Tag Archives: பராசக்தி

45.நம் கைமுதல்

பராசக்தியின் அம்சமான நமது தாயானவள் நம்மைப்பெறும்போதே நம்மை நன்றாக வாழவைக்க வேண்டும் எனும் எண்ணத்தாலேயே நமக்குப் பதினாறு வயது வரை வளரும் அளவுக்கு விந்து சக்தியைப் பாலின் மூலமாகத் தருகிறாள். இதுவே நமக்கு அன்னை அளித்த கைமுதல் (CAPITAL). இதை நாம் 16 ஆண்டுகளுக்குப்பின் திருப்பித் தரவேண்டும் எனும் விதி(condition)யையும் விதிக்கிறாள். 16ம் அகவை முடிந்தவுடன் அன்னை பராசக்தி (பெற்றவளும் பராசக்தியே) முன்னால் கொடுத்த பால் கடனை வசூலிக்க எண்ணி மன்மதன் என்னும் சேவகன் மூலமாய் நமக்குப் பல தடவைகளில் அறிவிக்கிறாள்(reminder notice). சிறிது காலத்திற்குப்பின், இப்போது நம் கடனை வட்டியுடன் கொடுக்கத் தயாராயிருப்பான் என்றெண்ணி, ஒரே தடவையில் கடன்காரன் மனம் வருந்துபடி வசூல் செய்தலாகாது என எண்ணி நமக்குத் திருமணம் செய்துவைத்துத் தன் பிரதிநிதியான பெண்ணைக நமக்கு மனைவியாக்கி அவள் கடனைத் தவணை முறையில் வசூல் செய்ய அனுப்புகிறாள்.

சத்தியின் பிரதிநிதியாம் நம் மனைவி, நம் உடலாகிய முதலை நன்குணர்ந்து, நாம் ஒரே முறையில் இவனிடத்தில் விந்தெனும் கடன்துகையைப் பெற எண்ணுவோமாகில், இவன் உடலாகிய முதல் அழிந்துவிடுவதுடன் நமது முழுத்துகையும் வசூலாகாது; ஆதலால், இவனிடத்தில் சிலகாலமிருந்து நம் எசமானியாம் பராசத்தி கொடுத்த பாற்கடனை வசூலிப்போம் என்று கருதி, “தோலிருக்கச் சுளை விழுங்குவதுபோல்”, நம் உடலாகிய முதலை, மனம் என்னும் வணிகனைக்கொண்டு, உலக விவகாரம் என்னும் வியாபாரத்தை நடத்தி, உடலெனும் முதலினாலுண்டாகும் விந்து என்னும் இலாபத்தை அப்போதைகப்போது வசூல் செய்து கொண்டுள்ளாள். (மாதரசிகள் மன்னிக்க!!!)

இதைக் கொஞ்சம் அறிந்த நழுவும் பேர்வழிகள் என்ன செய்கிறார்களெனில், “சத்தியானவள் நம் அறியாப் பருவத்தில் நாம் கேட்காமலேயே வலிய வந்து கொடுத்ததை வட்டிமுதலுமாக அடாதுடியாக வசூலிக்க வருகிறாள். கொடுக்காவிடில் பலவிதமான தொந்தரவுகள் தருவாள். ஆகையால் அவளுக்குத்தெரியாது காட்டில்போய் ஒளிந்து கொண்டுவிடுவோம் எனத் துறவு கொண்டு ஓடிப் போய்விடுகிறார்கள். அதைக் கண்ட சத்தி சினங் கொண்டெழுந்து, “கடன்காரப்பயலுக்கு அவ்வளவு தைரியமா?” என மன்மதனை அழைத்து, “அவனைக் கண்டுபிடித்துக் கடனைக் கேட்டு வா!” என்கிறாள். மன்மதனும் துப்பறிந்து துறவியைக் கண்டுபிடித்துக் கடனைக் கேட்க, துறவியும் அதைஇதைச் சொல்லி இல்லையென்கிறான். மன்மதனும் முடியவில்லை என சத்தியிடம் கூற, சத்தியும் தன் தூதுவர்களான விலைமாதர்களைப் புணர்ச்சி(சையோகம்) எனும் வாரண்டை அனுப்பி வைக்கிறாள். அதற்கும் தப்பித்துக்கொண்ட முனிவரிடத்துத் தானே நேரில் சென்று அவர்களின் கனவில் விந்தொழுகல் எனும் பிடிவாரண்டைப் பிறப்பிக்கிறாள். அப்போது அந்த முனிவர்களோ, இனி தப்பிக்கவியலாது என்றெண்ணிக் காலில் விழுந்து கடனை இரத்து செய்திடு தாயே! நான் தவக்கோலத்திற்கு இழுக்கு தேடமாட்டேன் என்றெல்லாம் சொல்லி, கருணையின் வடிவான சத்தியைக் குளிரவைத்து விடுகிறார்கள். அவர்களுடைய திட சித்தத்திற்காக, இரக்கமும் வியப்புமுற்று மன்னித்து, “தனக்கு உண்மையான ஊழியனாக இருக்கும்படி ஆணையிட்டு, அவனை முழுவதும் சோதித்து, அருளாகிய மெய்ப்பொருளைக் கொடுத்து மெய்ஞானியாக்கி விடுகிறாள்.

உலகாயதத்தில் மயங்கிய மற்றவர்கள், வாரண்டாகிய விலை மாதர்களுடன் கூடிக் குலவி முதலை இழந்து வெட்டை முதலிய நோய்களை வரவழைத்துக்கொண்டு, நரகக் குழியில் தானே விழுவார்கள். இக்கடனையும் பிராரப்த கருமத்தில் சேர்த்துக் கொள்ளுவர்.

(இது சிறு வயதில் இராமாயண நாடகத்தில் பார்த்தது. கோர்வையில்லாவிடின் நாடகத்தை நடித்தவர்கள்தான் விடை கூறவேண்டும்.)

நாடகத்தின் இறுதியில் பராசத்தி பரிபாலனமெனும் பாடலொன்றைக் கோமாளி மேடைக்கு வந்து பாடுவார்:

“மாதாவாய் வந்து அமிர்தந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத் தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியும் மாமியா னாள்”

ஆக, பெண்கள் எல்லோருமே சத்தியின் அவதாரமே.