Tag Archives: பிரளயம்

26.பிரளயம்

பிரளயம்

*************

புராணங்களிலிலும் சோதிட நூல்களிலும் பல யுகங்கள்.
அதில் கடைசி யுகம் கலியுகம்.

கலியின் பொருள்என்னென்ன?

கடைசி யுகம், அம்பு, ஒலி, கடல், சனி, சிறுமை, போர், வஞ்சகம், வலி,
வறுமை, செறுக்கு, மகிழ், கர்வி, நெருங்கியிரு, நழுவு, நீக்கு, மனஎழுச்சி, துன்பம், ஆரவாரம், இருமல், கலகம், தடிப்பு, தழைத்தல், பனங் கிழங்கு, பெருக்கு, வெளி,எழுச்சி, பொலி,எழு, முழக்கம், ஒலி …….

இதில் கடைசி யுகம் என்பதை மட்டுமே பார்க்கின்றனர். பிரளயம் வரும் என்கின்றனர். மேலே கூறிய பொருட்களில் கெட்டவை எல்லாம் இப்பொழுது உள்ளது; நடக்கின்றன: இன்னும் மோசமான விளைவுகளும் வரலாம்.

சுனாமி வந்தது. நாம் என்ன செய்தோம்? அதை எதிர்கொள்வது எப்படி ? எனும் கேள்வி இன்னும் கேட்கும் நிலையில்தான் உள்ளது. பரிகாரம் கிட்டவில்லை.

இதே போல பிரளயம் வந்தால் நாம்என்ன செய்ய இயலும்?

பக்தி வழி செல்வோன் “இறைவா!என்னைக் காப்பாற்று”என்று வேண்டுவான்.

ஞான வழி செல்வோன் என்ன செய்ய வேண்டும்? தன்னுடைய பயிற்சியைக் கைவிடாது தொடர்ந்து செய்து தன் விந்து சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆதியும் அதுவே. அந்தமும் அதுவே.

கல்கி புராணத்தில் கலியுக விளக்கம்
**********************************
1.
கலியுகத்தில் தர்மத்தை நிந்திப்பவர்கள் பிறந்திருக்கின்றனர். இவர்களை வியாதி, முதுமை, கெடுதல், துக்கம், பயம், சோகம் ஆகியன ஆட்கொண்டுள்ளன. யக்ஞம், தானம், தர்மம், வேதம், தந்திரம் முதலிய சாத்திரங்களை அழிப்பார்கள்.

2.உலகத்தை நாசம் செய்கிற கலியரசனின் அடியாட்கள் மதன உடல் எடுத்துக் கொள்வார்கள்.

3. இவர்கள் மிகவும் டாம்பமாகவும், பெற்றோர்களையும் மற்றவர்களையும் கொடுமைப் படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.

4. பிராமண குலத்தில் பிறந்தும்கூட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை எல்லாம் எதிர்ப்பவர்களாகவும், தரித்திரர்களாகவும் சூத்திரர்களுக்குக் கீழ்த்தரமான சேவை செய்பவர்களாகவும் இருப்பார்கள். பூணூலில் மட்டும்தான் பிராமணத்தனம் இருக்கும். திரிதண்டம் வைத்திருப்பவர் எல்லாம் சாதுக்கள். (குலம் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். கல்கி புராணம் கூறுகிறது).

5. தர்மத்தையும், வேதத்தையும், மாமிசம், போதைப் பொருட்கள்
விற்பவர்களாகவும், குதர்க்க வாதிகளாகவும், காம வெறி உள்ளவர்களாகவும், பிறன் மனைவியை பெண்டாளுபவராகவும் இருப்பார்கள்.

6.குள்ளர்களாகவும், பாவிகளாகவும், மடங்களில் வசிப்பராகவும் இருப்பார்கள். இவர்களுக்குத் தாய், தங்கை, அக்காள், தாரம் ஆகியோர்களையெல்லாம் வேறுபாடின்றிப் புணருவார்கள். அடுத்தவரின் சொத்துக்களையும், பொருளையும், உடமைகளையும் கவர்வார்கள்.

7. திருமணம் முதலிய நல்ல காரியங்களில் கலகம் செய்தலும், பெண்களைக் கவர்ந்து செல்லுதலும் இவர்களுக்குத் தொழிலாகும். கடவுளை யாரும் பூசிக்க மாட்டார்கள்.

8.முனிவர்கள் வஞ்சகர்களாயும், காமம் மிக்கவராய் வாழ்வார்.
இல்லறவாசிகளுக்கு சிந்தனைத் திறம் போய்விடும். குரு நிந்தனை நடக்கும்.

9. நீதிபதிகள் தங்களின் கையாலாகாத் தனத்தாலும், பொருள் ஆசையினாலும் குற்றவளிகளைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள். மக்கள் தங்களின் இயலாமையை விரக்தியாகக் காட்டிக் கொள்ளுவார்கள்.

10.நிறையப் பேசுபவனே பண்டிதனாவான். பணக்கரன் மட்டுமே சாதுவாவான். புகழுக்காக மட்டுமே தர்மத்தைப் பிரசாரம் செய்வார்கள். கடைப் பிடிக்க மாட்டார்கள். வயலில் விளைச்சல் குறையும். நதிகளில் நீர் வற்றிவிடும். வேசித்தனம் தலைவிரித்து ஆடும். கணவர்கள் ஒதுக்கப் படுவார்கள். சாத்திரத்தில் எது எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறதோ அவைகள் எல்லாம் செய்யப்படும்.

மேகம் கல் மழை பொழியும். வெள்ளம் கட்டுக்கடங்காமல் மக்களையும், உடமைகளியும் அழிக்கும். குடி மக்கள் வரிக்கொடுமை தாங்காமல் துடிப்பார்கள். அரசன் சர்வாதிகாரி ஆகிவிடுவான். அவன் வைத்ததே சட்டம். சட்டம் போட்டவனே அதை உடைப்பான்.

12. கையாலாகாத குடிமக்கள் கோழைகளாகித் தங்கள் குழந்தைகளைக்கூட சுமக்கமுடியாமல், ஆள் அரவம் இல்லாத காடுகளையும், மலைகளையும் நாடிப் போவார்கள்.

13. கலியின் முதல் பாகத்தில் ஆண்டவன் கிருஷ்ணனை நிந்திப்பார்கள். 2ம் பாகத்தில் அவன் பெயர்கூடச் சொல்ல மாட்டார்கள். 3ம் பாகத்தில் வர்ண சங்காரம் நடக்கும். 4ம் பாகத்தில் கடவுளை மறந்தே போவார்கள்.

ஸ்காந்த புராணத்தில் கலியுக விளக்கம்
*************************************

ஸ்காந்த புராணத்தில் மகாகாலனுக்கும் மகாராஜா கரந்த மகனுக்கும் நடக்கும் உரையாடல்:

கலியுகக் கடைசியில் அன்னத்தை விற்பார்கள். பெண்கள் விபசாரம் செய்து பொருள் சேர்ப்பார்கள். வீட்டுக்கு அதிபதி பெண்ணே. உடலை வெளிக்காட்டும் உடுப்பு அணிவார்கள். நிறைய உண்டு பூதகிபோல் தோற்றமிருக்கும். ஆண் அடிமை. மழை குறைந்துவிடும். விவசாயம் பாதிக்கப்படும் (1/10). அநேகர் பிச்சையெடுப்பர். 15வயதிலேயே பஞ்சமா பாதகம் செய்ய அஞ்சாமல், கற்பை அழிப்பர். திருடன் வீட்டிலேயே திருட்டும் நடக்கும். ஒருவரும் ஒரு முயற்சியும் செய்யாமல் சோம்பி இருப்பர். விலங்குகள் மனிதனைத் துன்புறுத்தும். வேடதாரிகளுக்குப் பஞ்சமிருக்காது. பெண்களால் தீராத நோய் (எய்ட்ஸ் போல்) வரும்.

