Tag Archives: மதம்

சிந்தனைக்கு – 3

யாரோ ஒரு தீர்க்கதரிசி அல்லது அவதார புருடர் சொன்னார் என்பதற்காக நாம் மதத்தைப் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணர் சொன்னார் என்பதற்காக நாம் வேதங்களை நம்புவதில்லை.வேதங்களின் காரணமாகத்தான் கிருஷ்ணனை நாம் நம்புகிறோம்.

– விவேகாநந்தர்

2.மதம்-வினா?-விடை

தருமியின் வினாவும் என் விடையும்
*****************************************

68. எனக்கு மதம் பிடிக்கவில்லை…7

//“மதங்கள் எதுவும் எனக்குப் பிடிக்காது போயின; அதனால், எனக்கு ‘மதம்’ பிடிக்கவில்லை.”//

மதம் முன்னாலே உண்டாக்கப்பட்ட ஒன்று. ஏன் உண்டாக்கப்பட்டது பிளவுபட்டது? அதை ஆய்ந்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை. “காலமே காலனாம் எமன்”

//சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகள்:

சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகளால் எனக்கு நானே சமயங்கள், சமய நம்பிக்கைகள் மேல் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. முடிவு என்ன என்பதை பிறகு கடைசியில் காண்போம்; இப்போதைக்கு நான் கண்ட ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

1.) carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.

எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை ‘நிர்வாண நிலை’ என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம்.//

புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல். “சொர்க்கமும் நரகமும் உனக்குள்ளே” இது எமது கருத்து. இன்பம் அனுபவிக்குபோது சொர்க்கமாகவும், துன்பம் வரின் நரகமாகவும் உள்ளது.

//2.)”இரண்டாம் வருகை”, “அந்தி நாள்”, “தீர்ப்பின் நாள்” போன்ற பல பெயர்களில் உள்ள கோட்பாடுகளும் பல சமயங்களில் காணப்படுகின்றன. தீர்ப்பின் நாள் – judgment day – கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஒன்றே. இந்து சமயத்தில் கடவுளின் பத்தாவது அவதாரமாக எதிர் பார்க்கப்படுவதும், இறுதிக் காலமான கலியுகத்தில் அழிக்கும் ‘கல்கி’ அவதாரமாக கடவுள் வருவாரென்பதும் உள்ளது. ‘இறுதி எச்சரிக்கை’ என்று ஏன் ஒன்று கல்விச்சாலைகளில் நம்மைக் கலங்க வைக்கும் final exam மாதிரி இருக்கவேண்டும்? யோசிப்போம்.//

கடவுள் வருகிறாரோ இல்லையோ! “DEAD LINE” நெருங்கிவிட்டது. அதற்குள்ளாவது திருந்துங்கள் என்பதற்காக.

//3.) “திரித்துவம்” கடவுளின் மூன்று நிலைகள், அல்லது கடவுளர்களே மூன்றாக இருப்பது என்பதும் பல சமயங்களில் பரவிக்கிடக்கும் ஒரு கோட்பாடு. கிறித்துவத்தில் பிதா, மகன், ஆவி என மூவர்; ஆனாலும் ஒரே கடவுள். இந்து சமயத்தில் பிரம்மா (ஆக்கல்), விஷ்ணு (காத்தல்), சிவன் (அழித்தல்) என முக்கடவுள்கள். தாவோயிஸத்தில் ‘the three pure ones’.//

நம் உடலில் உள்ள சூரிய, சந்திர, அக்கினி கலைகள் மூன்றும் சேர்ந்தால், யோகநிலை கிட்டும். தெளிவு பிறக்கும். அப்போது தெரிந்துகொள்ளலாம் இறைவன் உருவிலி என.
ஏகத்துவம் திரித்துவமானது இப்படித்தான்.

