Tag Archives: சரநூல் சுருக்கம்

சரநூல் சுருக்கம்

# கால் மாற்றும் கலை பகுதி 2

சூரிய சந்திரக் கலைகள் இயற்கையாக நிகழும் நாட்கள் எவை எவை?

சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.

1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும். திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் – தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும். புதன் அன்று சூரியக்கலை ஓடினால் – மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும். வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் – பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.

2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும். சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும். ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும். செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.

3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும். வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும். மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.

காரிய சித்திபெற சர ஓட்டம் பார்ப்பது எப்படி?

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை கொடுக்கும். நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு. 12. உறங்குவதற்கு. மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-
1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல். 2. பொருள் வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு. 4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு. 10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது. சந்திர கலை பெண் தன்மையுடையது. நமக்கு இருபுற நாசியிலும் (சுழுமுனை) மூச்சோட்டம் சில நேரங்களில் மட்டுமே செல்லும். அந்நேரத்தில் நாம் இறைநினைப்புடன் தியானம் செய்ய சமாதி நிலை கிட்டும்

. முனிவர்கள், சித்தர்கள், இறையாளர்கள், அருளாளர்கள் எப்பொழுதும் தமது கலை திறனால் தமது மூச்சினை சுழுமுனையில் நிறுத்தி யிருப்பார்கள். அப்போதுதான் இறைநிலை விரைவில் கிடைக்கும். யாருக்கேனும் சுழுமுனை ஓட்டம் இருப்பின் அவர்கள் மெளனமாக அமைதியாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்நேரத்தில் நாம் என்ன சொன்னாலும் அது பலிக்கும். நல்லது மற்றும் கெட்டது என்ற விக்தியாசம் இல்லாமல் எது சொன்னாலும் பலித்துவிடும். எனவேதான் மேற்கண்ட இறையாளர்கள் கடிந்து ஒரு சாபமிட்டால் அது பலித்துவிடும். சுழுமுனை அழிவின் சக்தியாக உள்ளது. அதீத சக்தியுடையது. ஆண், பெண் தன்மையற்ற அலி தன்மையுடையது. எனவே சரம் தெரிந்தவர்களிடம் நாம் விளையாட்டாக நடந்துக்கொள்ளக்கூடாது. பெரும்பாலும் சுழுமுனை இயக்கம் பகல் 12 மணி அல்லது இரவு 12 மணிக்கு நடைபெறும்.

பாதி இரவில் பாவியேனை எழுப்பி தன்னுடன் இறைவன் கலந்ததாக வள்ளலார் கூறுவார். இறைவன் பாதி இரவில் வரக்காரணம், அந்நேரத்தில்தான் நமக்கு சுழுமுனை இயக்கம் நடைபெறும். இன்னும் சில உபாயங்களைக் காண்போம்.

1. எந்த ஒரு பயணத்தையும் சந்திரக்கலையில் துவங்கி சூரியக்கலை நடக்கும்போது செல்லவேண்டிய இடம் சென்றால் சென்ற காரியம் நிச்சம் வெற்றி.
2. சரம் ஓடும் பக்கம் “பூரணம்” என்று பெயர். சரம் ஓடாத பக்கம் “சூன்யம்” என்று பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில் ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம்.
3. சந்தரக்கலை நடக்கும்போது மேற்கும், தெற்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.
4. சூரியக்கலை நடக்கும்போது வடக்கும், கிழக்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.
5. மூச்சு உள்ளே இழுக்கும்போது வேண்டிய விருப்பம் நினைக்க அவை கைகூடும்.
6. மூச்சு வெளியே போகும்போது நமக்கு வேண்டாததையும் வெளியே தள்ளலாம். காமமே போ, சினமே போ, வறுமையே போ, சாவே போ என்பது போல சிந்தனை செய்ய அவை நடக்கும்.

சரஓட்டத்தின்படி தம்பதிகள், விரும்பிய குழந்தைகளை பெறுவது எப்படி?

‘நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர சொரூப நமோ நம்’ (திருப்புகழ்)

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தை தெரிவித்த பின்புதான் இறைவனுக்கே வணக்கம் செலுத்துகிறார் அருணகிரிநாதர்.

ஏனெனில் இந்த நாத விந்து இயக்கங்கள்தான் இவ்வுலகத்திற்கு அச்சாரம். ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்பார் வள்ளலார். அப்படி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ இந்த நாதமும் விந்துவும் தேவைப்படுகிறது. இவைகள் இன்றி இந்த உலகம் இயங்காது. எனவேதான் நாதத்தை சக்தியாகவும், விந்துவை சிவனாகவும் உருவகப்படுத்தி இந்து மதம் பல கதைகளை சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நாதவிந்து சொரூபிகளே!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகுமாகில் தரணி முழுதாளும் பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்)

குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவியும் அலியாம் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம்)

கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பக்கம் மூச்சு சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும். மாறாக பெண்ணுக்கு வலப்பக்கம் மூச்சும் ஆணுக்கு இடப்பக்கம் மூச்சும் சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும். இரண்டு பேருக்கும் ஒரே பக்கம் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் அலியாகும்.

விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும். எனவே, நாம் விரும்பும் குழந்தையினை பெற்றெடுக்கும் இரகசியம் நமது மூச்சில்தான் உள்ளது.

கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?

கருதரித்துவிட்டது, இனி நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் தம்பதிகளும், சொந்தங்களுக்கும் அதிர்ச்சிதரும் ஒரு விஷயம் இந்த கருச்சிதைவு என்பதாகும். இதி ஏன் ஏற்படுகிறது?

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில் கொண்ட குழவியும் மோமள மாயிடும் கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே (திருமந்திரம்)

தேகசம்பந்தத்தின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

குறையுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது’

என்பார் ஒளவை ஞானிகள்.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (திருமந்திரம்)

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம். ஊமை குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் ஜலம் (சிறுநீர்) மிகுந்திருத்தலே காரணம். பார்வைதிறன் அற்று குருடனாக குழந்தைகள் பிறக்க காரணம், தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம், ஜலம் (சிறுநீர்) சேர்ந்து மிகுந்திருத்தலே காரணம்.

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும் பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே (திருமந்திரம்)

குழந்தைகள் குள்ளமாக இருக்க காரணம் என்ன?

தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.

குழந்தைகள் முடமாக (நொண்டி) இருக்க காரணம் என்ன?

தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை முடமாக இருக்கும்.

குழந்தைகள் கூனனாக இருக்க காரணம் என்ன?

தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் நீளமும் திடமும் ஒருசேர குறைந்து வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை கூனனாக இருக்கும். சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன?

உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். அன்பர்களே! மேற்கண்டவாறு சரம் பார்த்து காரியம் செய்வது என்பது வள்ளலார் வழிநடக்கும் சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையற்ற ஒன்று. எனினும் இதனை தெரிந்து வைத்திருப்பதால் தவறில்லை. இதற்கு அடிமையாகிவிடாதீர்கள்.

நமக்குத் தேவை இறைவன் அருள் மட்டுமே. அந்த அருளையடைய முற்படுங்கள். அருளையடைய முற்படும்போது இறைவன் அதற்கேற்ப நமது சரங்களை நமக்குத்தெரியாமலேயே சரிசெய்வான். எனவே நமது முயற்சியால் இதனை செய்வதைவிட, இறைவன் சுதந்திரத்தில் இதனை விட்டுவிடுதல் நலம். இறைவன் அருள் எப்படிப்பட்டது? என்று வள்ளலார் கீழ்கண்டவாறு கூறுகிறார்,

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும் நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும், தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளக்குகின்ற பூரண விளக்க வண்ணத்தையுடையது என்று அறிய வேண்டும். இவ்வருள் எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய வேண்டும். அந்த அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் மட்டுமே பெறக்கூடும், வேறு எதனாலும் பெற முடியாததாக உள்ளது.

இவ்வருளை பெற்றால் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும் வல்லமை பெறும்.

வியாதிகள் நீங்க வள்ளலார் கூறும் மருந்து என்ன?

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால் – அந்த ஜீவகருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்திசெய்து, விஷேஷ செளக்கியத்தை உண்டுபண்ணு மென்பது உண்மை.

குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு வள்ளலார் கூறும் மருந்து என்ன?

பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணுமென்பது உண்மை.

நீண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து என்ன?

அற்பவயது என்று குறிப்பினால் அறிந்துக்கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது உண்மை.

கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி என்ன?

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சம்சாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

ஜீவகாருண்ய விரதத்தால் அடையும் பலனாக வள்ளலார் கூறுவது யாது?

பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள சம்சாரிகளுக்கு,
1. கோடையில் வெயில் வருத்தாது.
2. மண்ணும் சூடு செய்யாது.
3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா. ( உத்ராகண்ட் மாநிலத்தில் பெய்த பெருமழையில் இப்படிப்பட்ட சம்சாரிகள் மாட்டிக்கொண்டிருந்தால் இவர்களையெல்லாம் எவ்வித இயற்கை பேரழிவும் எதுவும் செய்யமுடியாது.)
4. விடூசிகை, விஷக்காற்று, விஷசுரம் முதலிய அஜாக்கிரதைப் பிணிகளும் உண்டாகாது.
5. ஆற்று வெள்ளத்தாலும், கள்ளர்களாலும், விரோதிகளாலும் கலக்கப் படார்கள்.
6. அரசர்களாலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்.
7. இவர்களது விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும்.
8. வியாபாரத்தில் மேன்மேலும் தடையில்லாமல் இலாபங்களும் உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்.
9. சுற்றங்களாலும், அடிமைகளாலும், சூழப்படுபவர்கள் துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜெந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயம் செய்யப்படமாட்டார்கள்.
10. எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதியினாலும் ஊழ் வகையாலும் சத்தியமாக வராது.
11. இவர்களே தெய்வமென்று உண்மையாக அறியவேண்டும்.

மேலும் பல சிறப்புகளை வள்ளலார் தனது திருஅருட்பாவில் இவர்களைப்பற்றி கூறியுள்ளார். எனவே நாம் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நமது வாழ்நாளில் கடைபிடித்து, இறையருள் பெற்று மரணமிலா பெருவாழ்வு அடைவோம்.