Tag Archives: பரிபூரணம்

ஞான வெட்டியான் 1500 – 1

திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய
ஞான வெட்டியான்
1500
###########################

(ஞானம் + எட்டி = ஞானமெட்டி)

பாயிரம்

########

காப்பு:

1.அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
          யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
          மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
         யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
          குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.

 

அண்டமாகிய வெளியிலும், பிண்டமாகிய உடலினுள்ளும் நிறந்து நிற்கும் பிரும்மா, விட்டுணு ஆகியோர் போற்றி. அகண்ட பரிபூரணமாகிய இறையின் அருள் போற்றி. இப்பூவுலகம்சூழ் சூரிய, சந்திரர் ஆகியோரின் சுடர் போற்றி. இனிய தமிழோதும் அகத்தியனைப் போற்றி. எட்டு திக்குகளும் போற்றும் என் ஞானாசிரியனாகிய சுவாமி போற்றி. இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகியவை சந்திக்குமிடமாம் கமலம் போற்றி. யோகநூல்களில், குண்டலினி எனப்படுமிடத்தில் அமர்ந்திருக்கும் விநாயகன் போற்றி. அத்துடன், குகமணியாம் (குகை + மணி) சுப்பிரமணியம் போற்றி.

பிரம்ம விட்டுணுக்கள் அண்டத்திற் செய்வது போலவே பிண்டத்திலும் தத்தம் செயல்களை செய்யவேண்டியது மிக அவசியமாகிறது. ஆதலால், அவர்களை, அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி என்றார். சர்வவியாபகத் திருவருளையே இந்நூல் உட்கிடையாகக் கொண்டிருத்தலின் அகண்ட பரிபூரணத்தி னருளைப்போற்றி என்றார். இந்நூல் தேமதுரத் தமிழில் இயம்பப்பட்டிருப்பதால், அத்தமிழுக்கு உரியவனாகிய குருமுனியாம் அகத்தியனைப் போற்றினார். குருவருள் இல்லையெனில், இம்மாகாவியம் இனிதே உலகத்தோருக்குக் கிடைக்காதென்பதால், எண்டிசையும் புகழும் குருவைப் போற்றினார்.

இந்நூல் முழுவதும், பிண்டக் கருத்துக்கள் அண்டக் கருத்துக்களில் மறைவாக இயம்பப்பட்டிருப்பதால், முக்கலையின் மூலாதாரமாம் விநாயகனைப் போற்றினார். அத்துடன், (கபாலக்)குகை மணியையும் போற்றினார்.