Tag Archives: விவேக சிந்தாமணி

யாருக்குப் பெண் கொடுக்கலாம்?

விவேக சிந்தாமணி 2.44
**************************
புரைதபு குணனுஞ் சீலமும் வனப்பும்
பூரண வாயுளுந் துப்புங்
கரையில் விற்பனமும் பாலனம் புரியுங்
கருத்தருங் குறைவிலாதாக
விரவு செல்வமுமா மெண்வகையுடைய
வாடவர் விருப்புறு வண்ணம்
பரவிநின் றவர்க்கு மகட்கொடை யுதவல்
பருணிதர் கடமைய தாமால்.

புரைதபு – குற்றம் நீங்கிய
குணனும் – நற்குணமும்
சீலம் – ஒழுக்கம்
பூரணம் – நிறைந்த
துப்பு – உடல் வலிமை
கரையில் – எல்லை இல்லாத
விற்பனம் – கல்வியில் தேர்ச்சி
பாலனம் – எவ்வுயிரையும் தன் உயிர்போல் நடத்துவது
பரவி – துதித்து
பருணிதர் – அறிவுடையோர்

ஒருவன் குற்றமற்ற குணம் இருந்தால் பெண்ணுக்கு ஏற்றபடி நடந்து கொள்வான். நல் ஒழுக்கம் இருந்தால் பெண்ணை ஒழுங்காக நடத்துவான். அழகும், நிறைந்த ஆயுளும் உடையவனாகில் பெண் சுமங்கிலியாய் வாழ வாய்ப்பு உண்டு. வலிமை உடையவனானால் பெண்ணுக்குப் பாதுகாப்புடனும் வலிமையாய்க் குடும்ப காரியங்களை நடத்துவதால் பெண்ணுக்கு மகிழ்ச்சியைத் தருவான். கல்வி அறிவு உடையவனாயிருந்தால் தனக்கும் தன் மனைவிக்கும் புகழ் சேர்ப்பான். எவ்வுயிரையும் தன் உயிர்போல் நடத்துங் குணமிருந்தால் மனைவியை அன்புடன் வைத்திருப்பான். செவந்தனாக இருந்தால் அவனின் மனைவி எல்லா இன்பங்களையும் அநுபவிக்க முடியும்.

ஆகவே ஒருவனுக்குக் குற்றமற்ற குணம், நல் ஒழுக்கம், கல்வி அறிவு, அழகு, நிறைந்த ஆயுள், உடல் வலிமை, கருணை, செல்வம் ஆகிய இந்த எட்டுவகை குணம் இருந்தால் அவனுக்குத் தம் மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சிறந்ததாம்.