Tag Archives: காமம்

விவேக சிந்தாமணி – 1.128

1.128. காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்கவந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புரட்டி வைக்குங்கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிகழுத்தறியுங் கத்திதானே.

காமமே, குல நெறியையும் நன்மையையும் கெடுக்கும் களங்கம்; வறுமைகள் அனைத்தையும் கொட்டி வைக்கும் பொக்கிடம்; முக்தி வழியை அடைத்துள்ள கதவு; அனைவருக்குள்ளும் பகை உண்டாக்கி கழுத்தை அறுக்கும் கத்தி.

பிரபுலிங்க லீலை-1.14

14. கன்றிய வைரிகள் காதுங் காதையும்
வன்றுயர் மதனநோய் வளர்க்கு மாற்றமும்
புன்றொழி லினர்வறும் பொழுது போக்கலும்
அன்றருள் அல்லமன் அமல லீலையே.

சினங்கொண்ட(கன்றிய) பகைவர்கள்(வைரிகள்) ஒருவருக்கொருவர் கொலை செய்துகொள்ளும் கதையும்(காதுங்காதையும்), காமநோயைப் (மதனநோய்) பெருக்கும் இழி தொழிலை உடையவர்(புன்தொழிலினர்) மயங்குமொழி பேசி வீண் பொழுது போக்கலும் நிறைந்திருக்கும் வேளையில் இந்த அருள் பொருந்திய அல்லமன் அமல லீலை(குற்றமற்ற திருவிளையாடல்) இயற்றப் பெற்றது.