Tag Archives: வழிபாடு

19.தெய்வ வழிபாடு – மூலம் எது?

தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.

“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”

எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர். உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே
மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில்
மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். இவர்களைக் காவல் தெய்வமாக்கினர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.

சைவ நெறிகள் குலதெய்வ வழிபாட்டை எவ்வாறு அணுகுகின்றன?

சைவ நெறிகளில் குலதெய்வ வழிபாட்டைப் பற்றி ஏதுமிருப்பத்தாகத் தெரியவில்ல. சைவம் சிவத்தையே பாடித் துதிக்கிறது. குலதெய்வங்களைச் சிலர் சிறுதெய்வங்கள் என்கின்றனர். சிறு தெய்வங்கள் என்றால் பொருள் என்ன?

முதலில் தெய்வம் என்றால் என்ன? தெய்வம் மக்களுக்கு எதற்காக வேண்டும்? என்னும் வினாக்களுக்கு விடையறிதல் வேண்டும்.

என்பத்துநான்கு நூறாயிரம் சீவராசிகளில், மனிதனுக்குத்தான் எல்லாம்
தெரியும். தனக்கு வேண்டிய உணவைத்தேடிக்கொள்ள, நோய் வந்தால்
போக்கிக்கொள்ள, கல்வி கற்க ஆகிய எல்லாவற்றையும் செய்ய மனிதனால் முடியும்.

அப்படியிருக்க, இவனுக்குத் தெய்வம் எதற்கு? பணம் சம்பாதிக்கவா? பணத்தை உண்டாக்கியவனே இவன்தானே? விந்து வெளியேறி நாறிச் செத்தால், நரகமென ஒன்றிருந்தால், அங்கே கற்பகோடிகாலத்திற்கும் அவத்தைப்பட வேண்டியதுதான். அதற்காகவா இறைவன் மனுவுக்கு அறிவைக் கொடுத்தான்? இதற்காகவா வேதங்களும் கலை ஞானங்களும் இவனுக்கு இறக்கப்பெற்றது? எந்தக் குறை இருப்பினும்
பரவாயில்லை. ஏழையாயினும், பிள்ளைப்பேறு அற்றவனாயினும், நோய்நொடியில் அவத்தையுருபவனாயினும், அவன் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. வேறு எது இல்லா விட்டாலும் தெய்வம் கட்டாயம் அவனுக்கு வேண்டும். எதற்காக? எமனிடம் போராடிப் பிறவிப் பிணியைப் போக்கவே இறைவன் வேண்டும். எமபடரை நீக்கிச்
சிவமயமாக்கும் (விந்தடங்கிச் சாவதே சைவம்) ஒரு செயலுக்குத்தான் தெய்வம் தேவை. சாகாக் கலையாகிய பிரும்மவித்தை யார் கையிலிருப்பினும் அவரே தெய்வம். அதுவே நிசமான செயல்.

ஆக, குலதெய்வம், தெய்வமா? இல்லையா? என முடிவெடுப்பது உங்கள் கையில். பின்னர் வந்த சிலர் சாங்கியங்களுக்கு முக்கியத்துவம் ஈந்தனர். அவர்கள்தான், பெரிய தெய்வம், சிறு தெய்வம் எனப் பாகுபாடு செய்தனர்.

பிரும்மவித்தை ஒன்றுதானே? அதில், பெரியது சிறியது எனப் பாகுபாடு உண்டோ? இல்லையே. அப்படியிருக்க, பெரிய தெய்வம், சிறு தெய்வம் எனக்கூறல் நியாயமா? தெய்வங்களுக்குச் சிலை வடிப்பதுண்டா? இதில் சரி தவறு என்று உண்டா?

சிலைவடித்ததால்தானே, நாம் குல தெய்வங்களுக்குச் சிலை வடிப்பதுண்டா? என வினாவெழுப்புகிறோம். ஞானமறியா மக்களுக்குத் தெய்வம் இருப்பதைப் புரியவைக்கவே சிலை வடிக்கப்பட்டது. உருவ வழிபாடு தோன்றிற்று. இது பாமர மக்களைப் பொருத்தவகையில் சரி; ஞானப் பாதையில் செல்லுபவர்களுக்குத் தவறு. சரியும் தவறும், அவரவர் நிலைக்குத் தகுந்தது.

குலதெய்வங்களில் எந்த வடிவம் அதிகமாகக் காணப்படுகிறது: ஆணா, பெண்ணா?

எமக்குத் தெரிந்தவரை, பெண் தெய்வங்கள்.

குலதெய்வங்களை வழிபட்டு அருள் பெற்றோர் வரலாறு உண்டா?

வரலாறுகள் ஏராளம். கதைகள் சொல்லுவதில் தமிழர்கள் நிபுணர்கள்.

வழிபாட்டிற்கு அவரவர் மனம்தான் காரணம். குலதெய்வத்தை வழிபட்டேன்; பலன் கிட்டியது என்றால், நல்லது; மனம் திருப்தி அடைந்து விட்டது; பலன் கிட்டாதபோது, குலதெய்வம் கோபமாக உள்ளது; சாந்தி செய்ய வேண்டும்; எனும்போதுதான் மடமை வெளிப்படுகிறது.

எம்மைப் பொருத்தவரையில், தெய்வம் ஒன்றே; பெரியது, சிறியது அதில்
கிடையாது; தெய்வம் கோபம் கொள்ளுமெனில், நம்மைச் சுற்றி நாம் அனுபவிக்க இத்தனைகோடி இன்பங்களை அளித்தது ஏன்? தெய்வம் கருணைக் கடல். நாமே, இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்திடு எனக் கூறும்போது, நம்மைவிடப் பெரியவன், நம்மைப் படைத்தவனுக்குத் தண்டிக்க மனம் வருமா?