Tag Archives: பட்டர்

4.பட்டனுக்குச் செளரி காட்டல்

எனதருமை நண்பர் திரு.இராமகி அவர்கள் வெளியிட்ட இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.”
அவரிடம் அனுமதி பெற்றுவிடுவோமெனும் நம்பிக்கையில், இவ்வாங்கில ஆண்டு முதல்நாளில் என் வலைப்பூவில் வலையேற்றுகிறேன்.

“போற்றுவோர் போற்றல் மட்டும் போகட்டும் இராமகி அவர்கட்கே.”

4.பட்டனுக்குச் செளரி காட்டல்
********************************

“பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில்
படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன்
பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும்,
செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச்
செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம்
மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய்,
வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

முதல் பாடலில் உள்ளது தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, “ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது” என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,”பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்” என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் “அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது” என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

இந்தக் கதை ஆண்டாளையும், அபிராமிப் பட்டரையும் கலந்தாற்போல் நமக்குத் தோற்றம் அளித்தாலும், இதைத்தான் நான் கண்ணபுரத்தில் கேட்டேன். இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத்தான் திருமஞ்சனம் செய்வார்கள்.