Tag Archives: சிவன்

ஒளவைக் குறள் – (191-200)

2. திருவருட்பால்
****************
20. சதாசிவம் (191-200)
***********************
191.பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.

எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத்  திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும்.

192.விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.

ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய  ஆதவன்  (ஆ+தவன்) போல் உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது.

வாசிட்டம் மாவலி கதையில் மாவலிக்கு சுக்கிரன் சொன்ன முடிவு:

“வருங்கற்பகவிண் விரைந்தேக வந்தேன்பல சொல்லியும் பயனென்
சுருங்கச் சொல்லும் பயன்கேளாய் தோன்ற விளங்குள்ளது வுஞ்சித்
தொருங்கப் புறத்துஞ்சித் தெல்லையுள்ள துஞ்சித் தெல்லையற
நெறுங்குற்றதுஞ் சித்து யான்சித்து நீசித்துலக நிறைசித்தே.”

193.ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.

ஆகம் = உடல்;

தேகம் தேகி இவைகளைக் கட்டியிருக்கும் ஆசை; உடல், சீவன், ஆகியவைகளைக் கட்டியிருக்கும் ஆசை ஆகியவைகளில் சிவம் தானேயாகிக் கலந்து நிற்கும்.

194.வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.

உடலிலுள்ள பத்துவித வாயுக்களாயும், மனமாயும், உயிராயும், இன்னும் அவற்றினோடு கலந்திருக்கும் கலைகளாயும், ஆய்ந்தறிந்த பிரணவ உச்சியில் சிவமிருக்கும்.

திருமந்திரம்:

“உணர்வு மவனே யுயிரு மவனே
புணர்வு மவனே புலவி யவனே
யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே.”

புலவி = பிணக்கு. துணர் = கொத்து.
இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.

சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே.  உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.

“உண்ணின் றொளிரு முலவாப் பிராணனும்
விண்ணினின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கும் வாயுவுமாய் நிற்குங்
கண்ணின் றிலங்குங் கருத்தவன் றானே.”

கருத்தவன் = கருதும் பொருளானவன்.
உயிரின் உள்ளத்தே நின்று இடையறாது இயங்கும் உயிர்ப்பும் அவனால் இயங்குகின்றது. அதனால் அவ்வுயிர்ப்பும் சிவனே. வானத்தே வலம்வரும் விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் அவனே. மண்ணுலகத்தே ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. உயிர்களின் கண்களில்(நெஞ்சகத்தே) நின்றியக்கும் கருத்தும் அவனே.

தாயுமானவர்:

“அங்கிங்கெ னாதபடி எங்கும்பிர காசமா யானந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குள்ளே யகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக் கிச்சைவைத் துயிர்க்குயி ராய்த் தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாம நின்றதெது சமயகோ டிகளெலாந் தன்தெய்வ மென்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது வெங்கெணும் பெருவழக்கா
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா யென்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநின்ற வெல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவொளியதாகவுங் கருதியஞ்சலி செய்குவாம்.”

195.எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.

கணக்கற்ற பிறவிகளில் (யோனி) பலவாறாக, எங்கும் பரவி, உடலில்  நிறைந்து நிற்கும் சிவம்.