Tag Archives: சூனியம்

ஒளவைக் குறள் – (241-250)

3. தன்பால்

*************
25. சூனிய காலமறிதல் (241-250)
*************************************
241. நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணை யானாகு முடம்பு.

எல்லையற்ற சிதாகாயத்தில் அக்கினி கலைகளினாலாய சோதிகாண, நம் உடல் அரவினை (அணைத்த) அணையாகக் கொண்டவனின் உடல்போலாகும்.
அரவினை (அணைந்தவன்) அணிந்தவன் சிவன்.
அரவிணை அணையாகக் கொண்டவன் விட்டுணு.
அரவணை என்பதன் பொருள் குண்டலி சத்தியே. இதை விட்டுணு ஆசனமாகவும், சிவன் மாலையாக அணிந்திருப்பதாகவும் புராணம் கூறுகிறது. மணிபூரகத்தில் விட்டுணு உருவம் குண்டலியை ஒன்றாக்கி அதன்மேல் (நிற்பதால்) படுத்திருப்பதால் ஆசனமாகவும், சிவநடன காலத்தில் குண்டலி சுற்றி வளைத்து மேலேறுவதால் அது கழுத்தணியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

242. உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.

யோக நிட்டையில் புருவமத்தியென்பதற்கு, இரு புருவங்களின் மத்திய பாகத்தைப் பார் என்பர். இரு புருவங்களின் மத்திய பாகம் புருவங்களின் மத்தியாகும். ஆனால், ஒரு புருவமத்தியே, புருவமத்தியாம். அப்படியேயாயின், ஒரு புருவமத்தியை எப்படி இரு கண்களால் நோக்குவது? எனும் வினாவுக்கு விளக்கம்:

இரு கண்களாலும் நாசி நுனி நோக்க கீழ்நோக்கு முக்கோணம். அதை அப்படியே மேல்நோக்கு முக்கோணமாக்கப் பார்வை புருவ மத்தியின் வழியாக மேலே செல்லும். புருவ மத்தியின் வழியே சிதாகாயஞ்சென்று சோதிமயமான சிவத்தைக் கண்டுணரல் வேண்டும்.

மணிவாசகப் பெருமான் சிவம் செந்தழல்போலிருப்பதை:

“பந்தணை விரலாள் பங்க நீயல்லாற்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே.”

243. புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.

மேற்கூறியபடி புருவமத்தியின் வழியே சிதாகாயஞ் சென்று சிவத்தைக் கண்டுணர, நம் உடல் இருப்பதைக்  காண இயலாது (சிவம் பூரணமாக நிலைபெற்றுவிடுவதால் நம் உடல் உருவமற்றுவிடும்).

244. அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.

உள்ளும் புறமும் தானாக வெளிப்படாத, ஞானாசிரியன் சுட்டிய திருவடிக் கமலங்கள்மூலம் முக்கலை யொன்றித்தலாம் ஞான வினையினால் சிவத்தைக் கண்டுணர பலயுகம் காட்டும் உடம்பு.

245. ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.

வாசியாகிய மூச்சுக் காற்றாம் ஆவியை உடலுக்கு வெளியே செலுத்திச் செலவிடாது, உள்ளே முடிந்தவரை நிறுத்திவைக்க, நம் உடல் ஓவியத்தில் வரைந்ததுபோல இளமையுடன் இருக்கும்.(பாம்பின் மூச்சுக் காற்றைக் கவனிக்க விளங்கும்)

திருமந்திரம்:

“ஓவிய மான உணர்வை யறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவி லிருந்திடும் புண்ணியத் தண்டே.”

பரவெளி = ஆயிர இதழ்த் தாமரை
தண்டு = வீணாத் தண்டு.

இதனுள் ஓடுவது நடுநாடியாம் சுழுமுனை.
உயிர்ப்படங்கி அசைவற்றிருக்கும் உணர்வை அறியுங்கள். மீண்டும் பிறப்பினை அடையக் காரணமாய் உள்ள உள்ள உடலைப் பெற்ற தீவினையாளர்கள் இவ்வுண்மையை அறியார். ஞாயிறு, திங்கள், அங்கி ஆகிய மூன்று மண்டிலங்களும் பரவெளி மண்டிலத்தோடு தொடர்புடையன.

ஞான வாசிட்டம்: உத்தாலகன் கதை:

“அந்தணன் றனதறி வெனுமன்ன மாநந்தமா நிலையோடை
வந்தமர்ந்தது சரற்கக னத்திலே வயங்குமா மதியென்ன
வுந்து காற்றிலாவிளக் கெனவோவியத் துருவெனத் திரையிலாச்
சிந்துவென்ன நீர்சுருக் கொண்டு பொழியலாச் சேண்முகிலென நின்றான்.”