Tag Archives: சாம்பவி முத்திரை

ஒளவைக் குறள் – (91-100)

1. வீட்டுநெறிப்பால்
*******************
10. பத்தியுடைமை (91-100)
********************************
91.பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது.

(பத்தி – ஒன்றிலே ஊன்றிய மனம்; முத்தி – மவுன வித்தை) யோக வழி நிற்போன் நிலையான மனத்தொடு அசைவற்ற நிலையில் தன்னுள்ளே விரும்பி இறைஞ்சி சிவத்தைக் கூர்ந்து நோக்க மவுன வித்தை கைவரப் பெறும்.

92.பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால்.

(பாடியும் – பத்துவித நாதங்களை எழுப்பிச் சுரங்களோடு மனதை இலயிக்கச் செய்தல் ;
ஆடியும் – அஞ்சலி எனும் சாலன தந்திரத்தைச் செய்தும்; பல்காலும் – எப்பொழுதும்;)

நாதத்தின் மூலமாகவும் சாலன தந்திரத்தாலும் மனதைச் சிவத்தொடு ஒன்றித்தால் சிவம் வெளிப்படும்.
மனம் ஒன்றும் பயிற்சிகள் பலவாம். அதில் தலையாயது, இசையால் இறையைக் கட்டுவது. பதுமாசனத்திலிருந்துகொண்டு, சாம்பவி முத்திரையால் அசைவற்ற சித்தத்தோடு வலது காதில், சுழுமுனை நாடியிலுள்ள நாதத்தைக் கேட்கவேண்டும். நாதமானது சிவத்திடம் கொண்டு சேர்க்கும். “வேழமுகத்து” என்னும் சிறுநூலில் “சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி” என்று கூறியதை நோக்க விளங்கும்.

மேற்கூறிய “சாம்பவி முத்திரையை” ஒரு குரு அருளவேண்டும். அவரின் மேற்பார்வையிலேயே இச்சாதனையைச் செய்ய வேண்டும். தானே செய்ய அதனால் வரும் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

திரிபுராசார சமுச்சியம்:

நாதம் முதலில் மதுவுண்ட வண்டுக் கூட்டங்களால் உண்டாகுஞ் சத்தத்திற்குச் சமமான ஒலியை உண்டாக்குவதாயும், அதன்பின் மூங்கில்கள் ஒன்றோடொன்று இழையும்போது உண்டாகும் சத்தத்தைப் போலவும், கண்டா நாதத்தின் எதிரொலியாயும், கடல் அலைகளின் பேறிரைச்சலைப் போலவும், இடியின் சத்தத்தைப் போலவும், பிரம நாடியில் உள்ள மேல் துளையில் இருக்கின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த மறைபொருளை அறியாதவர்கள், சங்கில் வாயினால் ஊதி, அதில் உண்டாகும் ஒலியில் மனதை  ஒன்றச் செய்வர். இதையே “பாடியும்” என்றார். “ஆடியும்” என்பதை குரு முகாந்திரமே தெரிந்துகொள்ளல் வேண்டும்.

ஆடியும் என்பது அஞ்சலி (அம்+சலி = அழகிய அசைவு)

93.அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.

(ஆள்வானை – ஆட்கொள்ளுஞ் சிவத்தை; நினை – சிந்தனை செய்) அன்பினாலழுதும், பதைபதைத்து அலறியும், எலும்புருக உடலுக்குள்ளே சிந்தனை செய்ய ஆள்வானை அடையலாம்.

அழுவது இரு வகை. உலக ஆசையைக்கொண்டு அழுவதொன்று. ஆன்மவினைக்கு அன்பினால் அழுவது மற்றொன்று.

அன்பினால் அழுவதை :

தாயுமானவர்:

“அன்பினாலுருகி விழிநீர் ஆறாகவாராத ஆவேச ஆசைக் கடற்குண் மூழ்கி” என்றும்,

மாணிக்கவாசகப் பெருமான்:

“அழலது கண்ட மெழுகதுபோலவும் தொழுதுள்ளமுருகி யழுதுடல்கம்பித் தாடியுமலறியும் பாடியும்பரவியும்” என்றும்,

“மெய்தானரும்பி விதிவிதிர்த்துன் விரையார்கழற்கென்
கைதன்றலைவைத்துக் கண்ணீர்ததும்பியுள்ளம்” என்றும், கூறினர்.

திருமூலர்:

“மலமென் றுடம்பை மதியாத வூமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கிற்
பலமுள்ள காயத்திற் பற்றுமிவ் வண்டத்தே.”

வேறு = சிறப்பு.
தலம் ஒன்று வேறு = வெவ்வேறு அண்டங்களில் பல்வகைப்பட்ட உடல்களை.

மானுட உடல் பிணிப்புறுத்து மலமாகும். இதை மதிப்பிற்குரிய பொருளென பலர் மதிப்பர். மலம் அருவருத்து ஒதுக்கவேண்டிய ஒன்று. ஆக, உடலையும் மலமென மதியாதோர் ஊமராவர். ஊமர், வாய்பேசும் வாய்ப்பு இல்லாதோராகையால், மக்களாய்ப் பிறந்தும் மாக்களெனத் திரிகின்றனர். உடலை இறை தங்கும் சிறப்புமிக்க தலமென நினைந்து நலமென நாடி இருப்போருக்கு, பல்வேறு அண்டங்களில் அவரவர் வினைக்கீடாகிய பயனை நுகர்வதற்குத் தக்க உடலைப் பெறுவர்.