வியாசர் கூற்று:
*********************
குடிமக்களைக் காப்பாற்றாது வரி விதித்துத் தன்னைக் காத்துக் கொள்ளும் அரசாங்கம் தோன்றும். அரசர்கள், பிராமணர், சூத்திரர்களுக்குச் சேவை செய்வார். சூத்திரர்கள் பிராமணர்போல் இருப்பார்கள். பிராமணன் ஆயுதம் தரிப்பான். யாகம் முதலியவைகள் நடக்காது. சமபந்தி போஜனம் நடக்கும். கள்ளர்கள் அரசாங்க வேலைகளிலும், அரசர்கள் கள்ளர்களுக்கு உடந்தையாகவும்
இருப்பார்கள். பிராமணர் வேதத்தை விற்பார்கள். பெண்கள் கற்பை விற்பார்கள்.

யுகமுடிவில் மக்கள் கீழ்நோக்கியே செல்வார்கள். வேலையற்ற பிராமணர்கள் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பர். பேராசையுடன் படிக்காமல் ஞானிபோல் நடிப்பார்கள். நட்சத்திரங்கள் நிறம் மாறும். அந்தியில் சந்திரன் சிவப்பாகும். அப்பனை மகனும், மாமியாரை மருமகளும் அடிமை போல வேலை வாங்குவார்கள்.

யோவான் சுவிசேஷம்: 6ம் அதிகாரம்.

***************************************

“எல்லோரும் மடிவார்கள். ஆனால் உத்தமர்கள் சிலர் தங்களின் இருதயத்தால் (இரு+ உதயத்தால் = இரு கண்கள்) ஒளிந்துகொண்டு எல்லாவற்றிலும் தப்புவார்கள்.”

இருதயத்தால் தான் தப்ப முடியும். உயிரைக் கண்களின் உள்ளே ஒளித்து வைக்கத் தெரிந்தவர்கள்.

பேதுரு 2ம் அதிகாரம் 3ல் வசனம் 15:

************************************

“ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு.”

தெசலோக்கியரின் திருமுகம் 2 அதிகாரம் 2 வசனம் 3 – 12 :**********************************************************

ஆண்டவன் உண்மையின் மீது அன்புகொள்ள மறுத்தவர்களைத் தண்டிக்கவே வருகிறான். அன்பை கைக்கொண்டவருக்கோ, அன்பின் அடையாளமான விசுவாசம், தாழ்மை, பிறரை ஆதரிக்கும் தன்மை, பிற உயிர்களைத் தன் உயிர்போல் எண்ணும் நற்குணமுடையோருக்கோ தண்டனை கிடையாது. மேற்கூறியவர்களில் விளைந்த வித்தாக உள்ளவற்றை மட்டும் யுகத்துளிகளாகத் தேர்ந்தெடுத்து யுக வித்துக்களாக வைத்துக் கொள்வான்.

“ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள். ஞான வளர்ச்சி அடைய ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.” (அதி 5 வச 1 – 21)

கொரிந்தியர்:
*******************

“விழித்திருங்கள். விசுவாசத்தில் நிலைத்திருங்கள். ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள். மன வலிமை காட்டுங்கள். அன்பு மயமாய் இருங்கள்.”

இயேசு பிரான்:
**********************

(உங்களின் நினைவினில் )நிலைத்து நின்றால் உங்கள் ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளுங்கள்”.

மணிவாசகப் பெம்மான்: பிடித்த பத்து
*****************************************

மனம் கீழே இழுத்துச் செல்லும் உடும்பு.

நினைவு (பிருமத்தின் பீடம்) மேலே தூக்கிச் செல்லும் புரவியின் நடை(வாசி).

