Tag Archives: பிறப்பு அறுத்தல்

ஒளவைக் குறள் – (171-180)

2. திருவருட்பால்
******************
18. பிறப்பறுதல்   (171-180)
****************************
171.தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.

“தான் யார்?” என அறிவதற்குறிய கருவியான அறிவாகிய ஓங்காரத்தை உணர்ந்தால் பிறப்பற்ற வீடுபேறு அடையலாம்.

அறிவை அலட்சியம் செய்யாதே!:

வாசிட்டம்:

“பற்றத்தகு வாக்கியப் பொருளைப்பயிறன் நெஞ்சாற் பாவித்தோர்க்
குற்றுப்புகல் சொற்றிரளுள்ளே யொடுங்கும் வெந்தநில நீர்போற்
கற்றுப்பரமப் பொருணோக்கார் கண்ணா மறிவைக் கண்டறியார்
வற்றத்திரணம்போல் வாளாதிரிவர் மனச் செய்கை லெவரும்.”

“ஆதலினா லீதொன்றுஞ் செய்வதல்ல வடுத்துளவிச்சகமில்லை யறிவுமட்டு
மேதகுசங் கற்பிதமே வேதாவாகு மெய்யாக வறிவன்றி – வேறொன்றில்லைச்
சேதனமாத் திரத்துதித்த சிருஷ்டியந்தச் சேதனமே வடிவென்று செப்பலாகு
மோதியசெய்வோன் புசிப்போ னிரண்டுமல்ல வுறுபவந்தீர் பிரம்மமே     யுள்ளவெல்லாம்.”

திருமந்திரம்:

“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை யறியத் தலைப்படுந்
தன்னில் தன்னையும் சார்கில னாயிடில்
தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியவே.”

தலைமகன் = சிறந்தவன்.

தன்னையுணரும் முறையிலேயே தலைமகனாம் சிவனையும் உணர்தல் வேண்டும். தன்னையும் தன் தலைவனையும் அறிந்தவர்க்கு சிவன் தோன்றுவான். இதுவே தலைப்படுதலாம். ஆன்ம அருளால் தலைவனைச் சார்தல் வேண்டும். இல்லையெனில் அத்தலைவனும் சார்தற்கு அரிய நிலமையை உடையவன் ஆவான். ஈங்கு, தலைமகன் என்பது அறிவைக் குறிக்கும்.

இ·தையே, அப்பர் பெருமான்(அப்பர்:5.97 – 29):

“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே.” என்பர்.

172.அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.

பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அறியும் அறிவாகிய பிரணவத்தை உணர்ந்தால், அதை விட்டு நீங்கிப் பிறப்பெடுத்து இன்னலுற வேண்டாம்.

173.சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.

சிவனுருவம் ஞானவினையின் வலிமையால் தானாகவே பிரணவத்தில் சேர்ந்து அடங்கி, அசைவற்று நிற்கில் உடலழிவு நாசமாகும்.

174.உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.

உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை தோன்றாமல் ஒழிந்தால் உடல் இறை வாழும் இல்லமாகும்.
உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை மூன்றும் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதன.

சீவ பாவம்:

உறக்கமில்லையெனில் உடல் அமைதியுறாது. மனனம் இல்லையெனில் பகுத்தறிவு இல்லாது போய்விடும். பிராணனின் அசைவு இல்லாவிடில் இந்திரியங்கள் செல்லாது. தூங்காமல் தூங்குவது, மனனமற்ற மனம், அசைவற்ற பிராணன் இம்மூன்றும் ஞான மார்க்கத்துக்கு இன்றியமையாதன.

அறிவு பாவம்:

தூங்காமல் தூங்குவதால், சாக்கிரம், சொற்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய அவத்தைகளை அறியலாம். மனமற்ற நிலையினால் அறிவு எங்கும் விரிந்த நிலைபெறும். பிராணன் அசைவற்றால் சிவத்தைக் கண்டு சீவனைப் பரத்தோடு சேர்க்கலாம்.

175.நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.

உடலின்கண் உண்டாகும் நினைவும், யாவற்றையும் அறியவொட்டாது மறைக்கும் மும்முடிச்சுகளும், பசியும் ஒழிந்தவிடத்து, எல்லா உலகுக்கும் உடல் உறைவிடமாகும்.

உலக பாவம்:

நினைப்பு –

எண்ணங்களின் வல்லமையால்தான் எண்ணிய கருமத்தை முடிக்க.

மறப்பு –

மனம், வாக்கு, காயங்களினாலுண்டாகும் உழைப்புக்கு ஆறுதல் செய்ய.

பசி –

உணவுகளை உட்கொள்ளுதற்கும், விருப்பத்தோடு உட்கொண்ட உணவைச் சீரணித்துப் பின் பக்குவஞ்செய்து, சுக்கிலம், நாதம், மலமாகப் பிரிக்கும்.

ஞான பாவம்:

எண்ணங்களை கொல்ல மனம் வலிமையடையும். பிந்து பலப்படும். ஞானவினைக்கு உதவி செய்யும். மறப்பற்றால், தன்னையும் ஈரேழு உலகங்களையும் அறியலாம். பசியொழிய அமுதத் தன்மை உண்டாகிறது. ஆன்ம வல்லமை, உடல் வலிமை உண்டாகிறது. ஐம்புலன்களை உள்நோக்கிச் செலுத்தும் சூக்கும தத்துவங்களுக்கும், தூல தத்துவங்களுக்கும் வல்லமையைக் கொடுக்க, அமுத ஊற்று சுரக்கும்.

திருமந்திரம்:

“பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே.”

பிச்சை = தவ உணவு.  பிச்சைசெய் மாந்தர் = தவசிகள்.
மறப்பிலராகி = இரவு பகலாகிய நினைப்பு மறப்பு இல்லாதவராகி.

உயிருக்குயிராகிய இறைவன் தந்த உடலினில் உள்ள உயிர் பிழைக்க உழைக்காது பிச்சை எடுத்து உண்ணும் பலர், பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தினை அறிய மாட்டார். சிவன் திருவடிகளை மறவாமையே பெருந்தவம். அப்பெரும் தவம் செய்தோர் சிறப்பாகிய வீடுபேறு பெறுவதுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களையும் அடைவர். அவர்களே பிறப்பினை அறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவர்களாம்.