Tag Archives: சத்தம்

ஒளவைக் குறள் – (141-150)

2. திருவருட்பால்
*****************
15.உருவொன்றி நிற்றல் (141-150)
************************************
141.எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.

எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல் உடலுக்குள் இருக்கும் பிரணவத்துள் இறைவனின் ஒளியும் இருக்கிறது.

மஸ்தான் கீர்த்தனைகள்:

“நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன
நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன
தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன
திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி
ஒக்க உலகமொரு கைக்குள் ளடங்கும்
நம் பரமுததன் குணங்குடி.”

142.பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.

பாலில் நெய் உறைந்துள்ளது போல, சிவாகம சாற்றிறங்களில் (பொதுவாக எல்லா சாற்றிறங்களிலும்) உள்நுழைந்து எங்கும் பரவி நிற்கும் சிவமாகிய இறை.

திருமூலர்:

“அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.”

அண்ணலாம் சிவன் தக்கவரின் வாயிலாக அருளிச்செய்த இருபத்தெட்டு ஆகமங்களில் உள்ள பாட்டுகள் (சூத்திரங்கள்) இருபத்தெட்டு கோடி நூறாயிரமாகும். விண்ணவர் ஈசனாம் சிவனின் விழுமிய மாண்பினை அவ்வாகமங்களின் வழியே உரைத்து அருளினார். அடியேனும் அச்சிவன் திருவடியினை எண்ணி ஏத்துவன்.

“அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
அண்ண லறைந்த வறிவறி யாவிடி
லெண்ணிலி கோடியும் நீர்மே லெழுத்தே.”

அண்ணலாம் சிவன் அருளிச்செய்த சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளவைகளின் மெய்ப்பொருள் விண்ணில் வாழும் அமரர்களுக்கும் விளங்கல் அரிதாம். அம் மெய்ப்பொருள் உண்மை கைவரச் செய்யும் சிவ உணர்வுச் சிறப்பினை அறியாவிடில் அவையெலாம் நீர்மேல் எழுத்துப்போல் பயன்தரா.

“பண்டித ராவர் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையு
மண்ட முதலான் அரன்(றஞ்) சொன்ன வாறே.”

பதினெட்டு மொழிகளிலும் கூறப்படும்  பொருட் கருத்தை உள்ளவாறு உணருபவர் பண்டிதர் ஆவார். அப்பதினெட்டு மொழிகளையும் தக்கார் வாயிலாக உலகினுக்கு அருளியவன் அரனாம் சிவனே.

143.கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.

உலக வழக்கம் என்னவெனில்:
கரும்பினில் கற்கண்டு போலவும், காயவைத்த பாலில் நெய் ஆடையாக வெளிப்பட்டு நிற்பது போலவும், அங்கியில் (நெருப்பில்) பழுக்கக் காயவைத்த இரும்பு உட்கொண்ட நீரைப் போன்றதேயாம்.
சாற்றிறங்களில் விரவியிருக்கும் இறையை அறியும் மனு மூன்று வகை:

உத்தமர்: ஆகமங்களை நோங்கிக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் பக்குவப்படுத்தி ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக் கொண்டு, சக்கையை எறிந்துவிடுவர். இவர்களைக் குறித்து, “கரும்பினிற் கட்டியும்” என்றார்.

மத்திமர்: ஆகமங்களைக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் புரிந்தவரை பிரித்து எடுத்து, சாற்றை எடுத்து விளங்கியபடி இயன்றவரை ஆன்ம இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு நூலையும் பாதுகாத்து வைப்பர். சாற்றைப் பிரித்துவிட்ட பின், மிகுதி உள்ளவரையில் நீக்க வேண்டியதையும் உள்ளிழுத்துக் கொள்வர். சக்கையாகிய தயிரையும் உட்கொள்வர். அதனால், “காய் பாலில் நெய்” என்றார்.

அதமர் : ஆகமங்களையே அறியார். அறிந்தாலும் சாற்றை உட்கொள்ள இயலவில்லை. இது குறித்தே, “இரும்புண்ட நீர்” என்றார். அதாவது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு எப்படி நீரை உட்கொண்டு ஒளிபொருந்திய வண்ணத்தையும் இழக்கும் நிலையாம்.

144.பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை.

பழுத்த பழத்தைப் பிழியின் இனிக்கும் சாறு வெளிப்படல் போல், ஞானமடைய விரும்பும் வினைஞன் இறையிருக்குமிடத்தை யறிந்து ஞானவினையில் சரத்துடன் நிற்கச் சிவமாகிய இறை வெளிப்படும்.

145.தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.

சிவமாகிய இறை ஒவ்வொரு உடலிலும் உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து சூரியனிலும், சந்திரனிலும் அணு உருவாய் நிற்கும்.

வாசிட்டம்: தேவ பூசை கதை:

“என்னதுடலிற்சிற்கதிரா யிலங்குதெய்வ நானென்னை
யுன்னுமனங் கண்வாக்குக்களுடைய சத்தித்திரளெல்லாம்
பின்னமின்றி நாயகனைப் பிரியாமகளிர் போனாளுந்
துன்னுமென்றேய நவரதந்தொடர் பாவனை செய்திடல்வேண்டும்.”

திருமந்திரம்:

“படர்கொண்ட வாலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
விடர்கொண்ட பாச விருளற வோட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.”

விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்துள்ள ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தில் அடங்கியிருக்கிறது. அதுபோல, திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய உயிர் வாழச் செந்நெறியினைத் தம் உள்ளத்தே அமைத்தனன். அந்த நன்னெறியில் சென்று எந்நாளும் துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றிலும் ஓட்டிப் பின்னர் அகத்தும் புறத்தும் ஐந்தொழில் செய்யும் எம்பிரானின் திருவடியில் ஒன்றித் திருநெறியை நாடுவது நன்மை தரும்.

“அணுவு ளவனு மவனு ளணுவுங்
கணுவற நின்ற கலப்ப துணரா
ரிணையிலி யீசனவ னெங்குமாகித்
தனிவற நின்றான் சராசரந் தானே.”

அவன் = சிவன். கணு = பேதம். தணிவு = எல்லை.

மிகவும் நுண்ணியதாகிய அணுவாம் உயிருள் சிவனும், அச்சிவனில் உயிரும் வேறறக் கலந்து நிற்பதை உணரார். ஒப்பிலாத சிவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கிறான். அதனால் அவனே இயங்கு திணையாகவும், நிலைத் திணையாகவும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆகிறான். அதைத் திருவடிக்கண்ணால் உணர்தல் வேண்டும்.

“அணுவி லணுவினை யாதிப் பிரானை
யணுவி லணுவினை யாயிரங் கூறிட்
டணுவி லணுவை யணுக வல்லார்க்
கணுவி லணுவை யணுகலு மாமே.”

அணுவாகிய உயிருக்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன், ஆதியாம் அம்மையை உடையவன் சிவபெருமானாம். அவன் அணுவுக்கு அணுவாய்த் திகழ்பவன். அவனைத் திருவருள் உணர்வால் அளவில்லாது நுணுகி ஆராய வல்லார்க்கு, அவனை அணுகுதல் கைகூடும்.