கவனம் உணர்வெனும் பசை. சிதாகாயத்திற்குக் கொண்டு செல்லும் அண்டரண்டப் பட்சி.

அழுத்தி வைக்கப்பட்ட காற்றாயினும், நெருப்பாயினும் மற்றும் எவ்வித
சக்திகளாயினும், தன்னில் பலங்கொண்டு விம்மிப் புடைத்து வெடித்து
சகலத்தையும் தாண்டி நிற்கும். அதேபோல் விரிந்து ஓடுகின்ற விரிவாம் நினைவை அடைக்கவும், ஒடுக்கவும் செய்யும் பழக்கம்தான் ஞானவினை, வளிப்பயிற்ச்சி, பிராணாயாமம்.

ஒளவை:
*************

நமது உள்ளுடம்பு நெஞ்சமே. பருவுடல் பொய்யே

(ஞானக் குறள் – வீட்டு நெறிப்பால் – 3.உள்ளுடம்பின் நிலைமை )

உணவு மட்டு மிதத்தோடும், ஆக்கம் வேண்டுவான் தன் தூக்கம் கடிந்து செயலில் ஆள்வினையுடையவனாய் இருக்க வேண்டும். அன்பை மார்புக் கவசமாகவும், நம்பிக்கையையைத் தலைச் சீரா(தலைப்பாகை) வாகவும் கொள்ளவேண்டும்.

2312 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டுள்ள “அப்தியாஸ்” ஆகமத்தில் ”
பிறருக்கு நீ செய்தது போல் உனக்கும் செய்யப்படும். உன் செயல்கள் உன் தலை மேலேயே சுமத்தப்படும்.”எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக, காப்பதும் அழிப்பதும் நம் கையில்தான் எனத் தெரிகிறது. ஆண்டவன் கையில் இல்லையெனாது, நாம்தான் ஆண்டவன் என்று ஆகிறது.

“உங்கள் திருவிழாக்களை அருவருக்கிறோம். வெறுக்கிறோம். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பம் இல்லை. உமது பாடல்களையும், வீணையின் இசையையும் நாம் கேட்கமாட்டோம். அதற்கு மாறாக நீதி தண்ணீரைப்போல விரைந்தோடட்டும். நேர்மை நீர்போலப் பாயட்டும்.”

நூகு நபிஎன்னும் நோவாவின் பிரளயம் நமக்குக் கோடி காட்டுவது,
யார் எவராயிருந்தாலும் அவர்களுடைய அறிவே பிரளயத்தைத் தாண்டக்கூடிய சொத்தாக வைக்கப்பட்டுள்ளது.”

திருக்குரான் – 30ம் சூரா:
************************

எவர் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனப் பூங்காவில் மகிழ்விக்கப் படுவார்கள்.”

36ம் சூரா:
***************

சூர்எனும் குழல் ஊதப்படும். அப்பொழுது இறந்தவர்கள் தங்களின்
கபர்களிலிருந்து(சமாதி) வெளி வருவார்கள். ஆண்டவன் அவர்களின் (கெட்டவைகள் பேசும்)வாய்க்கு முத்திரை இட்டுவிடுவான்.
அவரவர் செய்கைக்குஏற்றபடி கூலி கொடுக்கப்படும்.
அங்கேஏற்றுக்கொள்ளப்படும்எந்தப் பரிந்துரைகளும் இல்லை.

51ம் சூரா:
***************

“இதில் விளங்குகின்ற இதயமுள்ளவருக்கு அல்லாது, தாம் மன ஓர்மையுள்ளவராய் இருக்கும் நிலையில் செவி சாய்ப்பவருக்கு நல் உபதேசம் இருக்கிறது.”

52ம் சூரா:
***************

“அந்த நாளில் வானம் சுற்றிக் குமுறும். மலைகள் இடம் பெயர்ந்து பஞ்சாய்ப் பறந்து செல்லும்.

