Tag Archives: தலை

சிவவாக்கியர்-2

2 .சரியை விலக்கல்
**********************

2.ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே.

சீவனாம் சிவன் தன்னுள்ளே ஓடி ஓடித் தன்னுள் கலந்துள்ள சோதியாய் உள்ளது. அதை நாடி நாடிக் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள்(மனுக்கள்) கோடான கோடியாம்.

இன்னும்எளிதாய்ச் சொல்ல:

உடலின் உள்ளிருக்கும் ஏக இறையை இருக்குமிடத்தைவிட்டு உடலுக்கு வெளியே ஓடியோடி யோடியோடித் தேடி, கண்டவர் சொல்லுவனவற்றை நம்பி அதையே நாடிநாடிக் காலத்தைக் கழித்துக் கிட்டவில்லையே என வாடிவாடி மாண்டவர்கள் எண்ணிறந்த கோடியே.

ஆகவே பலப்பல அண்டங்களில் விரிந்து பரந்து வியாபித்திருக்கும் பரிபூரணத்தை நம் உடலுக்கு உள்ளேயே தேடிக் கண்டுகொள்ளல் எளிதாம்.

எண்சாண் உடலுக்கு சிரமே பிரதானம். ஆகவே உடலில் தேடுவதைவிட தலையில் தேடுவது இன்னுமெளிதாம்.

ஒளவைக் குறள் – (281-290)

3. தன்பால்

************
29. மெய்நெறி  (281-290)

**************************
281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.

உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம்:

“விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.”

கும்பிச்சு = நிறைந்து. நலங்கிடுதல் = ஒடுங்குதல். ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை மேல்நோக்கி எழுமாறு நினைந்து கழுத்தைச் சுருக்கிச் சாலந்திரை முத்திரை, ஒட்டியாணப் பிணிப்பு முத்திரை ஆகியவைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய சாலந்திரையால் மெய்யமிழ்து கீழ் ஒழுகுதல் தடைப்படும். ஒட்டியாணப் பிணிப்பால் உயிர்ப்பு மடங்கும். நெற்றி மண்டிலத்தே அமிழ்து நிறையும்.

“சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகு மிவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தரிசனந் தானே.”

மாகம் = பரவெளியாம் விண். தூரம் = பரவெளி.     நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய ஐம்பூதங்களும் உடலில் ஒருமுகப்பட்டுக் கூடினால் உயிர்ப்பு கைவயப்படும். உயிர்ப்பு வயப்பட பரவெளி முழுமுதற் சிவத்தை அருட்கண்ணால் கண்டு கும்பிடலாம்.

“தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்திட்
டேராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே.”

ஆருலகம் = உலகியல் துய்ப்பு. கடைஞானம் = முடிந்த ஞானம்.                  பரவெளியில் சிவத்தை வணங்குவதைச் சொல்வேன். மழைபோன்ற கண்ணையுடைய திருவருளால் முடிஞானம் எனப்படும் அறிவில் அறிவாம் (ஞானத்தில் ஞானமாம்) திருவடி உணர்வை உணர்வில் கொண்டால், அவ்வுணர்வு உள்ளத்தே அழகு மிக்க ஒளிவடிவாகும். உள்ளம் அழகு மிக்க உள்ளமாகும். இவ்வுள்ளம் அமைந்தோர்க்கு உலகும் உலகியல் துய்ப்பும் பகலில் கணப்படும் பொருள்போல் தெள்ளிதே விளங்கும்.
தூரதெரிசனம் முக்காலத்தையும் உணர்த்தி விடும்.

282. பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.

மூலாக்கினியை எழுப்பி அறிவுடன் இணைத்துவிட்டால், பஞ்சில் பட்ட நெருப்பு போல அறிவுச் சுடரானது பரவி, மறையாமலிருந்து அவியாது ஒளிவீசிக்கொண்டிருக்கும்.

283. இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.

இமைகொட்டும் நேரத்தில் உதித்துப்பரவி, உதித்த இடத்திலேயே மறையும் மின்னலைப்போல், சிவன் செயலும் நம்முள் தோன்றி மறையும்.

284. குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.

ஒரே சிந்தையுடன், மனதில் நினைப்பற்று பிரணவத்தின் மத்திய பாகத்தில் எழும் கலைகளைக் கூட்டி மேலேற்றி நிற்க அதைவிட மேலானதில்லை.