Tag Archives: கலை

ஒளவைக் குறள் – (131-140)

2. திருவருட்பால்
*****************
14. கலை ஞானம் (131-140)
*****************************
131.சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது.

“இரவி சங்கரன் – ஈசுவரி திங்கள்” என வீமேசுவரம் கூறுகிறது. ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம்.

வாசிட்டக்காரர் கூறுவது:

“விராவிவரும் புறநின்று மபான னென்னும் வியன்மதிய மேனியெல்லாங்
– குளிரவிக்கும்
பிராணனெனுஞ் சூரியன்றான் கனலாயுள்ளே பேசியவிவ் வுடற்பாகம்
– பிறக்குப் பண்ணு
மிராதுழலும் பானனெனு மதியினுட் சேரியற் கலலிகள் பிராணனெனு
– மிரவியாலே
யுராவி விழுங்கப் பட்டதெங்கே யந்தவுயர் பதமுற்றாற் பின்னையொரு
– நோயுண்டோ.”

132.அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு.

அயனங்கொள் சந்திரன் = தேய்வும் வளர்ச்சியும் பெற்ற சந்திரன் நோக்கி(கண்களினால்) சூரிய சந்திர கலைகளை ஒன்றித்தால் அதுவே முத்திக்கு வீடு.

திருமூலர்:

“அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.”

கதிரவனைச் சுற்றிச் சுழலும் எழுவகைக் கோள்களும், அகண்டமாகிய பல்வேறு அண்டங்களும், ஆங்குள்ள ஆவிகளும், இயங்குதிணை நிலைத்திணை உயிர்களும், அவைகளின் பண்புகளும், மிகப் பழைய மறையாம் திருவைந்தெழுத்தும், படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் சிவன் என்னுடன் விளங்கி நின்று அறிவில் காட்டுவதால் அவைகளின் அனைத்து உண்மைகளும் என் அறிவுக் கண்ணிற்கு எட்ட இயலா நிலயில் உள்ளது.

133.அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.

அறம் – ஆன்ம தெரிசனம்(தெரி+சன்+அம்)
பொருள் – ஆன்மாவொடு இருக்கும் அழியாச் செல்வங்கள்
இன்பம் – ஆன்ம ஆநந்தம்

சாகாமல் சாகும் வல்லமையுடையோர் (துஞ்சாதார் = நித்திரையை வென்றவர்கள்). ஐம்பூதங்களாலுண்டாகும் இந்திரிய சலனங்களை வெறுப்பதே அறம், பொருள், இன்பம் அடையச் சிறந்த வழி. (முக்கியமாக விந்து விரையம் தடுக்கப் படல்வேண்டும்)

134.ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.

சீவனாகிய சிவத்தொடு ஒன்றில், எல்லாப் பொருளும் இசைந்து வரும்; உலகத்தின் ஒளி போல, இத் தேசமாகிய உடலினுள்ளே ஒளி தெரியும்.

135.தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.

அகத்தவத்தால் தன்னைத் தானேயுணர்ந்து அறிந்தால் அவன் நினைவினில் உதிக்கும் கருத்துக்கள் பொன்போலாகிவிடும்.