56ம் சூரா:
***************

சந்திரன் பிளந்து விடும். ஒவ்வொரு காரியமும் அதனதன் நேரத்தில் நிலைபெறக் கூடியதாகும். அவை பரிபூரண ஞானமாகும். உங்களுடைய வீண் எண்ணங்கள் உங்களை ஏமாற்றி விட்டன.

16ம்சூரா 77ம் ஆயத்தில் விளக்கப்பட்டிருப்பவை
“உறங்கா விழிப்புலக சாதகம் பற்றியே”.

இறுதி நாளில் மேகத்துடன் வானம் பிளந்து மலக்குகள்எனும் இறைக்குலத்தின் சந்ததிகள் பெருந்திரளாக இறக்கப் படுவார்கள். இங்கு இறைக் குலம்என்பது தன்ன ஜெயித்தவர்களே.

அறிவையும் புத்தியையும்எவர் பயன்படுத்துகிறார்களோ அவர்களே ஈமான் கொண்டவர்கள்(இறை நம்பிக்கையாளர்கள்).

ஹதீஸ் 527:
******************

இறைத்தன்மை கொண்டவர்கள்:

உறங்குவதில்லை. நீதியும் நிலைப்படுத்தும் வைராக்கிய சித்தம் உடையவர்கள். அன்றாட நிகழ்ச்சிகளிலும், உணவிலும் அவர்கள் மாறுபாடு கொண்டிருப்பார்கள். இரவுக்கு முன்னும் பின்னும் தவம் செய்வார்கள். கருத்தில் ஒளியாகிய திரையை விலக்கிக் கொண்டிருப்பார்கள்.

இனி கல்கியானவர் சால்யன் என்ற மிலேச்சனுடைய அரசாங்கத்தை முறியடித்து சத்திய யுகத்தை குரு, சூரிய, சந்திர பூச நட்சத்திரத்தில் வரும் அமாவாசை திதியில் வெள்ளிகிழமையில் ஆரம்பிப்பார் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.

சோதிட நூல்களில் ஆதாரம்
******************************
சாதக அலங்காரம்
*************************
972
ம் பாடல்
*****************
மந்தனு மிருபாதி யரசனிந் நால்வர்
மாறியே கூடிடில் விளைவும்
மழைபயி ரற்ப மிவரிரு வர்க்கு
மற்றொரு பத்தினி லொருவர்.

இந்தவா றிருக்கின் வெட்டைகா லமதா
மிடபந்தேள் கோள்சிங்க மீனம்
இனியகும் பத்தி லிருக்கிலிப் புவியில்
இறைபுதன் மனுஷியரு மடிவர்

அந்தவீ டாறின் முன்சொன்ன நால்வர்
ஆதித்தன் குசனொடுங் கூடி
அமரவே குடிக ளிருந்தவூ ரெங்கும்
அலகைநாய் நரிகுடி கொள்ளும்

தந்திரஞ் சுருதி மொழிப்படி புரிந்து
தக்கதோர் வேள்விக ளெல்லாம்
தான்மறுத் திடுமம் புவிகள்கா டாகுந்
தானெனச் சாற்றுவர் பெரியோர்.”

