Tag Archives: பேசா எழுத்து

ஒளவைக் குறள் – (261-270)

3. தன்பால்

*************
27. ஞான நிலை (261-270)
****************************
261. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.

தற்புருடம் = பிந்துகலை; மா = பெருமைபொருந்திய;
அஞ்சை = பஞ்சேந்திரியங்கள்; உற்பனம் = தோன்றும்;
உரை = கலக்கிவை ( தயிர் எடுக்க உரை ஊற்றுதல்).

பிந்து கலையின் பெருமை பொருந்திய முகத்தில் பார்வையை மட்டும் வைத்து அதை நிறுத்தி, தோன்றும் பஞ்சேந்திரிய சக்திகளைக் கலக்கவை.

திருமந்திரம்:

“ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினா
லூழ்கொண்ட மந்திரந் தன்னா லொடுங்கே.”

சனவேதசத்தி = திரோதாயி.
ஊழ்கொண்ட மந்திரம் = அசபா மந்திரம்.

உயிர்களை நன்னெறிப்படுத்த  உடன் உறைந்து நடத்துவிக்கும் மறைப்பாற்றலினிடத்து அவ்வாற்றல் வனப்பாற்றலாக மாறும்படி அவ்வுயிர்கள் அன்பு செய்தால், நெல்வித்து ஒன்று பல்லாயிரக் கணக்காகப் பெருகுதல்போல் மீண்டும் மீண்டும் வினைக்கீடாகப் பெருகிவரும் உடல்களின் எல்லை முடிவு எய்தும். திருவைந்தெழுத்தின் முதலெழுத்தாம் “சி”கரமே பேசாவெழுத்தாம். அதன்கண் உயிர் ஒடுங்குதல் முறையாம். இதுவே அசபையாம்.

“திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பற வேநினந் தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பற யோகிக் கறநெறி யாமே.”

உறப்பு = செறிவு.

விந்துவாகிய தூமாயையிலிருந்து தோன்றும் அகரமும், அதனுடன் செறிவறவே நினைந்து ஓதும் சகரமும் சேர்ந்ததே “அச”(அசபை). மீண்டும் மீண்டும் இடையறாது அவ்வொலியை மறப்பின்றி நினைவில் நிறுத்தி நிற்றலே அகத் தவம் செய்பவருக்கு அறநெறியாம்.

அண்டத்தில், சிவமுகங்கள் ஐந்து; பிண்டத்திலும் ஐந்து;
1.தற்புருடம் – பிந்து கலையினுச்சி
2.ஈசானியம் – சூரியகலையுச்சி(ஈசானிய திக்கிலும்)
3.வாமனம் – சந்திர கலையிலும்
4.அகோரம் – அபானனுச்சியில்
5.சத்தியோசாதம் – நாதபிந்து சேருமிடத்தில்

262. தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.

பிந்துகலை ஊர்த்துவமுகத்துக்கு எழும்பும்போது அதனுச்சியில் நற்சேத்திரங்களும், அதன்மேல் பேரொளியுமுண்டு. கருத்தால் அதைக் காண்.

திருமந்திரம்:

“மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.”

மேலா நிலம் = தலை. கோலால் = காலாம் காற்றால்.
குறி = ஞானாசிரியன் குறிப்பிட்டபடி.
மாலானது = இருளாம் மருளானது.
மாளும் = கட்டுப்படும்.

மேல் நிலமாம் தலையில் உதிக்கும் விந்துவையும் நாதத்தையும் காலால் நடத்திக் குறிக்குள்ளே சென்றால் ஊறும் அமுதத்தை உண்டு, பற்ற வேண்டியதைப் பற்றினால் இருளாகிய மருள் கட்டுக்குள் வரும்.

263. ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.

பிந்துகலையை ஊர்த்துவமுகத்துக்குக் கொண்டுசெல்லும் போது, திருவடிகளை ஒன்றோடொன்று கலக்கச்செய்து (சூரிய சந்திர கலைகளைக் கலந்து), இட பிங் கலைகளோடு வேறுபடாது கலந்து பிரணவ உச்சியில் கொண்டு சேர்.

திருமந்திரம்:

“விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய வங்கியி னாலே நயந்தெரித்
தந்தமில் பானு வதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.”

விண்டேன் இப்பொழுதே  “வெட்டாத சக்கரமே திருவடி.”

வீசம் = வித்து.
பானுவதி கண்டம் = கதிரவன் இருக்குமிடம் – வலக்கண்(வலமூக்கு).
சந்திரன் சார்பு = திங்கள் இருக்குமிடம் – இடக்கண் (இடமூக்கு).

விந்துவாம் உயிர்வாழ் வித்துள்ள மூலத்தே விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள கதிரவன் மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழி ஏற்றி, அதற்குமேல் நெஞ்சம் முதல் நெற்றிவரை உள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடிவழி ஏற்றித் திங்கள் மண்டிலத்தில் அடைக்கலம் புகத் தண்மையும் வெண்மையும் மிக்க மெய்யமுதம் கிட்டும்.

264. கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.

அக்கினியை கொம்பினால் கிளரும்போது, பொறி நட்சத்திரம்போல் கிளம்பும். அதுபோல, கொழுகொம்பானது பிரம்மத் தானத்தில் பொருந்தி இருக்கச் செய்யின் அக்கினிச் சுவாலை கொழுந்து விட்டெரியும். அப்பொழுது, பிந்துகலை நற்சேத்திர  உருவங்களாகக் கருத்தில் தெரியும்.
“கொழுகொம்பு” – ஞானாசிரியன் கற்பிக்கும் முதல் தந்திரம்.

திருமந்திரம்:

“தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.”

பேரொளி = சிவ ஒளி.
தரகை கண்டது = நட்சத்திர வடிவான அக்கரம் காணப்பட்டது.

சக்கரம் நட்சத்திர வடிவாக அமைக்கப்பட்டது. அவ் விண்மீன்களுக்கு ஒளி கொடுத்துக்கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கிறது. இந்த நட்சத்திரச் சக்கரத்தில் சந்திரன், சூரியன் வர நட்சத்திர வடிவான எழுத்து முறையாகக் காணப்பட்டது.

“நின்றிடு விந்துவென் றுள்ள வெழுத்தெலாம்
நின்றிடு நாதமு மோங்கு மெழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.”

விந்து முதலாகக் கூறப்படும் குறியெழுத்துக்களெல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும். அந்த அந்த மனைக்குரிய எழுத்துக்கள் வந்தால் அங்கே நிற்கும். அதன்பின் தரகை எனும் நாள்கள்(நற்சேத்திரங்களாம் நட்சத்திரங்கள்) நிற்கும்.  மூலமுதல் நிலைகள் ஆறுக்கும் மனைகள் இரண்டிரண்டாம்.