Tag Archives: ஏரொளி

ஒளவைக் குறள் – (181-190)

2. திருவருட்பால்
****************
19.தூயவொளி காண்டல்  (181-190)
*********************************
181.தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி.

உதித்து உருவாகி நிற்குந் தத்துவங்களையும், அதன்  தொடர்புகளையும் நீக்கி, தூய்மையான தத்துவாதிகளற்ற வெளிப்பிரதேசமாய்த் தோன்றும் பொழுது தூய ஆத்மஒளி உதிக்கும். சுருங்கச் சொல்லின் அஞ்ஞான தத்துவங்களின் தொடர்பு அற சிதாகாயத்தில் மலமறுத்துவிட்டால் ஆன்மவொளி ஒளி வீசும்.

வாசிட்டம்:

“அன்றியே யதுதனையுந் தீரநீக்கி யறிபொருளின் முடிவான  வறிவாற்றுன்னி
யென்றுமுப சாந்தனாய்ப் பளிங்குப்போலுள் ளொளிமேவிச் சீவனொருமித்து நிற்பனன்றுணர் சிற்சுகராகிப் பெரியோராகி ஞானபரராய்ப் பரம நன்றாய்ப் பெற்றோர் நின்றசைவார் புறத்தின் மயிர் பீலிபோல நிலைகலங்கார் மேருவைப்போனெஞ் சினுள்ளே.”

திருமந்திரம் :

“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே.”

உண்டில்லை = உலகம் உண்டு, இல்லை என வாதாடும் உலகில்.
பண்டு = கேவல நிலை.  பரங்கதி = முத்திநிலை.
கண்டில்லை மானிடர் = இதுவரை காணாத மானிடர்.
கண்ட கருத்து = அறிந்த அறிவு. விண்டு = உரைக்க.

சுட்டியுணரப்படும் உலகம் உண்டு எனவும், இல்லை; இது கானல் நீர் எனவும் வாதாடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. புலம்பு நிலையும், புணர்வு நிலையுங் கடந்த புரிவு நிலையாம் திருவடி பேறு இல்லையோவென ஐயுற்று நின்றன. ஏனைப் பொருள்களைப்போல் சுட்டுணர்வு சிற்றுயிர்களுக்கு எட்டாது. அத்திருவடிப் பேறு மானிடர்களுக்கும் மற்ற ஒரு சில உயிர்கட்கு மட்டுமே கிட்டும். சிவத்தைக் கண்டேன் என்றால் அது உண்மையாக இருக்க ஒண்ணாது. அத் திருவடிப் பேறு சொல்லவியலா அறிவுப் பேரொளியாம்; அது உயிர்களின் அகத்தே அமர்ந்துள்ளது.

182.தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம்.

வீடாகிய உடலில் மறைவின்றி சிவவொளியைக் காணில் அண்டத்தில் உள்ளனவற்றையெல்லாம் தெளிவாகக் காணலாம்.

திருமந்திரம்:

“புகலெளி தாகும் புவனங்க ளெட்டு
மகலொளி தாயிரு ளாசற வீசும்
பகலொளி செய்ததுமத் தாமரை யிலே
யிகலொளி செய்தெம் பிரானிருந் தானே.”

அகலொளிதாய் = அகண்ட ஒளி பரவி.
பகல் ஒளி = கதிரவன் ஒளி.
அத் தாமரை = அந்த உள்ளத் தாமரை.
இகலொளி = கதிரவன் ஒளிக்கு மாறுபட்ட ஒளி.

அறிவொளி கண்ட உயிர்க்குப் புவனங்கள் எட்டுக்குள்ளும் எளிதாகப் புகுந்து அனைத்திலுமுள்ள நிகழ்வுகளை உள்ளபடி உணர்ந்து உரைத்தல் எளிது. அறிவின் அறிவாம் சிவ ஒளி கதிர் வீச மலம் முதலிய குற்றங்கள் மடிந்து அகலும். உயிரின் உள்ளத் தாமரையிலே கதிரவன் ஒளிக்கு மறுபட்ட சிவஒளி செஞ்சுடர் விட்டு ஒளிரும். ஆங்கே சிவனிருப்பான்.

183.மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும்.

தலையுச்சிக்குமேல் பதினாறு அங்குலத்தளவில் மின்னலைப் போல், சுடரைப்போல் ஒளி வெளிப்பட்டு காணில் அது முன்பிருந்ததுபோல் உந்திக்கமலமாம் பிரணவ வீட்டில் திரும்பி வந்து புகுந்துவிடும். அதாவது, மூலாக்கினியை எழுப்பி சிரத்துக்கும்மேல் கொண்டுவந்து நிறுத்தி அதன் மூலமாகத் தேகம், தேயம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு உந்திக் கமலத்தில் சேர்த்துவிட வேண்டும்.

184.பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி.

எல்லாவற்றையும் விளக்கிக் காட்டும் ஆன்ம ஒளியானது, தூய்மையானதாயும்  படிகத்தின் நிறத்தையும் வலம்புரிச் சங்கின் நிறத்தையும் பாலின் நிறத்தையும் ஒத்து உச்சியில் அசைவுடன் இருக்கும்.

திருமந்திரம்:

“ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.”

மூலாதாரத்தில் தோன்றுவது நாலிதழ்த் தாமரை. அதன் உள்ளிருந்து உச்சித்துளைவரை செல்லும் வீணாத் தண்டின் இருபுறமும் ஒளிவீசும் (ஏரொளி). ஏரொளியின் துணையால் விந்துவின் ஒளி தோன்றும். நாத ஒலி கேட்கும். ஒப்பிலாத அந்த ஏரொளி எங்கும் நிறையும். அதனுள்ளே சுடர்ச் சக்கரம் அனல் பிழம்பாகி நிற்கும்.

185.சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும்.

மேற்கூறிய ஆன்மவொளியைச் சங்கின் நிறம்போல் கண்டால் மற்றவையெல்லாம் உள்ளங்கை நெல்லியெனத் தெரியும்.