Tag Archives: வரலாறு

பிரபுலிங்க லீலை-1.2-நூலாசிரியர் வரலாறு

பிரபுலிங்க லீலை
********************

நூலாசிரியரின் வரலாறு
**************************

தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவர் ஆண்டுதோறும் தவறாது திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் கண்டு தொழுதுவரும் தகையாளர். திருவண்ணாமலையார் திருவருளால், சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் மக்கட்செல்வத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். மக்களின் கல்விப்பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார்.

பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலையெய்தி, ஆங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் “சோணாசலமாலை” என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார்.

பின்னர், சிவப்பிரகாச அடிகளார் தமிழ்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்கள் கற்பான்வேண்டி, தணியா வேட்கையுடன் வடநாட்டுக்குத் தன் தம்பியருடன் சென்று வாலிகண்டபுரத்துக்குத் தென்பாலுள்ள துறைமங்கலம் அடைந்து ஆங்கோர் நந்தவனத்தில் சிவவழிபாடு செய்யுங்காலை அவ்வூரினதிபதியும் கல்வி கேள்விகளில் சிறந்தவருமான அண்ணாமலை ரெட்டியார் அங்கு வந்து வணங்கி நின்றார்; அடிகளின் நல்லருள் பெற விழைந்தார். அடிகளை அங்கேயே தங்கியிருந்து அருட்பணிபுரிதல் வேண்டுமென இறைஞ்சியதால், அடிகளாரும் ஒப்பினார்.