின் கதையில்:

“சங்கற்ப நாசத்தா லெளிதாக மனநாசந்தானே யெய்து,  மங்குற்ற மனமிறக்கிற் சனன மரணங்களெனுமரமுமாயு,  மிங்கிப்பா லெனைத் திருடுங் கள்வனை கண்டேன் – கண்டேனிவன்பேர் நெஞ்சம்,  பொங்குற்ற நெஞ்சத்தா
னெடுநா ணொந்தே னின்று பொன்று விப்பேன்”

இதைப் புரிய மருமமுடிச்சவிழும்.

85.    காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.

காயக்கிலேசம் – மரணபயம்

உடல் ஒரு நாள் அழிவுறும் என உணர்ந்ததன் பயன், இடைவிடாத அகத்தவத்தால் அறிவுக்குள் உணர்வை அடைவதே.