//4.) ஆத்மா, ஆன்மா என ஏறத்தாழ எல்லா மதங்களுமே ஒரே மாதிரியாகவே பேசுகின்றன. இந்த ஆத்மா /ஆன்மா அழியாத ஒன்று என்ற நிலைப்பாடும் எல்லாரிடமும் உண்டு. ஆனால், ஆபிரஹாமிய மதங்கள், கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார் என்ற நம்பிக்கையால், மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டென்கிறார்கள். இந்து சமயமோ எல்லா உயிர்க்கும் ஆன்மா உண்டென்கிறது. மனிதன் இறந்த பிறகு அவனுக்குக் கிடைக்கும் (காரட்டோ, குச்சியோ) வெகுமதியோ, தண்டனையோ அந்த ஆத்மாவினால், (’நித்தியத்திற்கும்’) அழிவின்றி காலா காலத்துக்கும் அனுபவிக்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது.//

ஆத்துமா, ஆத்மா, ஜீவன், சீவன்(சிவன்) எல்லா மதங்களாலும் ஒப்புக்கொள்ளப் பட்டதே. நான் எனப்படும் சீவன் போனபின் பிரேதம். அதன்பின் போன சீவன் அழியுதோ! இல்லை அழியாமல் உள்ளதோ! அதைத் தெரிந்து யாருக்கு என்ன இலாபம்.
கதை எழுதுபவர்கள் வருணனை இல்லாது எழுதவியலுமா?

***********************************************

//5.) ஓஷோ சொகிறார்: “All religions are very oppressive.” உண்மைதானே. கடவுள் பெயரால் மக்கள்தான் எப்படியெல்லாம் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். பாத யாத்திரை, விரதம், உருளல், பிறழல், உடம்பெல்லாம் அலகு இப்படி ஒரு பக்கம். தங்கள் கைகளில் ஆணிகளை அடித்துக் கொள்ளும் கூட்டம் இன்னொரு புறம். தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு உடம்பெல்லாம் ரத்த விளாராக ஆக்கிக்கொள்ளும் மதத்தினர் இன்னொரு புறம். எந்தக் கடவுளும் இப்படியெல்லாம் பண்ணிக்கொள் என்று கூறியதாகத் தெரியவில்லை.//

எந்தக் கடவுளும் சொல்லவில்லை. கடவுள் இருந்தால்தானே!

//அதேபோல, எல்லா மதங்களுமே ஏழ்மையை பெருமைக்குரிய விதயமாகவே பார்க்கின்றன. எதற்காக ஏழ்மை உயர்த்தப் படவேண்டும்? மக்களில் பலரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களைக் ‘குழுமை’ப் படுத்தவா?//

எளிமைக்கும், ஏழ்மைக்கும் ஒரு சிறிய இடைவெளி உண்டு எனக் கருதுகிறேன். ஏழ்மை இல்லாமை. எளிமை (தெளிவான, சிக்கலும் கபடமுமற்ற) இருப்பதைக் கொண்டு பகிர்ந்துண்டு போதுமென்னும் மனம் கொண்டு வாழல். இது எம் புரிதல்.

எளிமையில்(ஏழ்மையில்) இருப்பவர்கள் மற்ற எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்தை நன்கு வைத்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும் எனும் எண்ணத்துடனும், “இறைவா! என் நிலையைப் பார்!” எனும் எண்ணத்துடனும் வாழ்கிறான்.

செல்வச் சீமானுக்கோ இறைவனைச் சிந்திக்கவே நேரமில்லை. இருக்கும் தொல்லைகளிலிருந்து எப்படி விடுபடுவது எனும் எண்ணமும், அதை நிறைவேற்ற மனிதாபிமானமற்ற செயலாயினும் எப்படிச் செய்வது எனும் எண்ணமும்தான் மேலோங்கி நிற்கிறது.

செல்வமிருக்குமிடத்தில் இறைச் சிந்தையில்லை எனும் காரணத்தால்தான் ஏழ்மை முன்னிறுத்தப் பட்டிருக்கலாம்.

//செக்ஸ் ஒரு தகாத விதயமாக, மறைக்கப் படவேண்டிய ஒரு விதயமாக, ஒடுக்கப்படவேண்டிய காரியமாக ஏன் கருதப்பட வேண்டும். பசி போல அதுவும் ஒரு அடிப்படை உணர்வு. பசி என்பதால் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுகிறோமா? அதே போல் செக்ஸ் சிந்தனைகளும் இருந்தால் போதுமே. celibacy ஏன் மதங்களால் தீவிரத் தன்மையோடு உயர்த்தப் படுகின்றன//

பிரமசரியம் இருந்தால் மட்டுமே இறைநிலை கிட்டும் என்பது ஒத்துக் கொள்ள இயலாவொன்று. அப்படி யார் கூறினாலும் அவருக்குப் பக்குவம் போதவில்லை என்பது எம் கருத்து. இல்லறத்தில் இருந்து பின் துறவு அடைந்த நிலையே பக்குவப்பட்ட ஒன்று. ஆயினும், இல்லறத்தில் விந்துவிரையம் தடுக்கப்படல் வேண்டும்.
http://njaanamuththukkal.blogspot.com/2005/10/4.html

//அடுத்த ஒரு விஷயம்: பயமுறுத்தல். எல்லா மதங்களுமே ஏதோ ஒரு விதமாக மக்களைப் பயமுறுத்தியே வருகின்றன. ‘பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது’ என்று சொன்னாலாவது மனிதன் பொய் சொல்லாமல் இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம்தான்.//

தாங்களே விடையிறுத்துவிட்டீர்கள். மனிதன் பொய் சொல்லாமல் இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம்தான்.

//கர்மவினை, இழிபிறப்பு, மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தல் என்பது இந்து மத பயமுறுத்தல்கள் என்றால், நித்திய நரகத்தில் உழலும் தண்டனை ஆபிரகாமிய மதங்களின் பயமுறுத்தல்கள். அதேபோல ‘இதோ உலகம் முடியப்போகிறது’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து வரும் பயமுறுத்தல்கள் வேறு. குழந்தைகளுக்கு அம்மா காண்பிக்கும் பூச்சாண்டி விளையாட்டு போல் தொடர்ந்து வருகிறது இந்த பயமுறுத்தல்கள்.//

இதற்கும் காரணம், மனிதன் தவறான வழிகள் செல்லக்கூடாதென்பதே!
********************************************************

//6.) நம்பிக்கையாளர்களிடம் அதிகமாகக் காணக் கிடைக்கும் இன்னொன்று கடவுளர்கள் நடத்தும் அதிசயங்கள் மேலுள்ள நம்பிக்கைகள். எண்ணெயும், தண்ணீரும், தீச்சட்டிகளும், தாயத்தும்,விபூதியும், மந்திரித்தலும் எல்லாம் எவ்வளவு நம்பிக்கைகளைத்தான் வளர்க்கின்றன! Miracles எனப்படும் சமய அதிசயங்கள் எந்த மதத்தில்தான் இல்லை.//

வருணனைகளுக்குப் பஞ்சமில்லை. இப்படி அதிச(செ)யங்களைச் செய்தார் என்றால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். மறுபடியும் மூடநம்பிக்கையா? இல்லையா? அது தனி மனிதனைப் பொறுத்தது.

//ஆனால், அதில் ஒரு வேடிக்கை: ஒரு மதத்தினரின் அதிசயம் மாற்று மதத்தினருக்கு வேடிக்கையாக இருப்பதுதான். நானே இதைச் சோதித்திருக்கிறேன். கிறித்தவர்களிடம் கர்ணன் குந்தவிக்கு சூரிய பகவானால் பிறந்த முறையைச் சொன்னால் ‘ஐயோ, என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது’ என்று சொல்வது வழக்கம். அவர்கள் மறந்து போகும் விதயம், ஏசு மரியாளுக்குப் பிறந்ததற்கும், அந்த இந்துக் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எல்லாமே நம்பிக்கையைப் பொருத்த விதயங்களே.ஏசு பலரைக் குணமாக்கினாரென்றால், பாண்டிய மன்னனுக்கு சிவனடியார் விபூதி கொடுத்து குணமாக்கினார்; கண்ணில் மண்ணை வைத்து குருடனுக்குக் கண் கொடுத்தாரென்றால், திருநாவுக்கரசருக்கு பேச்சு வந்தகதை நினைவுக்கு வருகிறதே. ஏசு துர்ஆவிகளை பன்றிக்குள் செலுத்தி கடலுக்குள் விரட்டினாரென்றால், இங்கே இந்து சமயத்தில், மதுரையில் நரிகள் பரிகளாயினவே. போதும்; சொல்லிக்கொண்டே போகலாம்.//

இம்மாதிரியான விடயங்களால்தானே, மதக் கலவரம் தூண்டிவிடப்பட முடியும்.

