Tag Archives: சுழுமுனை

சிவ வாக்கியம் – 90

சிவவாக்கியர் பாடல்கள் – 90                                  ********************************************

90.தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை

எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ

டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே

வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.

 

வடக்கு எல்லை இடகலை; தெற்கு எல்லை பிங்கலை;

நடு எல்லை தில்லை சுழுமுனை

 

உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும் (ஆகாயம் கபாலக் குகைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) வெள்ளையும்(ஞானமாம் சிவன்) சேர்ந்து சிவசக்தியாகும். அதனுடன் உயிர் கலக்கும்.

திருமந்திரம்

****************

பூதல மேருப் புறத்தான தெக்கணம்

ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம்

பாதி மதியோன் பயில்திரு வம்பலம்

ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறன்றே.

 

வெண்பா

***********

ஆணவ மாமெருமை ஆனைகரி ஆம்மருள்காண்

ஏணஅரி மாவினையாம் ஏர்பரியும் ஆணமார்

நற்செறிவாம் வெள்ளானை ஞானமாம் ஆனேறும்

இற்புகலன் பின்புருமேல் எண்.

ஞான வெட்டியான் 1500 – 28

ஞான வெட்டியான் 1500 – 28
###############################

தத்துவ உற்பத்தி
##################

28.மூலமுதலறிந்து சிவசிவ முத்திதருஞ்சுழிமுனையறிந்து
பாலமுந்தாண்டியப்பால் பரிபூரண பானுமதியமிர்தபானமுண்டு
சீலமுநிறைந்துநின்ற மூலமணி திருமாலின்பொற்கமலச்செயலறிந்து
ஞானமுங்கடந்துநின்ற உயர்குல ஞானவெட்டியான் நான்காணும்..

மூலாதாரத்தையும் அதன் மூலத்தையும் அறிந்து (எண்ணப்) பிறப்பு அறுக்கும் முத்தியைக் கொடுக்கும் சுழிமுனை அறிந்து உணர்ந்து, பாலத்தைத் தாண்டி, அப்பால் எங்கும் நிறைந்திருக்கும் சூரியசந்திர அமிர்தத்தை உண்டு, நல்ல சூக்கும அறிவு மிகு மூலமணியாம் திருமாலின் திருவடிச் செயல் என்ன என உணர்ந்து, ஞான நிலை தாண்டி நிற்கும் உயர்குலத்தவனாம் ஞானவெட்டியான் நான், காணீர்.

சுழிமுனை

பார்க்குஞ் சுழுமுனை காணாரேயது மூக்கு நுனியென்றறியாரே

மூக்கு நுனியே சுழுமுனை.

நண்பர் ஒருவரின் வினாக்களும் நாம் ஈந்த விளக்கமும்:

//’புருவநடுவிற்குப் பொருள் நடுநாடி‘ ‘சுழுமுனைஎன்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது அல்லவா?//

திருமூலர் ஞானம் – 84
******************************
சுழிசுழி யேகாச் சுழிமுனை யாகும்
வழிவழி யிதுவே வழிதுறை யாகும்

மேலேயேக புருவநடு, சுழிமுனை ஆகிய இரண்டு வழியாகும். நடுநாடி தண்டமேயாகும். தண்டம் வழியேறிப் பிடரிவழி பாய்ந்து மூலத்தமர் குடைந்தால் கபாலம் திறக்கலாம். ஆக நடுநாடியும் வழியே.

//வாசி என்பதை சுழுமுனைஎன்ற பொருளில் யார் பயன்படுத்துகிறார்கள்?//

மேவுவதோர் மனத்தாலே தவமுமாச்சு
வேதாந்த நாதாந்த மிரண்டுமாச்சு
கூவுவதோர் சொல்லடர்ந்த விடமுமாச்சு
குண்டலியாள் ஞானசக்தி மனையுமாச்சு
பூவுவதோர் வாசியென்ற மலருமாச்சு
புருவமையம் நின்றசுழிக் கதலியாச்சு
நாவுவதோர் கலைக்ஞான மநேகநூற்கள்
நால்வேத மாறுசாஸ் திரமுமாச்சே.”

(சுப்பிரமணியர் சுத்த ஞானம் – 100)

வாசி என்றால் சுவாசம் எனக் கூறுதலும் உண்டு. வாசிக் குதிரை ஏறிப் பயணித்தல் என்பதன் சரியான பொருள் மனம் அடங்கிய நிலையில் நினைவால் பயணித்தல் ஆகும்.

முந்நாடி(முன்னாடி) ஒடுங்குமிடம் சுடர்க்கம்ப உச்சியாம் சுழுமுனை. அதுவே மனம்.

பாலம்

ஆக்கினைக்கு மேல் எட்டு விரல் தூரத்திலிருக்கும் ஆயிரத்தெட்டிதழ் தாமரையை அடைய, வாசியைத் தமருக்குள் (துளைக்குள்) புகுத்தினால் நெறுப்பு ஆற்றுக்கு மேலுள்ள மயிர்ப்பாலம் காணலாம்.

வேண்டுகோள்