Tag Archives: திரு உத்திரகோச மங்கை

திரு உத்திரகோச மங்கை

ஈசனின்
திருநாமங்கள்

பாதாள லிங்கேசுவரன்

பிரளயாகேசுவரன்

துரிதாபகன்

கல்யாணசுந்தரன்

அன்னையின் திருநாமங்கள் –

மங்களேசுவரி

மங்களதாவினி

புட்பதனி

சுந்தர நாயகி

பூண்முலையாள்

கல்யாண சுந்தரி

திரு = அழகு

உத்ரம் = உபதேசம்

கோசம் = இரகசியம்

மங்கை = பெண்

மூலவர் – மங்களநாதர்

சிறப்பு – சுயம்பு

அன்னை – மங்களேசுவரி

அற்புதம் – மரகத நடராசர்

தலமரம் – இலந்தை

தீர்த்தம் – அக்கினி தீர்த்தம்

பதிகம் – தேவாரம்

ஊர் – உத்திரகோச மங்கை

மாவட்டம் – இராமநாதபுரம்

புராண பெயர் – பதலி கிராமம்

மண்டோதரிக்குத் திருமணமாகாத காலம். அவள் ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள். ஈசன் அவளுக்குக் காட்சி தந்தபின்தான்  அவளுக்குத் திருமணம் ஆயிற்று. அப்போது ஈசன் தனக்குத்தனே சூட்டிக்கொண்ட நாமம் மங்களநாதன்.

ஆயிரம் முனிவர்கள் அருந்தவம் இயற்ற உத்திரகோச மங்கைக்கு வந்த அதே நேரத்தே மண்டோதரியும் இலங்கையில் தவம் இருந்தாள். ஈசனும் வேதாகம நூல் ஒன்றைப் பாதுகாக்கவேண்டி அதைத் தவமிருந்த முனிவர்களிடம் ஒப்புவித்து, “இராவணன் எப்போது என்னைத் தீண்டுகிறானோ அப்போது இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் அக்கினிப் பிழம்பாகத் தோன்றுவேன்” எனக்கூறி, மண்டோதரிக்குக் காட்சி கொடுக்க இலங்கை சென்றார். மண்டோதரியின் முன் குழந்தையாய்க் காட்சி தந்த இறைவனை இராவணன் தொட்டதும் அவர் உத்திரகோச மங்கையில் அக்கினி தீர்த்தத்தில் அக்கினிப் பிழம்பாய்த் தோன்றினார். அக்கணத்தே 999 முனிவர்களும் அக்குளத்தில் குதிக்க மாணிக்கவாசகர் மட்டும் வேதாகம நூலைப் பாதுகாத்து வைத்தார். அதனால் அவர் அட்டமா சித்தி பெற்றார். 999 முனிவர்களையும் லிங்கங்களாக்கித் தானும் ஒரு லிங்கமாக ஆனார். அதுவே சகஸ்வரலிங்கமாய்ற்று.
மாணிக்கவாசகர் எடுத்த லிங்க வடிவு இன்னும் இங்கே உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இக்கோயில் சிறப்பு வாய்ந்த சிவபுண்ணியத் தலமாக விளங்குகிறது.

ஆருத்ரா தரிசனம் –

இங்குள்ள நடராசரின் மரகதச்சிலை போல வேறு எந்தச் சிவத்தலத்திலும் கிடையாது. இம்மரகத நராசருக்கு வருடம் ஒருமுறை ஆருத்ரா தரிசனத்தன்று அபிடேகம்(அபிஷேகம்) நடைபெறும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சேத்திரத்தில்தான் ஆருத்ரா தரிசனம். அன்று பகல் 11மணிக்கு அபிடேகம்
துடங்கும். இரவு 12மணிவரை தரிசனத்துக்கு வைக்கப்படும். இரவு 12 மணிக்கு அபிடேகம், பூசைகள் முடிந்தவுடன் சந்தணக் காப்பிட்டு மூடிவைக்கப்படும் இவரை அடுத்த வருடம் இதே நாளில்தான் மறுபடியும் வெளியில் எடுத்து இம்முறையில்
பூசைகள் செய்து தரிசனத்துக்கு வைக்கப்படுவார்.

தினம் தினம் பகல் 12 மணிக்கு மரகதலிங்கம் – (ஸ்)படிகலிங்கம் ஆகியவற்றிற்கு அபிடேகம் நடக்கும்.

நம்பிக்கைகள்

திருமண வரம், குழந்தை வரம். இது தவிற உடல் ரீதியான நோய்கள் தீரும். இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு தீவினை அழியும். அதிகாலையில் தரிசிக்க முன்செய்த பாவங்கள் அக்கினிவாய்ப் பஞ்சுபோலாகும். உச்சிக் காலத்தே வணங்க உறுவினைகள் மாயும். மாலையில் வணங்கினால் செய்வினைகள் விலகும்; இளமை, அழகு, பிணிநீக்கம், வாழ்நாள் நீட்டிப்பு, தொழில் மேன்மை, பொருள் பெருக்கம், அறிவு, ஆற்றல் கிட்டும்.

நேர்த்திக் கடன் –

இங்கு இறைவனுக்கு பால், எண்ணை, இளநீர் ஆகியவற்றால் அபிடேகம் செய்யலாம். இங்கே விரதமிருத்தல், வேள்வி புரிதல், தவம் இருத்தல், தானதருமம் செய்தல், தியானித்தல் ஆகியவை செய்ய பன்மடங்கு புண்ணியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையே.

சிறந்த திருவிழாக்கள் –

சித்திரை 12ம் நாள் – சித்திரைத் திருவிழா – திருக்கல்யாணம்

மார்கழி 10ம் நாள் – மார்கழித் திருநாள் – ஆருத்ரா தரிசனம்

பிரதோச நாட்கள்

வழிகாட்டி –

இராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ

இராமேசுவரத்திலிருந்து 83 கிமீ

இராமநாதபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இராமநாதபுரத்தில் தங்கும் வச்தி உள்ளது.

விமான நிலையம் – மதுரை