//அடுத்து,பக்தர்களுக்கு கடவுளர்கள் ‘காட்சி’தருவது (apparitions). “ Many mystics have visions, and the envisioned objects almost inevitably reflect the cultural background of the mystic. Protestants never envision the Virgin Mary, but Catholics do; Jews never envision the resurrected Jesus, but Christians do; Buddhists and Hindus envision divine messengers quite different from those encountered by Western mystics’(Reason and religion” An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp306 ). இவர் சொல்வது போல, அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் அந்தந்தக் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்; மாறி வருவதில்லை! ஆனால், எனக்கும் இப்படி ‘ஒரு காட்சி’ கிடைத்தது. அது பற்றிய விபரம் அறிய அங்கே போகவேண்டும்.//

கண்ணால் காண்பதெல்லாம் மாயையே!” இது எம் புரிதல். “உணர்வால் உணர்வதே இறைவன்(இன்பம்).”

//7.) நம் உலகம் சூரியக் குடும்பத்தில் ஒரு சிறிய பகுதி; இந்தச் சூரிய குடும்பமோ ‘பால் வீதி’யின் மிக மிகச் சிறிய பகுதி; இந்த பால் வீதியோ ஒரே ஒரு காலக்ஸி; இதுபோல் எண்ணிக்கையிலடங்கா காலக்ஸிகள். அப்படியென்றால், பரந்துபட்ட இந்த பிரபஞ்சத்தில் நம் உலகம் எவ்வளவு இத்தனூண்டு (insignificant)! ஆனால், பாருங்கள் எல்லா சமயங்களுமே anthropocentric-ஆக, மனித குலத்தை மட்டுமே கடவுள்கள் சுற்றி சுற்றி வந்ததாகப் பேசுவது,…அவர்களை மட்டுமே உய்விக்க அவதரித்தார்கள் என்பது…யோசித்துப் பாருங்களேன்..எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.//

மனிதனுக்கு மட்டும்தான் (குதற்கம்)பேசத் தெரியும்.

//8.) ‘Making of pudding is in the eating’ என்பார்கள். அம்மா செய்த சமையல் நல்லா இருக்கிற அன்னைக்கு சட்டி காலி. மாற்றியும் சொல்லலாம். சட்டி காலின்னா அன்னைக்கு அம்மா சமையல் டாப்! Process produces results; results prove the process. எல்லாம் வல்ல, நல்ல, கருணை நிறைந்த,அன்பே உருவான கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் உலகம் இப்படியா இருக்கும்? இல்லை..இல்லை..கடவுள் நல்லாதான் படைச்சார்; நானும், நீயும்தான் அல்லது, உன்னமாதிரி ஆளுங்களாலதான் உலகம் கெட்டுப் போச்சுன்னா அடிப்படை தப்பு இருக்கிறது அந்தக் கேள்வியில். “If this chaotic world is the creation of a god, it tells you that god had bungled! The theistic rationalists of the eighteenth century argued that when God created the world, he did either a perfect job or an imperfect job. If he did a perfect job, there was no need for him to interfere with the orderly workings of events within the world, since any deviation from perfection would be for the worse. If there was a need for him to suspend the laws of nature, this implied that he had bungled the job in the beginning. (Reason and Religion, pp 94)//

மனிதன் தன் உடலின் முதுகந்தண்டிலிருந்து வரும் விந்து சக்தியால் புணர்ச்சிக்குப்பின் குழந்தை உருவாகிறது. அதாவது முதல் மனிதன் இறைவனாகவும், அவனில் இருந்து பிரிந்து வந்தவர்கள் மனிதனாகவும் கருதப்பட்டனர்.

இறைவா, குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து)
பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது.
அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு
மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால்,
தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.”

//9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. மூட நம்பிக்கையோ, என்னவோ!!
NO RELIGION IS UNIVERSAL.
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.
நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் ‘சஞ்சரித்தார்கள்’? வடக்கே இமயம் கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் ‘அடுத்த நாடு’ இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று…)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?//

இஸ்ரேலில் தோன்றிய கிறித்துவ மதத்தினர் புலம் பெயர்ந்தனர். சென்றவிடமெல்லாம் அவர்களின் நம்பிக்கையைப் பரப்பினர். மற்ற மதத்தினர் புலம் பெயர்ந்தாலும் அதிக பரப்பளவு கடக்கவில்லையாதலால் அம்மதத்தினர் குறைவாக உள்ளனர். கடவுள் எங்கும் போவதில்லை. அந்த நம்பிக்கையை உடைய மனிதான் தான் இங்குமங்கும் சென்று தங்களின் நம்பிக்கையை (மதத்தை)ப் பரப்புகின்றனர். அதனால்தான் கிறித்துவம் எல்லா நாடுகளிலும் பரவியிருக்கிறது.

//மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.(Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves – perhaps our actual selves, perhaps our ideal selves – on the universe as a whole……. The image of God as a divine father has strong Freudian overtones”.)Reason and religion” An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285. இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles. என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.//

ஞானமறியா மக்களுக்குத் தெய்வம் இருப்பதைப் புரியவைக்கவே சிலை வடிக்கப்பட்டது. உருவ வழிபாடு தோன்றிற்று. இது பாமர மக்களைப் பொருத்தவகையில் சரி; ஞானப் பாதையில் செல்லுபவர்களுக்குத் தவறு.

சரியும் தவறும், அவரவர் நிலைக்குத் தகுந்தது.

செர்மானிய எழுத்தாளர்,”Erich von Daniken” இரு நூல்களை எழுதியுள்ளார். அவைகள், “CHARIOTS OF GOD”, “RETURN OF GODS”. இவ்விரு நூலிலும், விஞ்ஞானத்தில் பலபங்கு முன்னேறிய கிரகத்திலிருந்து அங்கு வசிப்பவர்கள் வந்தார்கள். அவர்கள் வந்த விமானத்தைப் நம்முடையவர்கள் புஷ்பக விமானமாகவும், நாம் படைத்த கடவுள்களின் வாகனமாகவும் மனதில்கொண்டு சிலை வடித்து வணங்கினர் எனவும், இன்னும் பலவும் எழுதியுள்ளார்.

ஆயினும் மனிதன், தன் மனதில் தோன்றியவற்றை, இறைத்தன்மயை, அதன் குணங்களை உருவகப்படுத்தி வடிக்கப்பட்டதே சிலை வடிவங்கள்.

//வாசிக்கும் நம்பிக்கயாளர்களுக்கு அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த ‘முடிவு’க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,……….

அப்படியே நீ சொல்வதுபோல மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்றால், அப்படித் தோன்றிய மதங்களின் நோக்கம் என்ன? அப்படிப் படைத்த நம் முன்னோருக்கு அதற்குரிய நோக்கம் என்ன? – என்பது உங்கள் கேள்வி.

பதில்: எனக்கும் தெரியாது. ஆயினும், இப்படி இருக்குமா?//

மதம் என்பது நம்பிக்கையே. ஆறு அறிவுடைய மனிதன் ஏழாம் அறிவு(ESP) என்ன எனக் கேட்பதற்கும், நீங்கள் கேட்டதைப்போல், “கடவுளை ஏன் மனிதன் படைத்தான்? மதங்களின் நோக்கம் என்ன?” கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் வின்னவெழுப்ப வேண்டும். அதைத் துருவிதுருவி analyse செய்யவேண்டும். அதன் விடை நிச்சயமாக அவர்களை நல்வழிப்படுத்துமென்பதே.

மதமெனும் நம்பிக்கையின் நோக்கம், அவர்கள் எழுதி வைத்துள்ள (இறைவனாழெழுதப் பட்டது அல்லஇஸ்லாம் தவிர) கருத்துக்களைப் படிக்கும் மக்களின் மனம் பக்குவமடைய வேண்டுமென்பதே. அதன் அடிப்படையில் மனிதன் சிந்திக்கத் தெளிவு பிறக்கிறது.

//1. Policing the society? ஒழுங்கா நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பார்கள். பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்றால்தான் ஒரு பயம் வரும். அந்த பயம் வரத்தான் புத்திசாலி முன்னோர்கள் சமயங்களை ஆரம்பித்திருப்பார்களோ? அதனால்தானோ எல்லா மதங்களும் கடவுளையும், தண்டனைகளையும் சேர்த்தே சொல்லி நம்மை மிரட்டி வைத்திருக்கின்றன?//

ஆமாம்.

//2. Psychotherapy? இது என் வாழ்க்கையில் நானே அனுபவித்தது. யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?

வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம் முழுமையாகச் சரணடைய ஒரு ‘இடம்’ வேண்டும்.(கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இதோ அந்த வரிகள் மனத்தின் வேதனையை அனுபவித்துச் சொல்லும் அந்தக் கவிதை வரிகள்:

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எவ்வளவு சரியான வரிகள். பல துயர நேரங்களில் இந்த மனித குலத்தின் மேல் வெறுப்பு வருவதில்லையா?

