Tag Archives: மோட்சம்
ஞானக் குறள் – (1-10)
1. வீட்டுனெறிப்பால்
********************
1.மோட்சம் செல்லும் வழி (1-10)
*******************************
1.ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .)
அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.
வாசிட்டம் :
“அறியா வறிவை யறியாரே”
தேவபூசை கதை :
“தெய்வந்தானியாதென் றோதில், கேவலமே யரியல்ல, அரனல்ல, பூதவுடற் கிடைத்ததல்ல, வோவுமன மன்றடி முடியுமிலாச் செயப்படா உணர்வே தெய்வம்.”
திருமந்திரம் :
“தரணி சலங் கனல் காற்றத்த வானம்
அரணிய பானு வருந் திங்க ளங்கி
முரணிய தாரகை முன்னிய வொன்பான்
பிரணவ மாகும் பெரு நெறிதானே”
தரணி – நிலம். சலம் – நீர். கனல் – தீ. அரணிய – அழகிய.
அங்கி – சிவவேள்வித் தீ.
காட்டுத் தீ – ஆகவனீயம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.
வீட்டுத் தீ – காருகபத்தியம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.
பாட்டுத் தீ – தெக்கணாக்கினி, வேத அக்கினி மூன்றில் ஒன்று.
முரணிய – வலிமை மிக்க. பாட்டு – ஞானம்.
நிலம், நீர், தீ, காற்று, இவைகளுக்கு இடமளிக்கும் ஆகாயமாகிய வானம், சூரியன், சந்திரன், விண்மீன்கள், இவைகளின் சேர்க்கையால்(சந்தியால்) விளையும் சிவ வேள்வித் தீ ஆகிய ஒன்பதும் பிரணவம் எனப்படும் ஓங்காரத்துள்ளே உள்ள ஒளியாம். ஆதியெழுத்தும் ஓங்காரமே. அதுவே சிவபெருமானின் சார்புருவமாகும்.
2.பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தக்க அளவின்படி அன்னத்தில் கலக்கிறது. அந்த அன்னத்தினாலேயே, நாதபிந்து கலைகள் உண்டாகின்றன. நாதம் என்பது ஒலி, இந்திரியம் (சுக்கிலம், முட்டையாகிய அண்டம்). பிந்து என்றால் புள்ளி, விந்து.
திருமந்திரம்:
“விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதலுச்சி உள்ளே ஒளித்ததே.”
கணவனும் மனைவியும் கருத்தொருமித்து அன்புகொண்டு இன்புறும் வேளையில் யோனி விரிந்தது; அதனுள் லிங்கம் விழுந்தது. அதிலிருந்து உணர்வு கலங்கி ஒழுகியது விந்து. நுண்ணுடலில் தங்கியிருந்த ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் எனும் நுண்மையாகிய(கூர்மை, நுட்பம், நேர்த்தி) ஐந்து தன்மாத்திரைகளும், அறிதற்(அறிய உதவும்) கருவி ஐந்து செய்தற்(செய்ய உதவும்) கருவி ஐந்து ஆகப் பத்துடன் கூடிய மழையாகப் பொழியும் நீர் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும்(ஐந்து பொறிகள்) தோன்றின. புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.
ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தங்களுடைய கலைகளிலிருந்து பிறப்புக்கு வேண்டிய கலைகளைப் பிரித்து நாத சக்தியில் கலப்பதினால் பிறப்பு உண்டாகிறது.
3.ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
ஐம்பூதங்களின் சூக்கும சக்திகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியவைகள் மனத்தில் ஆசைகளோடு சம்பந்தப்படும்போது மனமானது சேறாகிவிடும். அதாவது பஞ்சதன்மாத்திரைகள் ஆசைகளோடு இணயும்போது நரகிற்கு இட்டுச்செல்லும்.
பஞ்சதன்மாத்திரைகள்: செவி, நாக்கு, கண், மூக்கு, தோல் என்னும் விண், வளி, தீ, நீர், மண், என்னும் பூதங்களின் குணங்களினின்று தனித்த குணங்களை உடைய மேற்படி பூதங்கட்குக் காரணமாயுள்ள – சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியன.
திருவாசகம்
**********
“வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க”
சலனமென்பது தோன்றவிருக்கும் நிலை. சலனமே பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம்.
சித்தமாகிய மனம் ஒரு தெளிந்த தடாகம். சேற்று நீர் இல்லை. அலை வீசவில்லை. அதனால் அடியில் உள்ள மண் தரை தெரியும். மனிதனின் கண் திறந்ததுமே மனம் விழிக்கிறது. கண்போன போக்கில் மனம் செல்கிறது. அதனால் எண்ணங்கள் கொப்பளித்து ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்புகிறது. தடாகம் குழம்பி விடுகிறது.
எண்ணங்களே பிறவிக்கு மூல காரணம். அதனால் பிறவிகள் பெருகுகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன. அதனால் எண்ணங்களின் நொதிப்பு(fermentation) நீங்கிக் கொஞ்சம் தெளிவு கிட்டுகிறது. பின் எண்ணங்களின் உற்பத்திசாலையாம் மனதின் கொதிப்பு குறைகிறது.
மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது.