Tag Archives: எட்டு மலை

விவேக சிந்தாமணி – 1.125

1.125.இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண்மாறு
மந்தர நிலைகள்பேற மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயுந் தாரணியிற் றேசுமாளும்
அந்தணர் கருமங்குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

(இப்படியும் கூறுவாருமுண்டு)

இந்திரன் பதமுங் குன்று மிறையவர் பதங்கள்மாறும்
மந்தர முதலா வுற்ற மலைகளின் நிலைக ணீங்கும்
சந்திரன் கதிரோன் சாய்வர் தரணியிற் றேயமாளும்
அந்தணர் கருமங் குன்றி னகிலமீ துயாவரே வாழ்வர்.

அந்தணர் – வேதியர்
கருமம் – செயல்கள்(வேதம் ஓதல் முதலியன)
குன்றின் – குறைந்தால்
இறையவர் – அரசன்
மந்தர நிலை – மந்தர மலை
தேயம் – தேசம்

வேதியர்கள் தத்தம் தொழிலான வேதம் ஓதல், ஓதுவித்தல், யாகம் செய்தல், திருமணம் முதலிய நற்கருமங்களையும், நீத்தாருக்கு(இறந்தவருக்கு) உரிய தேவ கருமங்களையும் செய்யாவிடில், இந்திரன் செல்வம் குறைந்து இந்திர பதவியும் பறிபோகும்; மந்தரம், கயிலை, இமயம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் ஆகிய எட்டு மலைகளும் நிலைகெட்டு நிலை பெயர்ந்து விடும்; சூரியன் சந்திரன் ஆகியோர் தம் நிலைகெட்டுச் சாய்வார்; இப்பூமியில் உள்ள தேசங்கள் அழியும்; இன்னும் இவ்வுலகில் யார் வாழ்வார்?