Tag Archives: கலி
கந்தர் கலிவெண்பா – 16
பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோக மளிக்கு முகமதியும் – தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம்
பாச இருள் – கட்டாகிய ஆணவம்
துரந்து – துரத்தி
கதிரில் – கதிர் போல
புத்தேளிர் பூங்கொடி – தெய்வயானை அம்மை
தாகமுடன் – விரும்பியதை அடையும் அவாவுடன்
கொந்து – பூங்கொத்து
அவிழ்ந்த – விரிந்த
வேரி – தேன்
கடம்பு – கடப்பம்பூ
விரை – வாசனை
குரவு – குராமலர்
சயிலம் – மலை
பாரம் – பெருமை
பாசமாகிய இருளை ஓட்டிப் பல ஒளிக்கதிர்கள் வீசும், வாசனைப் பூப்போன்ற வட்டமான திருமுகமும், அன்புசெய்து தன்னை அனுபவிக்க விரும்பும் வள்ளியம்மைக்கும், தெய்வயான அம்மைக்கும் ஆசை ஊட்டுகின்ற சந்திரன் போன்ற திருமுகமும், திருவருளைப் பெறும் ஆசையுடன் தனது திருவடியில் வந்து சரணடைந்தவர்கள் மகிழும்படியாகப் பல வரங்களும் கொடுத்து அருளும் தெய்வத் தன்மை உடைய தாமரை போன்ற ஆறு திருமுகங்களும், விரிந்த பூங்கொத்துக்களை உடைய தேன் நிறைந்துள்ள கடப்பம் பூவும், வாசனை உடைய குரா மலரும் பொருந்தி விளங்குகின்ற பெரிய மலை போன்ற பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானே!