Tag Archives: திருமுழுக்காட்டு மாலை

திருமுழுக்காட்டு மாலை

தவத்திரு துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த

“இட்டலிங்க அபிடேக மாலை” என்னும்
********************************
“திருமுழுக்காட்டு மாலை”.
****************************

பந்தமறு அரர்மிருடர் பவருருத் திரர்கள்ஒரு
பதினொருவர் மிளிர்பீடம்மேல்
படியிலை ஐவகைப் படுமீசர் தாநிதம்
பத்திலெண் வித்தைஇறைவர்
சந்தமுறு கோமுகத்து ஐங்கலைகள் சத்திசா
தாக்கியம் மூர்த்திவதனம்
தட்டற்ற வட்டத்தில் ஒட்டற்ற சிற்சத்தி
தாளுற்ற நாளத்திலே
நந்தலற வருகோள கம்திகழ் சிதம்பரம்
நற்சிகையில் நிர்ச்சூனியம்
நட்டம்அற அமைகின்ற இட்டவடி வொடுநின்ற
ஞானமய மோனம்நடுவோடு
அந்தம்அற முந்துபர மானந்த! நீநந்த
அபிடேகம் ஆடிஅருளே!
அறிவுற்றுஎன் அங்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடிஅருளே. . . . . . . . . . . . . .(1)

“திருமுழுக்காட்டு மாலை” -2
*********************************

நாடுஅரிய சத்தியோ சாதத்தும் வாமத்தும்
நன்றாம் அகோரத்தினும்
நவையற்ற புருடத்தும் ஆகமம்ஓர் அவ்வைந்து
நல்கிஈ சானத்திலே
பீடுதரும் எட்டுமுறை தந்துஅவற் றிடைநீசொல்
பெருமைபெறும் அருமைவிதியில்
பேசரிய பூசைசிவ கோசரிஎ னப்புரிதல்
பெற்றிலேன் மற்றடியனேன்
வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன்
வேட்டொருவர் மாட்டுஅருளினால்
மீக்கொள்ஒரு புடையொப்பு நோக்கிவைத்தனை சாற்றில்
வேண்டல்வேண் டாமையிலையால்
ஆடுநின் பால்வேறு பாடுஒன்றுஇ லாமையால்
அபிடேகம் ஆடிஅருளே
அறிவுற்றுஎன் அங்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடிஅருளே . . . . . . . . . . . . . .(2)

“திருமுழுக்காட்டு மாலை” -3
*********************************

நவிற்றலரும் இதயம்மிளிர் கண்டம்நா அடிபுருவ
நடுவுபிர மப்புழையெனும்
நல்லிடத்து அகராதி கிரியாதி மனம்முதல
நண்ணியும் ஐம்மூவகை
இவற்றிலொவ் வொன்றுஅகல நின்றவிடயங்களெதிர்வு
இன்றிச்சி வாகாரமாய்
எதிரும்நன வும், சிவோகம் என்றுபா வித்தலுறும்
மென்கனவும், ஞாதுருவொடே
உவப்பறிவு ஞேயம்என உற்றுஅனுப வித்திடும்
ஒண்சுழுத் தியும்,ஞானமே
ஒளிர்துரிய மும்,திளைத்து உயர்சிவா னந்தநுகர்
உறுமதீ தமும், ஆகுநல்
அவத்தைகள் கடந்தவற்று அப்புறப் படுமமலன்
அபிடேகம் ஆடிஅருளே
அறிவுற்றென் அங்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடிஅருளே . . . . . . . . . . . . . (3)

“திருமுழுக்காட்டு மாலை” -4
*********************************

ஒருவனோர் பொருள்இலாற்க்கு உற்றுஉதவின் உளம்வியந்து
ஓகைபெறும்; அன்றிஉடைமை
உதவுறா அமையத்தில் உதவினும் தன்னிடத்து
உள்ளதில் பெரிதளவு
பொருளதா யினும்அதனின் இனியதா யினும்அவன்
புந்திமகிழ் வுற்றுஇடுவனால்
புனல்விடுத் திடுமுடியி னில்புணரி யில்பெருகு
புண்ணியத் தெய்வநதிதான்
மருவலால் நீர்விருப் பிலைநினக்கு ஒருதிவலை
மற்றுஎன்முடி யில்தெறிப்பின்
வைப்பன்வா னத்தில்என எத்திறத் தானும்நினை
மக்கள்நிலை வுற்றுஉய்ந்திட
அருளினால் முனம்விதித் தவன்ஆத லால்மகிழ்ந்து
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(4)

“திருமுழுக்காட்டு மாலை” -5
*********************************

கருகிச் சிவந்தகடு அருகிப்பொ ருந்தமிளிர்
களம்வாழ்வு மேவஅணிவாய்
கடலில் சிறந்தநிறம் உடலில்தி ருந்துமணி
கதிர்போல ஏயும்நெடுமால்
ஒருகட்கு இசைந்தஅடி இருகட்குஇ ணங்கஅறம்
உடையார்முன் ஓடிவருவாய்!
உலகத்தை வென்றமனம் இலகுற்ற மன்றினிடை
உமைகாண ஆடல்புரிவாய்!
மருகல் பெரும்பதியில் ஒருகற்புஅ ணங்குதொழ
மணவாளன் ஆவிஉதவா
மயிலைக்கண் என்பின்உயிர் பயில்வுற்று எழுந்துவர
வருவாய் எனாமுன் அழையா
அருகற்கு அணங்குதரு முருகர்க்கு உகந்தஅரன்
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(5)

