Tag Archives: கடவுள்

46.விளக்கம் தேவை!

விளக்கம் தேவை!
********************

ஒரு சாதாரண மனிதன் கூட யாரவது தவறு செய்தால் காலப் போக்கில் மன்னித்து விடுவான். ஆனால், நாட்டில் நடக்கும் அநியாங்களை கொடுமைகளையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் கடவுளை வணக்கவேண்டுமா?

தங்களின் முதல் வினாவுக்கு அடிப்படை:-

இறைவன் இருக்கிறானா? இல்லையா?

இறைவன் ஒருவனே. அவன் இருக்கின்றான். சந்தேகமே இல்லை.

ஞானிக்கு சந்தேகத்தில் (சந்+தேகத்தில் = ஒளிபொருந்திய உடலில்) இருக்கிறான்.

பக்திவழி செல்வோனுக்கு ஆலயத்தில் உள்ள கல்லில் இருக்கின்றான்.

சித்தர்களுக்குச் சித்தமாக இருக்கின்றான்.

குழந்தைக்குத் தாயாக உள்ளான்.

நல்லவைகள் நடக்கும்போது “இது என் வலிமையால்”என மார்தட்டி மகிழ்பவன், துன்பம் வரும்போது “இருந்தாலும் இந்த ஆண்டவனுக்கு இரக்கமே இல்லை.என்னைக் கொடுமைப் படுத்துகிறான்”எனப் புலம்புவது நியாயமா? பின்னர், இப்படிக் கொடுமைப்படுத்துவன் இறைவனில்லை; அவனைத் தொழத்தான் வேண்டுமா? எனக் கேட்பதும் நியாயமோ?

குழந்தை தாயிடம் பாசம் காட்டவேண்டுமா என்னும் வினாவிற்குக் கிட்டும் விடையே, இறைவனைத் தொழத்தான் வேண்டுமாவெனும் வினாவுக்கும் விடை.

அன்றாட செய்தித்தாள் வாசித்தால் பெண் குழந்தை சித்திரவதை.கற்பழிப்பு.
ஒரு வ்யது குழந்தை படும் பாடு; பட்டவர்களுக்குத்தான் அந்த வேதனை, வலி தெரியும். மனதில் வடு.. சிறுகுழந்தை என்ன் செய்தது…??
அப்படி என்றால் ஒரு சாதாரண மனிதனின் இதயத்தைவிடக் கடவுள்
இதயம் கல்லானதா? சிறுமையானதா?

இறைவன் மனிதனை நித்தியத்திற்க்காகவே படைத்தான்.

நாமும் குழந்தைகளைப் பெறுகிறோம். அதற்கு உடல் நலமில்லயெனில் எங்ஙனம் துடிதுடித்துப் போகிறோம்? அந்த டாக்டரிடம் போகலாமா? இந்த டாக்டரிடம் போகலாமா? டாக்ஸியைக் கூப்பிடு. என பதைபதைத்துப் போகிறோம். நம் குழந்தைக்கு நாமே இவ்வளவு அக்கரை காட்டி அல்லோகலப் படுத்தும்பொழுது, சர்வ வல்லமைகொண்ட இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தர இசைவானா?

ஆயிரத்தெட்டு அண்டங்களையும், அதில் உள்ள சகல சீவராசிகளையும்
நமக்காகத்தான் படைத்துள்ளான். வேப்பம்பூவில் உள்ள தேனைஎடுக்க தேனீயைப் படைத்து, அதற்குப் பூவினுள்ளே நுழையும் அளவிற்கு உறிஞ்சுகுழல் கொடுத்துள்ளான். தேனீ அங்ஙனம் உறிபஞ்சிச் சேர்த்து வைத்திருக்கும் தேன் மனிதனுக்காக. இவ்வளவு இரக்கமுள்ள இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தருவானா?

கலிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமைகளுக்காக இறைவனை இரக்கமில்லாத அரக்க இதயங்கொண்டவன் எனக் குற்றம் சாட்டுவதில் எமக்கு உடன்பாடில்லை.

போன பிறவிப் பலன் என்று சொல்லாதிர்கள்.. அப்படி என்றால் கடவுளின்
கையில் எதுவும் இல்லையா?

