Tag Archives: பிரம முடிச்சு

ஒளவைக் குறள் – (51-60)

1. வீட்டுனெறிப்பால்
*********************
6. அங்கிதாரணை (51-60)
*************************
51.அந்தத்தி லங்கி யழல்போலத்  தானோக்கிற்
பந்தப் பிறப் பறுக்கலாம்.

சூரிய சந்திர கலைகளை அக்கினி கலையோடு கலந்து நோக்கில், அங்கியான மூலாக்கினி சுவாலைபோல் கிளர்ந்து எழுந்து உச்சி நோக்கிப் பாயும்.
இப்பயிற்ச்சியைத் தொடர்ந்து செய்தால் (அந்தத்தில்) முடிவில் பிறப்பெடுக்கும் பந்தபாசங்களை அறுத்து விடலாம்.

“ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு,
உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
ஊதியறி வாயறிய மாட்டாயானால்
உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை.”

“ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்”
என்றும் சித்தர் நூல்கள் கூறுகின்றன.

52.உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மல மறுக்கலாம்.

பிரணவ எல்லைக்குள்ளும், வெளியேயும் ஒரே காலத்தில் பிராணனுக்குப் பலத்தைக் கொடுக்கும் மூலாக்கினியை எழுப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தால் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மலங்களை அறுக்கலாம்.
ஓங்காரத்துக்கு உள்ளும் புறமும் அக்கினியை எழுப்பி, அதன் கலைகளைப் பாய்ச்சினால் இறைத் தத்துவங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயையை ஒழிக்கலாம்.

53.எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கன லுருவ மாம்.

முக்கலைகளையும் இணைத்து அக்கினியைக் கிளப்பி ஓங்காரத்துட் சென்று பார்த்தால் பிரம முடிச்சாகிய இருட்டுக்குள் ஒளி ஒளிரும்.

54.உள்ளங்கி  தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி  தானாம் விரைந்து.

உள்ளங்கி = பிரணத்திற்குள் பிரவேசித்த அக்கினியாக இருக்கும் நாதகலையை ; வெள்ளங்கி = பிந்து கலை.

பிரணவத்திற்குள் நுழைந்த அக்கினியாயிருக்கும் நாத கலையை பூரணமாக மூலாக்கினியை எழுப்பி அதன் சுவாலையை நாத கலைமேல் பாய்ச்சினால் பிந்துகலை தானாகவே மேலே எழுந்து நிற்கும்.

55.உந்தியி னுள்ளே யொருங்கச்  சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.

மணிபூரகமாகிய உந்தியில் அக்கினி கலையை உட்புகச் செய்தால், இரவு, அழலாம் நெருப்புபோல் பிரகாசிக்கும்.

திருமந்திரம்:

“உந்திக்கமலத் துதித்தெழுஞ் சோதியை
யந்திக்கு மந்திரமாரு மறிகிலர்
அந்திக்கு மந்திரமாரு மறிந்தபின்
தந்தைக்குமுன்னே மகன் பிறந்தானே.”

அந்திக்க = வந்திக்க, வணங்க.

படைப்புக் களமாம் கொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பிழம்பை வணங்கி வழிபடும் முறையினை யாரும் அறிகிலர். அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான். “சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்தில் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று.

உந்திச் சுழியி னுடனோர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

முகடு = உச்சித்துளை
சிவமந்திரம் என்பதை முன்மொழி (ஓம்) அல்லது அம்சம் என்றும் கூறுவர். அம்சம் என்பது ஆவியின் மறை (மந்திரம்). இம்மறையுணர்வு காணும் வகையாவது: உயிர்ப்பு உள்ளிருந்து வெளிவரும்போது “அம்” எனும் ஓசையுண்டகும்; வெளியிலிருந்து உள்வரும்போது “சம்” எனும் ஒலியுண்டாகும்.

கொப்பூழின்கண் தோன்றும் உயிர்ப்பினைச் “சிவசிவ”(என்னும் பீச மந்திரத்தால்) என நினைந்து உச்சித் துளையில் நிறுத்தி கீழ்நோக்கிச் செல்லும் காற்றைச் செல்லமுடியாதபடி செய்து மேல்நோக்கிச் செலுத்த, சிவனுடைய தன்மை பெறுவான்.

மூலாதாரம் முதல் புருவநடு வரையுள்ள ஆறு ஆதரத்தானத்துக்கும் முறையே ஓம் யநமசிவ, நமசிவய, சிவயநம, வயநமசி, சிவய சிவ, சிவசிவ எனும் பீசங்கள் உரித்தாகும். மூலத்தில் ஓம் யநமசிவ முதலில் வருவதாலும், ஓம் சிவயநம பின் வருவதாலும் மூலத்திற்குறிய கணபதி(பிள்ளையார்) சிவமாகிய தந்தைக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.