சனியோடு இராகு கேதும் குருவும் ஒருவருக்கொருவர் சேருவதும், உடனே மறு இராசிக்குச் செல்வதும், மறுபடியும் வேறு அந்த 4 கிரகங்களில் ஒன்றும் கூடுவதாக இருந்தால் அந்த வருடம் மழை குறையும்; அதனால் பூமியில் தானிய விளைச்சல் குறையும்.
ஓர் இராசியில் மேற்கூறிய 4 கிரகங்களில் 2 கிரகம் ஒன்று சேர்ந்து மறு இராசிக்கு மாறுவதற்கும், மற்றோர் கிரகம் அவர்களுடன் சேர்வதுமாக இருக்க, இவர்கள் நின்ற இராசிக்கு 10ம் இராசியில் பகை கிரகங்கள் இரண்டும் ஒன்று சேர்வதும், அவன் மறு இராசிக்குப் போனவுடன் மற்றுமோர் கிரகம் அவனுடன் சேர்வதுமாக இருக்கில் அந்த வருடம் வெய்யில் அளவு கடந்து இருக்கும். ரிடபம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனம் என்னும் இராசிகள் வருட ஜெகத்ஜாதகத்தின் பிரகாரம் புதன் இருக்க, அந்த அரசனும் மக்களும் அழிவார்கள்.

புதன் நின்ற இராசிக்கு 6ம் இராசியில், சனி, இராகு, கேது, புதன்
இவர்களும், சூரியன், குஜன் இவர்கள் சேர்ந்திருந்தால் குடிசனங்கள் இருந்த தேசமெங்கும் பிசாசு, பேய் கணங்கள், நாய், நரி முதலியவை குடிகொள்ளும். வேதாந்த வாக்கியப்படி உலகோர் புரியும் யாகம் முதலியவைகளுக்குத் தடங்கல் வரும். அதனால், படிப்படியாக புலி, சிங்கம், விலங்குகள் வசிக்கும் காடாக மாறி விடும் என்பர்.

குமாரசாமீயம்
********************
உலகு சுதனில் வருஷமறில் ஆடிமுடியில்
குரு பகடூரலர் திசைக் காற்று வரில் அதில் பூர்வமும்லவனுறி நீசனும்
பஞ்சமுறிற் சிதனுக்
கனற்கு நிதி கவி தோற்கின் மாவனல் கண்ணடுக்கிற்
கலகமனற் பூர்வமுறிற் அவர்க்குளதாமே மதை
கது வவிவன் வருடமுற்றி காற்ரு சிதனாகி
நலனறு நாட்டிதிவார வருட முற்றுலகி
நண்ணுதலாகு மிடமிர் மேனவில் வதுஞ்சொற்பனமே.”

செவ்வாய்க் கிழமை வருடம் பிறக்கிலும், ஆடி உத்திராடத்தில் அக்கினி மூலை மற்றும் தெற்கில் காற்று அடிக்கிலும், ஆடி மாதம் பூர்வ பட்சம் பஞ்சமி திதி செவ்வாய்க் கிழமை வந்தாலும், சுக்கிரனுக்கு குரு, செவ்வாய்க்கு சுக்கிரன் தோற்றாலும், அசுவனி நட்சத்திரத்தில் சனியும் செவ்வாயும் கூடினாலும் உலகத்தில் கலகம், சண்டை மூளுமென்பர்.

மேலும் வருடம் பிறந்த லக்கினத்தில் செவ்வாய் இருக்க உலகில் அக்கினி பெருகும்.

வருடம் பிறந்த லக்கினத்தில் புதன் இருந்தால் , அதுவும் புதன் கிழமையாக இருப்பின் சூறாவளி, புயல் வரும்.

வருடம் பிறந்த லக்கினத்தில் சனியிருக்கக் கொள்ளை நோய், தொற்று
வியாதிகள், கொடிய அனர்த்தங்கள், பஞ்சம் ஆகிவை வரும்.

என் முடிவு:
******************

எது எப்படியேயாயினும் மனதை ஒருநிலைப்படுத்திக் கருத்தினில்
நிறுத்த வேண்டும். யுக வித்தாம் விந்து கெட்டிபட்டு விளையும். மேலேறும். விந்து வெளிவந்தால்தானேஎமன் நெருங்க முடியும். சாவு வரும்.

இங்குதான் கீதை வருகிறது:

“கர்மாவைச் செய். பலனைஎதிர்பார்க்காதே”

நூல் ஆதாரங்கள் போதும்என நினைக்கிறேன்.