விதிஎன்பார் சிலர். விதி என்பது நாம் நமக்கு வரைந்துகொள்ளும் ஒரு
எல்லைக்கோடு. நமக்கு நாமே விதிக்கும் விதி. இது தவிற
தலையெழுத்தொன்றுமில்லை.

புடம் போடுகிறான். அப்பொழுதுதானே நாம் தங்கமென்பது புரியும் என்பார் சிலர். இவன் தங்கமென அடுத்தவருக்குப் புரிந்து இவனுக்கு ஆவதென்ன?
ஆக, உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

கடவுளளை வணங்கி பிரயொசனம் இல்லையே???

இறைவன் படைத்தவன்.
தெய்வம் வழி நடத்துவது.

முதலில் தெய்வம் என்றால் என்ன? தெய்வம் மக்களுக்கு எதற்காக வேண்டும்? என்னும் வினாக்களுக்கு விடையறிதல் வேண்டும்.

என்பத்துநான்கு நூறாயிரம் சீவராசிகளில், மனிதனுக்குத்தான் எல்லாம்
தெரியும். தனக்கு வேண்டிய உணவைத்தேடிக்கொள்ள, நோய் வந்தால்
போக்கிக்கொள்ள, கல்வி கற்க ஆகிய எல்லாவற்றையும் செய்ய மனிதனால் முடியும். அப்படியிருக்க, இவனுக்குத் தெய்வம் எதற்கு? பணம் சம்பாதிக்கவா? பணத்தை உண்டாக்கியவனே இவன்தானே? விந்து வெளியேறி நாறிச் செத்தால், நரகமென ஒன்றிருந்தால், அங்கே கற்பகோடிகாலத்திற்கும் அவத்தைப்பட வேண்டியதுதான்.
அதற்காகவா இறைவன் மனுவுக்கு அறிவைக் கொடுத்தான்? இதற்காகவா வேதங்களும் கலைஞானங்களும் இவனுக்கு இறக்கப்பெற்றது? எந்தக் குறை இருப்பினும் பரவாயில்லை. ஏழையாயினும், பிள்ளைப்பேறு அற்றவனாயினும், நோய்நொடியில் அவத்தையுருபவனாயினும், அவன் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. வேறு எது இல்லா விட்டாலும் தெய்வம் கட்டாயம் அவனுக்கு வேண்டும். எதற்காக?

எமனிடம் போராடிப் பிறவிப்பிணியைப் போக்கவே இறைவன் வேண்டும். எமபடரை நீக்கிச் சிவமயமாக்கும் (விந்தடங்கிச் சாவதே சைவம்) ஒரு செயலுக்குத்தான் தெய்வம் தேவை. சாகாக் கலையாகிய பிரும்மவித்தை யார் கையிலிருப்பினும் அவரே தெய்வம். அதுவே நிசமான செயல்.

ஆக, இறைவனோ, கடவுளோ, தெய்வமோ எப்படியழைத்தாலும் சரி; அவர்களின் வேலை, நீங்கள் குறிப்பிட்டபடி நடக்கும் கொடுஞ் செயல்களைக் களைவது அல்ல. உங்களின் ஆன்மாவைச் சுத்தம் செய்து, எமன் கையில் சிக்காமலிருக்கும் (விந்தொழுகிச் சாகாமல்) செயலுக்கு உதவுவது ஒன்றே.

அப்புறம் ஏன் வணங்குகிறோம்? எனும் வினா வருகிறதல்லவா?
பசி வந்த குழந்தை அம்மாவை நோக்கி அழுவது அமுதுக்காக. அதுபோலத்தான்.

இங்க பாருடா!!! ஞானவெட்டியான் மேலே தெய்வத்துக்கு உன்னை நிமிடத்துக்கு நிமிடம் காப்பாத்துவது வேலை இல்லை என்றார். அப்புறம் காப்பாத்து என்று வணங்கு என்கிறார். முன்னுக்குப் பின் முரணாய் இருக்கிறதே!!!

ஆமாம். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் இறைவனை நெஞ்சுருக வணங்குதல் வேண்டும். ஆனால் ஞான மார்க்கத்துக்கு வந்துவிட்டால், இறைவன் எமபடரை நீக்கும் குருவாகி விடுகிறான்.
சித்தம் சுத்தமாகிவிட்டால் அத்தன் தானே குடியேறுவான்.