Tag Archives: தெளிதல்

ஒளவைக் குறள் – (121-130)

2. திருவருட்பால்
********************
13. தெரிந்து தெளிதல் (121-130)
**********************************
121.தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம்.

உடலின் உள்ளே தோன்றும் அறிவாகிய ஓங்காரத்தில் நிலைத்து நின்று, அதையே சிவ சொரூபமென தெளிந்தறிந்தால், ஆன்றோர்களால் சொல்லப்பட்ட ஞானிக்குறிய எல்லாக் குணங்களியும் அடையலாம்.

திருமந்திரம்:

“உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்த நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே.”

மெய்யடியார்தம் அன்புடலாகிய பள்ளத்தில், இறைபணியாகிய பந்தலின் நிழலில் சிவம் உள்ளது. மலம் நீங்கிய அன்பரின் தெளிவான உள்ளத்தில் உண்டாகும் உணர்வுக்கு உணர்வாய் உணரப்படுபவது சிவம். தீநெறியில் செல்லும் யாருக்கும் உள்ளத்தி உள்ளே ஒளிந்துள்ள சிவம் வெளிப்படாது. தீவினை, எஞ்சுவினையாகிய வெள்ளத்துடன் கலந்துவிடும்.

“உண்ணின் றொளிரு முலவாப் பிராணனும்
விண்ணினின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கும் வாயுவுமாய் நிற்குங்
கண்ணின் றிலங்குங் கருத்தவன் றானே.”

கருத்தவன் = கருதும் பொருளானவன்.
உயிரின் உள்ளத்தே நின்று இடையறாது இயங்கும் உயிர்ப்பும் அவனால் இயங்குகின்றது. அதனால் அவ்வுயிர்ப்பும் சிவனே. வானத்தே வலம்வரும் விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் அவனே. மண்ணுலகத்தே ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. உயிர்களின் கண்களில்(நெஞ்சகத்தே) நின்றியக்கும் கருத்தும் அவனே.

வாசிட்டம் :

“தேகமுதற் பிரிவுகளாய்ச் சிறியனவாம் பொருள்களிலத் தெய்வமுண்டோ, பாகமறப் பணதியற வடிமுடிவற்றுள வுணர்வே பரமபோத மாகலினாலது தெய்வ மருச்சித்தற் குறித்தாகு மறிவிலாத மூகருக்கு வடிவமுத லருச்சுனையே யியல்பென்று மொழியுமன்றே.”

122.உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்.

அறிவு இருப்பதை அறிந்தவற்குச் சிவத்தை(இறைவனை) உணர்ந்து காணமுடியும். அறிவை அறியாதோருக்கு அது முடியாது.

திருமந்திரம் :

“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே.”

உண்டில்லை = உலகம் உண்டு, இல்லை என வாதாடும் உலகில்.
பண்டு = கேவல நிலை.  பரங்கதி = முத்திநிலை.
கண்டில்லை மானிடர் = இதுவரை காணாத மானிடர்.
கண்ட கருத்து = அறிந்த அறிவு. விண்டு = உரைக்க.

சுட்டியுணரப்படும் உலகம் உண்டு எனவும், இல்லை; இது கானல் நீர் எனவும் வாதாடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. புலம்பு நிலையும், புணர்வு நிலையுங் கடந்த புரிவு நிலையாம் திருவடி பேறு இல்லையோவென ஐயுற்று நின்றன. ஏனைப் பொருள்களைப்போல் சுட்டுணர்வு சிற்றுயிர்களுக்கு எட்டாது. அத்திருவடிப் பேறு மானிடர்களுக்கும் மற்ற ஒரு சில உயிர்கட்கு மட்டுமே கிட்டும். சிவத்தைக் கண்டேன் என்றால் அது உண்மையாக இருக்க ஒண்ணாது. அத் திருவடிப் பேறு சொல்லவியலா அறிவுப் பேரொளியாம்; அது உயிர்களின் அகத்தே அமர்ந்துள்ளது.

123.ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்.

ஒப்பற்ற ஞானிகட்குத் தனிச் சிவம் அறிவுமயமான ஒன்றே. ஞானமற்றவர்க்கெல்லாம் அச்சிவமே வேறுபட்ட குணமுடையவனாவான் (அதாவது,அவர்களுடைய குணமயமாகவும் இருப்பான்)

124.எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்.

சீவர்களுக்கெல்லாம் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்தோருக்கு மரணபயமில்லை.

வாசிட்டம் :

“எனைத்து ஞானநன் னூலியம்பு மறுதியா தென்னி
லனைத்துங் கனவு காண்பதுவே யன்றோவ விஞ்சையிங்கில்லை
வினைத்திண் கவலை செய்கின்ற வெய்ய மாயை தானில்லை
தினைத்துன்பமு மற்றுப சாந்தத் திறமா மிதுவே திகழ் பிரமம்.”

“சாந்தமாகிச் சிதம்பரமாய்ச் சமமாய் நொய்தாயான்மாவா
யேந்து சத்தியளவிலதா யிடும்பேர் பிரமமெனுமிதற்கே
சேர்ந்தபல நிச்சயம் பண்ணிச் சிலர்பாழென்பர் பரமேசன்
வாய்ந்த வுருவமென்பர் சிலர் மாவிஞ்ஞான மென்பர் சிலர்.”