Tag Archives: தன்னையறி
ஞான வெட்டியான் 1500 – 55
55.தன்னையினிதானறியார் தலமுங்காணார் தான்
………….பிறந்த சரித்திர முந்தடமுங் காணார்
இன்னதென்று வேதமறைவழியுங்காணா ரிடும்ப
………….ரெல்லாம் வாய்மதத்தாலிகழ்ச்சி சொல்வார்
பின்னையொருபொருளறியார் தவத்தைக்காணார்
…………..பிதற்றுகின்றபேயர்கள்தன் பெருமைபேசி
என்னைத்தான்பறையனென்று தள்ளினார்க ளென்
…………..பிறப்பைச்சபைதனிலே யியம்புவேனே.
தன்னைத் தானே அறியாதோர், தானாகிய சீவனிருக்கும் இடத்தைக் காண இயலாதோர், தான் பிறந்த வழியையும் வரலாற்றையும் உணராதோர், இதுதான் வழி என வேத நெறிகளில் கூறியுள்ளதைப் புரிந்து அதன் வழி செல்ல இயலாதோர், செருக்கு (இடும்பு) நிறைந்தோர் எல்லாம் வாய்க்கொழுப்பால் என்னை இகழ்வோர், அப்புறம் ஒரு மெய்ப்பொருளை உணரார், தவத்தைச் செய்து பாரார், தற்பெருமை பேசிப் பிதற்றுகின்ற பேயர்கள், என்னைப் பறையன் என்று சொல்லித் தள்ளிவிட்டார்கள். ஆகவே, நான் இந்தச் சவையில் என் பிறப்பை சொல்லுவேனே.