“திருமுழுக்காட்டு மாலை” -6
*********************************

ஓகைமலி குருஆணை உறுவிக்கும் ஆணையும்
உயர்புரா தனசரிதமோடு
ஒக்குநடை வருவிக்கும் உவமையும் தன்மகனை
ஒண்சுவத் திகம் ஏற்றுபு
சோகம்அறு மனுமயம் செய்துஅமைத் திடுமொரு
சுவத்திகா ரோகணமும், நூல்
சொல்லிய இடங்களில் தூயநீறு அணிதரும்
தொல்விபூ திப்பட்டமும்
மாகலச நீர்ஆட்டு கலசாபி டேகமும்,
மருவுசிவம் நோக்கு விக்கும்
வயங்குலிங் காயதமும், மன்னுசிவ லிங்கம்உரு
அணைசுவா யதமும், எனும் ஏழ்
ஆகுநெறி தாம்மருவி ஆகமிசை இலகும் அரன்
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(6)

“திருமுழுக்காட்டு மாலை” -7
*********************************

போயகுல மொடுசரண ருடன்மேவு சமயமும்,
பொன்றுலகம் விட்டுஅமலனார்
பூசனைகொள் அரியநிர்ச் சஞ்சார மும்கொடிய
பொன்பெண்மண் ஆசைநெறியில்
பாயமனம் ஓடாத நிட்பிரா ணமும்,மெய்முப்
பத்தாறு தத்துவம்அறப்
பகுதியொடு உணர்த்துதத் துவமும், இறைஅம்சம்நீ
பாரென்னும் ஆன்மிகமுமே
மேயசடு லிங்கமுடன் ஆறுஅங்கம் ஆகும்ஒரு
மெய்அனுக் கிரகநிலையும்
விமலம்உறு சச்சிதா னந்தசிவ மயமென்னும்
மிக்கசத் தியசுத்தமும்
ஆயஎழு வகைநெறியில் ஆவியிடை இலகும்அரன்
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(7)

“திருமுழுக்காட்டு மாலை” -8
*********************************

கிடைத்தசிவ லிங்கம்அன்றி உணராத ஏகாக்
கிரசித்தம் என்னும்விரதம்
கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குஉதவு
கின்றஇந் திரியார்ப்பதம்
உடற்றிஉயிர் கொன்றிடா நின்றிடும் அகிம்சைசிவன்
உண்மைகொள் இலிங்கநிசமே
உயர்சிவத்து உளம்அடங் குறுமனோ லயம்அதனில்
ஒன்றாகி நின்றுபேதம்
விடுத்தலுறு சத்தியோன் முத்தியென்னும் இவையேழும்
மிக்ககுரு அருள்புரியவே
மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும்
வேதமுடி யாவும்உணராது
அடுத்தமனம் மொழிஉடற்கு அப்புறப் படும்அமலன்
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(8)

“திருமுழுக்காட்டு மாலை” -9
*********************************

நல்லதில நெய்யாடி ஆனிடத்து ஐந்தாடி
நவையில்ஐ அமுதம்ஆடி
நல்குகா ரணகாரி யம்முறையின் அன்றியே
நறுநெய்பால் தயிராடியே
மெல்லமலர் மதுவாடி இன்கழைச் சாறாடி
மென்பழச் சாறாடியெ
விளையும்இள நீராடி, ஆரக்கு ழம்பாடி
விதியின்அமை தபனமாடி
ஒல்லைநகு வெண்டலைப் புழையினிடை ஓடிநல
உத்திகொடு பைத்தலைய
உரகம்நுழை வுற,இளங் குழவிமதி ஒருபுடை
ஒதுங்கஇட மின்றிஅசைய
அல்லல்அற நிறைகங்கை அசையாத உச்சைநீ
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(9)

“திருமுழுக்காட்டு மாலை” -10
*********************************

நரர்கள்தமின் அரசர்அவர் தமின்இனிய திவவியாழ்
நண்ணுநர கந்தருவர்தாம்
நவிலும்அவர் தமின்அமர கந்தருவர் அவர்தம்மின்
நாடரிய தேவர்அவரில்
சுரர்அதிபன் அவனின்உயர் சுரர்குரவன் அவனில்அயன்
சொல்முறையில் நூறுமடிமேல்
துன்னுசுகம், ஒருதிவலை அளவும்இன் றாகமிகு
சுகவேலை புகல்ஈகுவாய்
தரைமுதல் பூதங்கள் பித்திகுண தத்துவம்
தகுதிபெறு பகுதிபுருட
தத்துவம் வித்தைமுத லனஎனும் இவற்றில்அறு
சமயர்என எமைவிடாமல்
அருளில்நினை அடைதல்உறும் அரியபதம் அருளும்அவன்
அபிடேகம் ஆடி அருளே
அறிவுற்றுஎன் அன்கைமலர் செறிவுற்று அமர்ந்தஇறை
அபிடேகம் ஆடி அருளே. . . . . . . . . . . . .(10)

“திருமுழுக்காட்டு மாலை” முற்றிற்று