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே)

எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் உடனடியாக.

இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த ‘சுமைதாங்கித் தூண்கள்’ நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.//

THEY ARE ALL SHOLDERS TO CRY UPON”

//சிறு வயதில் கடவுள் பயம் தேவை மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த ‘வெளிச்சத்திற்கு’(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?

மனிதம் போதுமே!

இவர்களைக் கட்டாயம் நீங்கள் எல்லோரும் சந்திக்கணும்; இவர்களை ஈர்த்தது மதமா…மனிதமா…?//

வெளிச்சம் என்னும் ENLIGHTENMENT கிட்டிவிட்டால் மனு ஈசனாகிறான். அதுவரை மனுஷன்தான்.
ENLIGHTENMENT வரும்வரைதான் மனிதம் தேவை. அதன்பின் மனிதனுக்கு எல்லா நற்பண்புகளும் கிட்டிவிடும்.
******************* *******************

எம் புரிதல்:

என்னிடம் ஒரு நாத்திகனும், ஒரு ஆத்திகனும் வந்தனர்.
முதலில் நாத்திகன் கேட்டது,”கடவுள் உண்டா? இல்லையா?”. அதற்கு நான், “கடவுள் இல்லை” என்றேன்.
உடனே, ஆத்திகன்,”அன்று நான் கேட்டதுக்குக் கடவுள் உண்டுன்னு சொன்னீங்களே” என்றான்.

ஆமாம். உண்டு என்பவருக்கு உண்டு, இல்லை என்பவருக்கு இல்லை என்றேன். அதைத்தான் கவிஞர் கண்ணதாசன்,”உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை” எனப் பாடினார், என்றேன்.

கடவுள் என்றொரு உருவம் இல்லை. அவன் உருவிலி. அவன் சூனியம். அதுவும் “இருளில் சூனியம்.”
பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்து இராச்சியத்தை ஆளுபவன்.”
இறைமை, இறை சக்தி, இயற்கை, எனப் பல பெயர்கள் உண்டு. “அவரவர்க்கு அதது.

கடவுள் உருவிலி என்றீரே! அப்ப கடவுள்ன்னா என்ன? – இது அடுத்த வினா.

நம் உடலில் ஓடும் சீவன்தான் கடவுள்.
அதற்கு மதபேதம் இல்லை.

சீவன் பிரிந்தால் பிணம். அது ஞானவெட்டியான் இல்லை. சீவனைக் காண இயலாது. உணரத்தான் இயலும். அதனால்தான் கடவுளைக் காண முடியாது; உணர்ந்து பார் என்றனர். உணர வழி என்ன?
அதைத்தான் நூல்களாக இயற்றி வைத்து, அதனுள்ளே மர்மங்களாக ஒளித்து வைத்துள்ளனர். மறைக்கப் பட்டதால் மறை.

நான்கு நிலைகள்:
சரியை
கிரியை
யோகம்
ஞானம்.

பக்குவம் நான்கு:
அறிவு
உணர்வு
நினைவு
கருத்து

பக்குவ நிலையில் அறிவு நூலகளைப் படித்து, எது? எது? என்னென்ன? எனப் புரிந்து கொள்வதற்காகத்தான். அதுவே பக்தி மார்க்கம். மக்களில் பலர் இந்த நிலையிலேயே நின்றுவிடுகின்றனர். அடுத்து என்ன? என வினவுவதில்லை.

http://njaanamuththukkal.blogspot.com/2005/10/5.html

உணர்வு நிலைக்கு வர என்ன செய்ய வேண்டும்?

என்னுடைய வலைப்பூவில், “ஞானக் குறள்” என்று 310 குறள்களை விளக்க உரையுடன் தந்துள்ளேன். இயன்றால் இன்னும் எளிமைப் படுத்தித் தருகிறேன். அதில் கூறியுள்ள வழிகள்தான் அடுத்த 3 பக்குவ நிலைக்கும் வழிகாட்டு.

http://njaanakkural.blogspot.com/

இறுதியாக ஒன்று கூற விழைகிறேன். தங்களின் வினாக்கள் பலரைத் துயிலில் இருந்து எழுப்பிவிடும். அந்தத் தூண்டுகோலை இங்கு வீசியதற்கு நன்றி.