Tag Archives: மறப்பு

சிவ வாக்கியம் – 6

சிவவாக்கியர் பாடல்கள் – 6                                  ********************************************

ஞான நிலை

6.நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை

அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய்

யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே.

மாயை நினைப்பு, மறப்பு ஆகியவைகளாக இருக்கின்றது. அதை மாய்த்து நினைப்பது ஒன்றும் கண்டிலேன். நான் காண்பதெல்லாம் நீயே அல்லாது வேறு எதுவுமில்லை.

ஆதியாய், அனாதியாய், அகண்டமாய், அனைத்துமாய் இருக்கும் உனக்குள் நான், எனக்குள் நீ நிற்கும் வழிஎப்படி?

ஒளவைக் குறள் – (201-210)

3. தன்பால்
**********
21. குருவழி  (201-210)
***********************
201.தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்.

தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும்.

202.சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.

சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும்.

மணிவாசகப் பெம்மான் (திருவாசகம்):

“சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினை நின்றிருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையுமம் மலர்க்கேயாக்கி வாக்குன்மணி வார்த்தைக் காக்கி யைம்புலன்களார
வந்தனை யாட்கொண் டுள்ளே புகுந்த விச்சைமாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னை
தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச் சுடரே இரண்டுமிலி தனிய னேற்கே.”

203.குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.

ஞானாசிரியனால் திருவடி ஞானம் பெறாதோருக்கு சிவம் உருவற்று நிற்கும். அப்படியெனில், திருவடி ஞானம் பெற்று, முக்கலையொன்றித்து ஞானவினை செய்யும் தவசிகளுக்குத் தன் சிந்தையிலேயே உணர்வாய் நிற்குஞ் சிவம் என்பதாம்.

204.தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.

ஞானவினையின் மருமங்களையறிந்த ஞானாசிரியனின்  (சந்=ஞானஒளி; நிதி= புதைந்துள்ள மெய்ப்பொருள்; ஒளிமிகு பொருள்) சந்நிதி இல்லையெனில், வலையாகிய உலக மாயைகளில் அகப்பட்டு மானாகிய சீவன் அலைக்கழிக்கப்படும்.

மாணிக்கவாசகப் பெருமான்:

“உரியனல்லே நுனக்கடிமை யுன்னைப்பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேனாயே னின்னதென் றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோ னொருவன் கண்டு கொளென்றுன் பொய்கழலடி காட்டிப்
பிரியேனென்றென் றருளியவரும் பொய்யோ வெங்கள் பெருமானே.”

205.நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.

ஐயந்திரிபறக் கற்று அதன் வழி நிற்கும் ஞானாசிரியன் முறைப்படி சுட்டிவிளக்க, அதைச் சலனமில்லாது ஆற்றுபவனுக்குச் சிவம் பிரிவற்றிருக்கும்.

திருமந்திரம்:

“தொழிலறி வாளர் சுருதி கண்ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழிய றிவார் நல்வழி யறிவாள
ரழிவறிவார் மற்றையல்லா தவரே.”

தொழில் = ஞானவினைகள். சுருதி = மறை, ஆகமம்.
பழுது = குற்றம். வழியறிவார் = வழிபட அறிவார்.
அழிவறிவார் = அழிவினைச் செய்யும் வழி அறிவார்.

தமிழ் மறைகளையும், ஆகமங்களையும், கண்களாகக் கருதும், குற்றமற்ற சிவகுருவின் திருவடி சார்ந்து அவரை வழிபாடு செய்தலை அறிவோர்கள் வீடுபேறு அடையத்தக்க நன்னெறியாளர்கள். இந்த உண்மையை அறியாதவர்கள், பிறந்து இறந்து உழலும் அழிவு நெறியினையே அறிவர். ஆகவே, வீடுபேற்றுக்கு உரியவர் அல்லர்.

தாயுமானவர்:

“குருமொழியே மலையிலக்கு மற்றமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்.”

பட்டினத்தார்:

“குருமார்க்க மில்லாத குருடருடன் கூடிக்
கருமார்க் கத்துள்ளே கருத்தழிந்துகெட்டேனே.”

சீடாசாரம்:

“கட்டுண்ட கள்வன்றானே கட்டினை விட்டுக்கொள்வான்
விட்ட வேதனையைத்தீர்த்துவிடுவிப்பானொருவன்வேண்டு
மட்டமா சித்தியோக வறிவினா லறியலாமோ
தட்டடறப் பாசந்தீர்க்கத் தற்பர குருவே வேண்டும்.”