Tag Archives: நாபி

ஒளவைக் குறள் – (231-240)

3. தன்பால்

*************
24. கண்ணாடி  (231-240)
***************************
231. கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.

உடலினுள்ளிருக்கும் குண்டலிக்குள் உறைந்திருக்கும்  ஒளியானது, சூரியவொளியில் வைத்த கண்ணாடிக்குள் தெரியும் சூரியனின் உருவைப்போல் இருக்கும்.

232. அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.

ஐம்புலன்களின் சக்திகளைப் பிரணவத்தில் சேர்க்க வகையறிந்தால், உடலிழக்கவேண்டாம்.

திருமந்திரம்:

“பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொ ளானந்த மென்னு மருள்செய்யில்
வேய்ந்துகொண் மேலை விதியது தானே.”

விதி = முறை. படர்க்கின்ற = படர்கின்ற.
ஐம்பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்தே பாயும் தன்மையுடைத்து. அங்ஙனம் பாய்வதைத் திருவருளால் அகற்றி, சிவ மந்திரத்தின் உதவி கொண்டு திருவடி உணர்வாகிய கட்டுத் தறியில் கட்டிப் பூட்டவேண்டும். அப்படிச் செய்தவர்க்கு, சிவன் திருவடிப் பேரின்பம் என்னும் பெரும் பேரருளைத் தருவான்.

“கிடக்கு முடலிற் கிளரிந் திரிய
மடக்க லுறுமவன் றானே யமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கி னடக்கும், நடக்கு மளவே.”

விடக்கு = உடல். அமரர் = விரும்பத் தக்கவர்.
நடக்குமளவு = உயிர்ப்பு இயங்கும் வரை.
இரண்டு = அருந்தல், பொருந்தல். அமர்வு = விருப்பம்.

அனைத்து உயிரும் உய்யும் வண்ணம் சிவனால் தரப்பட்ட உடலில் உள்ள பொறிகள் அந்நன்மைக்குத் துணையாகவே அமைக்கப்பட்டுள்ளன. மலச்சார்பினால் அவைகள் தீய வழிகளில் செல்கின்றன. அவ்வழியில் உயிராகிய நாமும் செல்லாது நலச்சார்பால் சிவனின் திருவடிக்கு ஒப்புவித்து மீளா அடிமையாய் வாழ வேண்டும். இதுவே புலனடக்கமாம். புலனடக்கம் உள்ளவரே புலவர். புலவரால் விரும்பப் படுபவர் அமரர். உடல் அருந்தல், பொருந்தல் ஆகிய இருவின்பத்திலும் ஈடுபட உயிர்ப்பு வீணாகும். அவ்வுயிர்ப்புள்ளவரை உடலும் நடக்கும்.

233. நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
நாபியாகிய உந்திக்கமலத்தில் முக்கலையொன்றி அசைவற்று நிற்க, உடல் சாகாது.
நாபி = பிரணவ மத்தி.

திருமந்திரம்:

“உந்திக்கமலத் துதித்தெழுஞ் சோதியை
யந்திக்கு மந்திரமாரு மறிகிலர்
அந்திக்கு மந்திரமாரு மறிந்தபின்
தந்தைக்குமுன்னே மகன் பிறந்தானே.”

அந்திக்க = வந்திக்க, வணங்க.

படைப்புக் களமாம் கொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பைழம்பை வணங்கி வழிபடும் முறையினை யாரும் அறிகிலர். அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான். “சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்தில் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று.

“நாவியின் கீழது நல்லவெழுத் தொன்று
பாவி களத்தின் பயனறிவா ரில்லை
யோவிய ராலு மறியாவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தாரே.”

நாவி = நாபி; கொப்பூழ். பாவிகள் = தீவினையாளர்.
ஓவியர் = படைப்போன் முதலிய தேவர்.

கொப்பூழின்கீழ் முலத்தே திகழும் ஒரு நல்ல எழுத்தாம் ஓங்காரம். சிவசிவ எனச் சொல்லாத தீவினையாளர் இதன் பயனை அறியார். படைப்போன் முதலிய தேவர்களாலும் அறிதல் அரிது. அம்மையொடு அப்பனும் ஆங்கே திகழ்கிறான்.

234. கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.

கண்டமாகப் பிரிதிருக்கும் அகண்டமாகிய கண்களினுள்ளே ஞானாசிரியனால் சுட்டப்பட்ட இடத்தில் ஒளியை நிலைத்துக் காண பொன்னிறமாகிய உடலையடையலாம்.

235. சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.

இடது திருவடியாகிய சந்திரனில் உள்ளே அக்கினி கலையைச் எழுப்பிப் பொருந்தும்படி செலுத்தத் தூல உடலானது சத்தி நடுவிலோடி ஆகாயத்தையொக்கும்.