Tag Archives: வாயு

சிவ வாக்கியம் – 3

சிவவாக்கியர் பாடல்கள் – 3                                    ********************************************

3.உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்

அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே.

கருத்தரித்து உருவாக வெளிவரக் காரணமான நாடியில் ஒடுங்கக் கூடிய உயிர்ப்பு சக்தியான வாயுவை, அருள் உடைய சிவபாதமாம் வலக்கண், சக்தி பாதமாம் இடக்கண் ஆகியவற்றின் உதவியால் கருத்தினால் (ஆணி அறைவதுபோல) இருத்திக் கபாலக் குகைக்குள்ஏற்ற முடிந்தவர் கிழவன் ஆனாலும் குமரன் ஆவான். உடலும் பொன்போல் ஒளிவீசும்.

ஒளவைக் குறள் – (31-40)

1. வீட்டுனெறிப்பால்
*********************
4. நாடி தாரணை (31-40)
*************************
31.எழுபத் தீராயிர  நாடி யவற்றுள்
முழுபத்து  நாடி  முதல்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்” என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.
நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

தலயில் …………. 7,000
வலது காதில் ……. 1,500
இடது காதில் …….. 1,500
வலது கண்ணில் … 2,000
இடது கண்ணில் …. 2,000
மூக்கில் …………. 3,330
பிடரியில் ………… 1,000
கண்டத்தில் ……… 1,000
வலது கையில் ……. 1,500
இடது கையில் ……. 1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில் 8,990
பிடரியின் கீழ் ……… 8,000
விலாவில் ………… 3,000
கால்களின் சந்தில் … 8,000
பீசத்தின் மேல் …….. 2,000
பீசத்தின் கீழ் ……….. 2,000
பாதத்தில் …………. 1,000
பிடரிக்குப் பின்னால் 3,680
கோசம் …………… 13,000
***********
ஆக நரம்புகள் ……. 72,000
***********

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை – வாத நாடி

பிங்கலை – பித்த நாடி

சுழிமுனை – சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி.

சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை – அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை – உள்நாக்கு நரம்பு

புருடன் – வலக்கண் நரம்பு

காந்தாரி – இடக்கண் நரம்பு

அத்தி – வலது காது நரம்பு

அலம்புடை – இடக் காது நரம்பு

சங்கினி – ஆண்(பெண்) குறி நரம்பு

குகு – குத நரம்பு

ரக்தவியானன் – இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை

வெளித் தள்ளும் நரம்பு.

32.நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.

நரம்பென்று   அழைக்கப்படும்   இந்த நாடிகளுக்கு எல்லாம் சக்தியைக் கொடுக்கும் நாடி ஒன்றுண்டு.

33.உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.

(உந்தி = நாபியென்பர் சிலர். ஆயினும் உந்தியென்பது  உன்+தீ என் விரிவடையும். உன்னுடைய (ஆன்ம)தீயே உந்தி.   உறு = பொருந்திய;
பரிந்து = தாயன்புடன் பரிந்து; பந்தித்து= உறுதியாக நிலைத்து நின்று; )

உந்தி, நாபி, உந்திக்கமலம் எனும் பதங்கள் குறிப்பவை ஓங்காரத்தின் மத்திய பகுதியாகிய மணிபூரகமே. உந்தி முதல் உச்சிவரை உறுதியாக நிலைத்து நிற்பது ஆதி நாடியே. இதைக் குண்டலினி என்பர்.

34.காலொடு கையி  னடுவிடத்  தாமரை
நூல்போலு  நாடி நுழைந்து.

இவ்வோங்கார ஆதி நாடியானது, கைமுதல் கால்வரை தாமரை நாளத்தின் நூல்போல் உள்நுழைந்து பரவியிருக்கின்றது.

வசிட்டக்காரர் :

“அறவிந்தவளைய நூலொன்றைக் கூறோ ராயிரமிட்டதிலொரு கூறாப்பென்றாலுந் தறமொவ்வாதறச் சிதறியுண்டாய் நின்றுந்தாக்கி யறிவரிதவற்றின் கதியின் றன்மை.”

இவ்விடத்து கதி என்பதை மூச்சோட்டம் எனக்கொள்வர் ஆன்றோர்.